“என்னை விட்டால் யாருமில்லை… கண்மணியே உன் கை அணைக்க…!”
ஈழத்தமிழின அழிப்புக்கு துணைபோன காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அக்கட்சியுடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளான திமுக, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரசுடன் கைகோர்க்கிறது.
இது குறித்து திமுக மூத்த தலைவர் ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறும்போது, “இம்மாத இறுதியில் தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் தேதி தொடர்பான அறிவிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி குறித்து எங்களுடன் பேச காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
“கூட்டணி தொடர்பாக பேசுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தமிழகம் வரவிருக்கிறார். அவர் தமிழகம் வரும் தேதி உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், வரும் 15ஆம் தேதி அவர் இங்கு வர அதிக வாய்ப்புள்ளது.
“இப்போதைக்கு திமுக – காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும் தொகுதி உடன்பாடு குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை.
“தேமுதிக தனது கூட்டணி முடிவை இன்னும் தெரிவிக்காததால் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை இப்போதைக்கு நடைபெறாது” என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 25 தொகுதிகளை தி.மு.க ஒதுக்கும் என்று அதிகாரபூர்வமற்ற தகவல் கூறுகிறது.