“வஞ்சத்தில் வீழ்ந்தாயடி நமீ… வஞ்சகி ‘காயூ’வடி..!”

விஜய் டிவி பெரிதும் நம்பியது நமீதாவைத் தான். ஓவியாவைக்கூட பத்தோடு பதினொன்றாக அறிமுகப்படுத்தியவர்கள், நமீதாவை ஸ்பெஷல் கண்டெஸ்ட்டாக களமிறக்கினார்கள்.

கவர்ச்சி நடிகையாக பெயர் எடுத்த தான், அதையும் தாண்டி ஒரு நல்ல மனுஷி என்று நிரூபிப்பது தான் நமீதாவின் நோக்கமாக இருந்தது. இதுவொரு நல்ல வாய்ப்பு என்று அவரே சொல்லிவிட்டுத்தான் உள்ளே வந்தார். பாத்ரூம் க்ளீனிங் வகுப்பு எடுத்தபோதுகூட ‘நமீதாடா’ என்று நம் ஆட்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

நமீதாவின் பிரச்சினை, அவர் யாருடனும் கலந்து பழகுபவராக இல்லை. இவ்வளவு நாள் உள்ளே இருந்தும் காயத்ரியைத் தாண்டி வேறு புதிய நட்பென்று எதையுமே அவர் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. காயத்ரி குடும்பத்திற்கு ஏற்கனவே நெருக்கமானவர் என்ற வகையில், காயத்ரியை அவர் முழுதாக நம்பினார். போட்டியாளர்களாலேயே ஆரம்பத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட்டார். அவருக்கு போதிய மரியாதையும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ‘என் உலகம் தனி.. அதில் யாரும் நுழைய முடியாது’ எனும் கறாரான எல்லைக்கோட்டுடன் தான் நமீதா அங்கே வாழ்ந்தார்.

ஏறக்குறைய ஓவியாவும் இதே தனி உலக மனப்பான்மை உள்ளவர் தான். நமீதா எங்கே ஓவியாவிடம் தோற்றார் என்றால், யாருடைய மரியாதையையும் அங்கீகாரத்தையும் ஓவியா எதிர்பார்க்கவில்லை. அவரது தத்துவம்#5001ன் படி, அவரே அவரை சப்போர்ட் செய்யும் மனவலிமை ஓவியாவிற்கு இருக்கிறது. நமீதாவைப் பொறுத்தவரை ‘நீங்க யாரும் எனக்கு முக்கியமில்லை. ஆனால் நீங்க என்னை மதிக்கலேன்னா காண்டாகிடுவேன்’எனும் வித்தியாசமான பாலிசி.

அதனால் தான் ஓவியா தனக்கு சீனியர் நடிகை என்ற மரியாதை கொடுத்து கொஞ்சவில்லை என்றதும் கோபப்பட ஆரம்பித்தார். அந்த எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது நாம் தான். ஓவியாவுக்கு விழுந்த ஓட்டுகளைப் பார்த்ததும் நமீதா ரொம்பவே நொந்துபோனார்.

பெரும்பாலான வாழ்ந்து கெட்ட மனிதர்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கும். சுற்றியிருப்பவர்கள் தற்செயலாகச் செய்யும் விஷயங்கள்கூட, நாம் வீழ்ந்ததால் தானோ என்று தோன்றும். நமீதாவிற்கு இந்த மனச்சிக்கலும் சேர்ந்துகொண்டது. மச்சான்ஸ் தன்னைக் கைவிட்டு ஓவியாவை தூக்கிப்பிடிப்பார்கள் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். உண்மையில் நாமே ஓவியா இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கவில்லை. அப்படியிருக்கும்போது, உள்ளே இருக்கும் நமீதாவிற்கு நடப்பது எப்படிப் புரியும்?

நமது நாகரீக முகமூடி எல்லாம் ஒரு எல்லை வரை தான். அந்த எல்லையைத் தாண்டி யாராவது உள்ளே வந்து நோண்டிவிட்டால், முகமூடி கிழிந்து தொங்கிவிடும். கடந்த ஒரு வாரமாகவே கொஞ்சம் கொஞ்சமாக தன் அலங்காரங்களையெல்லாம் களைந்து, உண்மையான நமீதா வெளியே வந்தார். ‘திடுந்தாத உல்லங்கல்’ என்று ஜெகன்மோகினி கணக்காக நைட் எஃபக்ட்டில் பாடியபோது, கோபத்துடன் சிரிப்பு தான் வந்தது. ஸ்கூல் பெஞ்சில் கோடு போட்டு, இதைத் தாண்டி உன் தொடை வந்தால் குத்திவிடுவேன் என்று கையில் காம்பஸுடன் என்னை கண்காணித்த பள்ளித்தோழனைத் தான் நமீதாவிடம் கண்டேன்.

கவர்ச்சி நடிகை இமேஜை மாற்ற வேண்டும் என்று தான் உள்ளே வந்தார். அது இப்போது மாறிவிட்டது. ஆனாலும் ’இப்படி’ மாறியிருக்க வேண்டாம் என்ற வருத்தமும் இருக்கிறது. இந்த முரட்டு குழந்தைக்கு குட் பை!

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடி நமீ,
வஞ்சகி காயூவடி…நமீ,
வஞ்சகி காயூவடி!

(படித்ததில் பிடித்தது)