“சபரிமலை பிரச்சனையில் நான் கேரள முதல்வர் பக்கம் நிற்கிறேன்!” – விஜய் சேதுபதி
சபரிமலை கோயிலுக்கு அனைத்துப் பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில அரசு அறிவித்தது. ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளும், எதிர்கட்சியான காங்கிரசும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தின.
இந்த எதிர்ப்புகளை மீறி கடந்த ஜனவரி 2ஆம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனை வழிபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விவகாரம் கேரளாவில் தற்போது வரை கடும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் படபிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புக்கு இடையே அளித்த பேட்டியில், சபரிமலை விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:
ஒரு ஆணாக வாழ்க்கை நடத்துவது மிகச் சுலபம். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கினால் பெண்கள் வலி அனுபவிக்க வேண்டும். மாதவிலக்கு தூய்மையானதல்ல என்று யார் சொன்னது? உண்மையில் அது மிகவும் புனிதமானது. சபரிமலை பிரச்சினையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன்.
இவ்வாறு விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
இவரது இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கமெண்டுகள் பதிவிடப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.