ரஜினிக்கு ’தாதா சாகேப் பால்கே’ விருது: மோடி அரசின் அறிவிப்பில் உள்நோக்கம்?

நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்திய ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ”இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த விருதினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும்  மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான ’தாதா சாகேப் பால்கே’ விருது பெறும் ரஜினிக்கு இந்திய ஒன்றிய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி, பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எனினும், மோடி அரசின் இந்த விருது அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் இருக்கக் கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். “தாதா சாகேப் பால்கே விருதுக்கு முற்றிலும் தகுதியானவர் தான் ரஜினி. ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், ரஜினிரசிகர்களை பாஜக – அதிமுக கூட்டணி பக்கம் ஈர்ப்பதற்காக இந்த விருது  அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது என நம்ப இடமிருக்கிறது. இதே அரசியல் காரணத்திற்காக 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் மோடி ரஜினியின் வீடு தேடிச்சென்று டீ குடித்து வந்தது நினைவுகூரத்தக்கது” என்கிறார்கள் அவர்கள்.

அவர்களின் சந்தேகம் நியாயம் தானே! அரசியல் காரணம் இல்லை என்றால், வாக்குப்பதிவு முடிந்தபிறகு ஏப்ரல் 7ஆம் தேதி விருது அறிவிப்பை வெளியிட்டிருக்கலாமே? அதற்குள் குடியா மூழ்கிப்போய்விடும்?

Read previous post:
0a1b
”வெற்றி மாறனை போல மாரி செல்வராஜையும்  பிடித்து வைத்துக்கொள்ள ஆசை!” – கலைப்புலி எஸ்.தாணு

தனுஷ் நடிக்கும் ’கர்ணன்’ படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது . இந்த படத்தின்

Close