கடலூரில் ஆளுநருக்கு எதிராக திமுக, விசிக கருப்புக்கொடி போராட்டம்!

கடலூரில் தூய்மைப்பணி ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.கவினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.

அப்போது பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அதிகார வரம்பை மீறி ஆளுநர் ஆய்வுகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார். “கடலூருக்கு வந்து குப்பைகள் அகற்றும் பணியை ஆளுநர் பார்வையிடத் தேவையில்லை. சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தான் அனைத்து குப்பைகளும் இருக்கின்றன” என்றார் அவர்.

ஆளுநர் கடலூரைவிட்டுச் செல்லும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் செல்லும் வழியில் கருப்புக் கொடி காண்பித்து புதுச்சேரி – கடலூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்திலும் திமுக, விசிக ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, இந்த கருப்புக்கொடி போராட்டத்தால், கடலூர் பேருந்து நிலையத்தில் நடத்த இருந்த தூய்மை இந்தியா திட்டப் பணி ஆய்வை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கைவிட்டார். மாற்று வழியில் வண்டிபாளையம் சென்ற அவர், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.