கேப்டன் மில்லர் – விமர்சனம்

நடிப்பு: தனுஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், அதிதி பாலன், ஜெயபிரகாஷ்,  இளங்கோ குமரவேல், காளி வெங்கட், ஜான் கொக்கன், விஜி சந்திரசேகர், அப்துல் லீ மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: அருண் மாதேஸ்வரன்

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: சித்தார்த்தா நுனி

படத்தொகுப்பு: நாகூரான்

தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்

தயாரிப்பாளர்கள்: செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்

வழங்குபவர்: டி.ஜி.தியாகராஜன்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அகமது & சதீஷ் (எய்ம்)

கேப்டன் மில்லர். வீரம் செறிந்த தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென்றோர் தனியிடம் பிடித்திருக்கும் மாவீரன் கேப்டன் மில்லர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படையைச் சேர்ந்த கரும்புலி அவன். சிங்கள ராணுவ முகாமுக்குள் துணிச்சலுடன் நுழைந்து, வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, தன்னுயிரை தியாகம் செய்து, 40 சிங்கள ராணுவத்தினரை கொன்றொழித்த காவிய நாயகன். அவனது வாழ்க்கை வரலாற்றுக்கும், அவன் பெயர் தாங்கி வெளிவந்திருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; என்றபோதிலும், அவனது வீரத்தை, நெஞ்சுரத்தை போற்றுவதற்காகவோ, என்னவோ, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தன் படத்துக்கு அவன் பெயரை சூட்டியிருக்கிறார்.

0a1b

’கேப்டன் மில்லர்’ – அரசியல் படம். அருமையான, அவசியமான அரசியல் படம். பிரச்சார நெடி இல்லாத, அழகியலுடன் கூடிய அற்புதமான அரசியல் படம். அது என்ன அரசியல்? என்பதிலிருந்து நம் பார்வையை முன்வைக்கத் தொடங்குவோம்…

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, நாட்டு விடுதலைக்காகத் தீவிரமாகப் போராடிய பெருந்தலைவர்கள், இங்கு பல நூறு ஆண்டுகளாக கொடூரமாகக் கோலோச்சும் சாதியாதிக்கத்தைக் கண்டுகொள்ளவில்லை; அல்லது அதை இரண்டாம்பட்சமாகக் கருதினார்கள். அதுபோல், சாதியாதிக்கத்தை எதிர்த்து சமூகநீதிக்காக தீவிரமாக களமாடிய பெருந்தலைவர்கள், கல்வி – வேலைவாய்ப்பில் ஆங்கிலேயர்கள் வருண / சாதிய பாகுபாட்டை அடிப்படை அளவுகோலாகக் கொள்ளாமல் அனைத்து இந்தியர்களையும் சமமாகப் பார்க்கிறார்கள் என்பதை முற்போக்கு அம்சமாகப் பாவித்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடூரச் சுரண்டலை கண்டு கொள்ளவில்லை; அல்லது அதை இரண்டாம்பட்சமாகக் கருதினார்கள். ஒருவேளை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், சாதியாதிக்கத்தையும் ஒருசேர எதிர்க்கும் போராளிகள் தோன்றி, அனைத்து சுரண்டல்கள் மற்றும் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுவிக்கும் முழு விடுதலைக்கான போரை முன்னெடுத்திருந்தால், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறும், சுதந்திர இந்தியாவின் சமூக அமைப்பும் புரட்சிகரமானதாக, மிக மிக முற்போக்கானதாக இருந்திருக்கும். இந்த அரசியலை சில காட்சிகளில் நேரடியாகவும், சில காட்சிகளில் மறைமுகமாகவும் பேசும் நல்ல படமாக வந்திருக்கிறது ‘கேப்டன் மில்லர்’.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்த சமஸ்தானத்தின் மலையடிவார கிராமம் ஒன்றில் நாயகன் அனலீசன் (தனுஷ்) தனது அம்மா பேச்சியம்மாவுடன் (விஜி சந்திரசேகர்) வாழ்ந்து வருகிறார். சமஸ்தான அதிபதி ராஜாதிபதியின் (ஜெயபிரகாஷ்) சாதியாதிக்கத் திமிர் காரணமாக தீண்டாமைத் துயரை அனுபவிக்கும் அக்கிராம மக்கள், அவர்கள் கட்டிய கோயிலுக்குள்ளேயே கூட நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

இத்தகைய சாதி இழிவுகளால் மனம் புண்பட்டிருக்கும் அனலீசனை, அனைத்து இந்திய சிப்பாய்களையும் மரியாதையுடன் சமமாக நடத்தும் பிரிட்டிஷ் ராணுவம் ஈர்க்கிறது. சாதியாதிக்கவாதிகள் தங்களை செருப்பு போடவே அனுமதிக்காத நிலையில், பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தால் அங்கு தங்களுக்கு பூட்ஸ் கொடுத்து போட வைத்து அழகு பார்க்கிறார்கள் என நினைத்து பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருகிறார். அங்கு தான் அவரது பெயர் ‘கேப்டன் மில்லர்’ என மாற்றப்படுகிறது.

ஆனால், நாட்டின் விடுதலைக்காக அறவழியில் போராடுபவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்குமாறு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஆணை பிறப்பிக்கையில், அதை ஏற்க கேப்டன் மில்லரின் மனம் மறுக்கிறது. எனினும், பணி நிர்பந்தம் காரணமாக அவரது கையாலேயே அவரது மக்களை சுட்டுக்கொல்ல வேண்டியதாகி விடுகிறது. இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அனலீசன், பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்து வெளியேறி, சொந்த கிராமத்துக்குத் திரும்புகிறார். ஆனால் அவரது மக்கள் அவரை “கொலைகாரன்” என்று தூற்றி, விரட்டியடிக்கிறார்கள்.

பின்னர் கொள்ளைக் கூட்டம் ஒன்றில் இணையும் கேப்டன் மில்லர், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் மூலம் சாதியாதிக்க சமஸ்தான அதிபதிக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் எப்படி கொடுங்கனவாக மாறுகிறார்? இவ்விரு தீய சக்திகளையும் ஒருசேர எதிர்க்கும் அவர், எத்தகைய ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்? தன் சொந்த மக்களை சாதிய அடிமைத்தளையிலிருந்து மீட்டு, அவர்களை அவர்களது கோயிலுக்குள் நுழைய வைக்க எத்தகைய வழிமுறைகளைக் கையாளுகிறார்? எனபன போன்ற கேள்விகளுக்கெல்லாம் போர்க்கள அதிரடி வெடிச்சத்தங்களுடன் விடை அளிக்கிறது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மீதிக்கதை.

0a1c

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், சமஸ்தான அதிபதியின் சாதியாதிக்கத்தையும் ஒரு சேர எதிர்க்கும் அனலீசன் என்ற கேப்டன் மில்லர் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். முதலில் அடிமைச் சாதியைச் சேர்ந்த கிராமத்து இளைஞராக, அடுத்து பிரிட்டிஷ் ராணுவ வீரராக, பின்னர் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவராக, அதன் பின்னர் தீய சக்திகளுக்கு எதிராக ஆயுதப்போர் தொடுக்கும் போராளியாக… பல பரிமாணங்கள் கொண்ட, உணர்ச்சிகரமான இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, வித்தியாசமான வெவ்வேறு கெட்டப்-களில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸான ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் அட்டகாசமான உடல்மொழியும், உறுதிப்பாடும் அபாரம். கொண்டாடத் தக்க தனது முதிர்ச்சியான நடிப்பால், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதி வேடத்தில் ‘கர்ணன்’, ‘அசுரன்’ வரிசையில் ஒரு படி முன்னேறி உயர்ந்து நிற்கிறார். சிறந்த நடிப்புக்கு நிறைய விருதுகள் அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். பாராட்டுகள் தனுஷ்.

நாயகி வேல்மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியங்கா மோகன் – பெரும்பாலான மாஸ் ஹீரோ படங்களில் உப்புக்குச் சப்பாணியாக ஹீரோயின்கள் வந்துபோவது போல் இல்லாமல் – இந்த படத்தில் அழுத்தமான போராளி வேடத்தில் வருகிறார். துப்பாக்கி பிடித்த கையுடன் கதையை நகர்த்துபவராக வரும் அவர், தன் நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

செங்கோலன் என்ற கதாபாத்திரத்தில் சிவராஜ்குமாரும், ரஃபி என்ற கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷனும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் வரும் காட்சிகள் குறைவு என்றாலும், அக்காட்சிகளில் பார்வையாளர்களின் அப்ளாஸை அள்ளுகிறார்கள்.

கண்ணையா என்ற கதாபாத்திரத்தில் வரும் இளங்கோ குமரவேலும், கனகசபை என்ற கதாபாத்திரத்தில் வரும் காளி வெங்கட்டும் பாத்திரம் உணர்ந்து அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சமஸ்தான அதிபதி ராஜாதிபதியாக வரும் ஜெயபிரகாஷும், சேனாதிபதியாக வரும் ஜான் கொக்கனும் சூதும் வஞ்சகமும் ததும்பும் வில்லன்களாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நாயகனின் அம்மா பேச்சியம்மாவாக வரும் விஜி சந்திரசேகர், சகுந்தலாவாக வரும் அதிதி பாலன், செம்பட்டை என்ற ஸ்டீபனாக வரும் அப்துல் லீ, தென்பசியாராக வரும் நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையையும், நம் மண்ணில் காலம் காலமாக நிலவும் சாதிய ஒடுக்குமுறையையும் ஒரு சேர கொண்டுவந்து, அதை எளிய ரசிகனும் புரிந்துகொள்ளும் விதத்தில் காட்சியாலும், வசனத்தாலும் ஜனரஞ்சகமாக கட்டமைத்து, பார்வையாளனை சீட்டின் நுனியில் உட்கார வைத்து, தொய்வின்றி, விறுவிறுப்பாக கதையை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். கதைக்கருவின் கனம் நீர்த்துப்போய் விடாமலும், அதே நேரத்தில் தனுஷ் ரசிகர்கள் கண்டு மகிழத்தக்க விதத்திலும் திரைக்கதை அமைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். ”அடிமையாய் வாழ்வதை விட ஆயுதம் ஏந்தி போராடி வெல்லலாம்” என்ற தமிழீழ தேசியத் தலைவரின் சத்தியமொழியை ஆணித்தரமாக நிறுவியதற்காக இயக்குநருக்கு பாராட்டுகள். ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து தமிழ் திரையுலகம் காத்திருக்கிறது. சீக்கிரம் கொடுங்க!

மதன் கார்க்கியின் வசனம், சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடலிசை மற்றும் பின்னணி இசை, டி.ராமலிங்கத்தின் கலை இயக்கம், திலீப் சுப்பராயனின் சண்டைப் பயிற்சி, நாகூரானின் படத்தொகுப்பு உள்ளிட்ட நேர்த்தியான தொழில்நுட்பங்கள் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘கேப்டன் மில்லர்’ – தனுஷ் ரசிகர்களுக்கும், ஆக்‌ஷன் பிரியர்களுக்கும் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும் படம்! கொண்டாடலாம்!