எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை இயக்கிய திருலோகசந்தர் மரணம்

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர், சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86

எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா,’ சிவாஜிகணேசன் நடித்த ‘தெய்வமகன்,’ ‘பாபு,’ ‘பாரதவிலாஸ்,’ ‘அவன்தான் மனிதன்,’ ரஜினிகாந்த் நடித்த ‘வணக்கத்துக்குரிய காதலியே’ மற்றும் ‘ராமு,’ ‘பத்ரகாளி,’ ‘வீரத்திருமகன்’ உள்பட தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் 70 படங்களை இயக்கியவர், ஏ.சி.திருலோகசந்தர்.

நடிகர் சிவக்குமாரை ‘காக்கும் கரங்கள்’ படத்திலும், நடிகை சச்சுவை கதாநாயகியாக ‘வீரத்திருமகன்’ படத்திலும் அறிமுக செய்தவர் ஏ.சி.திருலோகசந்தர் தான்.

இவருடைய 2 கால்களிலும் திடீரென்று நோய் தொற்று ஏற்பட்டது. அது உடலில் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், அவருடைய உடல்நலம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. அவரால் நடக்க முடியவில்லை.

சிகிச்சைக்காக சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களுக்கு முன்பு அவர் உடல்நிலை மோசமானது. உணர்வுகளை இழந்தார்.

அவருடைய மகன் பிரேம் திருலோக் கடந்த 5ஆம் தேதி, அமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார். அந்த தகவல்கூட தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஏ.சி.திருலோகசந்தர் மயங்கிய நிலையில் இருந்தார். இன்று  பிற்பகல் 2-45 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையிலேயே மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் சென்னை கானத்தூரில் உள்ள மகன் ராஜ் திருலோகசந்தர் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பட அதிபர் ஏவி.எம்.சரவணன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும், ஏராளமான பொதுமக்களும் ஏ.சி.திருலோகசந்தர் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

ஏ.சி.திருலோகசந்தரின் இறுதிச்சடங்கு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. மரணம் அடைந்த ஏ.சி.திருலோகசந்தருக்கு வயது 86. அவருடைய மனைவி பாரதி, 7 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இவர்களுக்கு ராஜ்சந்தர், பிரேம் திருலோக் என்ற 2 மகன்கள். அவர்களில் பிரேம் திருலோக் புற்றுநோயினால் மரணம் அடைந்து விட்டார். மல்லி சீனிவாசன் என்ற ஒரே ஒரு மகளும் இருக்கிறார்.