காவிரி பிரச்சனைக்காக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது”: செயற்குழு முடிவு!

“சௌத் இண்டியன் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்” என தூய தமிழில் (!) பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் “தென்னிந்திய நடிகர் சங்க”த்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் அதன் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காவிரி பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவு தெரிவித்தும், காவிரி விவகார போராட்டத்தின்போது கன்னட நடிகர்கள் பேசிய பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேநேரத்தில், காவிரி பிரச்சனைக்காக சௌத் இண்டியன் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் சார்பில் போராட்டம் நடத்துவது இல்லை என்றும் இதில் முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்துக்குப்பின் விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவிரி நீர் விவகாரத்தில் கன்னட நடிகர்கள் சிலர் தமிழக முதல்வரை கொச்சைபடுத்தும் வகையில் பேசியும், உருவ பொம்மையை கொளுத்தியும் உள்ளனர். இதை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உதவிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எங்களது சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

Read previous post:
0a1e
நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் திடீர் நீக்கம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து அதன் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் திடீரென தற்காலிக நீக்கம்

Close