கண்கள் கலங்கி ஓர் இலக்கற்ற இலக்கை வெறித்தபடி ஜூலிக்கு அறிவுரை கூறிய ஓவியா!

எனக்கு முழுதாய் ஏதும் தெரியாது. என் புரிதல் கொண்டு என் பார்வையில் மட்டும் எழுதுகிறேன்.

ஓவியா ஜூலியை கட்டி அணைத்து ஆறுதல் படுத்துகையில், எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் என தெரியவில்லை. கண்கள் கலங்கி, ஓர் இலக்கற்ற இலக்கை வெறித்தபடி அறிவுரை கூறுவார். அதற்கு பின் மிகப் பெரும் வலிகளும் , துரோகங்களும் ஏமாற்றங்களும் நிச்சயமாக இருந்திருக்கும் என்பது என் ஊகம்.

இதற்குமுன் ஒரு தடவை கூட காயத்ரி ஆரவ்விடம் சொல்கையில், “ஓவியாவின் வரலாறே எனக்கு தெரியும்” என கூறுவார். அவரின் பார்வையில் அந்த வரலாறு பல காதல், பல கலவிகள், பல உறவுகளாக மட்டும் தெரிந்திருக்கலாம். ஏனெனில் அவற்றை வைத்துதான் பொதுப்புத்தியில் ஒரு மனிதனை நொறுக்கி வீழ்த்த முடியும். ஆனால் அந்த மனிதன்/மனிதிக்கு மட்டும்தான் தெரியும் அந்த ஒவ்வொரு உறவும், காதலும் எத்தனை காயங்களை கொடுத்து சென்றன என்பது.

ஓவியாவின் வலி என்னவாக இருந்திருக்கலாம் என்பதற்கு அப்போதே ஓர் உதாரணம் உருவாகிறது. காயத்ரி வந்ததும் ஓவியா வெளியேறுகிறார். அவர் போனதும் அத்தனை நேரம் அக்கறையுடன் அவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த ஜுலி, கண நேரத்தில் தலைகீழாகி காயத்ரி பக்கம் சேர்ந்துகொண்டு ஓவியாவை கீழ்த்தரமாக பேசுகிறார்.

உங்கள் அக்கறை உதாசீனப்படுத்தப்படும்போது, உங்கள் நேசம் நிராகரிக்கப்படும்போது, நீங்கள் ரொம்ப முக்கியமானவராக நினைப்பவர் உங்களுக்கு முதுகை காட்டி நடக்கும்போது, அனைத்துக்கும் சிகரமாக அவர் உங்கள் எதிரிகளோடு கைகோர்த்து உங்களை பார்த்து ஏளனமாக சிரிக்கும்போது, நீங்கள் என்னவாக மாறுவீர்கள்?

மனிதர்களை நம்பாமல் கேமராவை நம்பி பேசும் ஓவியாவாக மாறுவீர்கள்.

உயர்திணை அற்றதுகளை நம்ப தொடங்கினாலும் மனிதர்கள் மீதான அக்கறை போகாது. அக்கறைப்படுவதற்கும் தன்னலமற்ற அன்பு செலுத்துவதற்கும் பழக்கப்பட்டு இருப்பீர்கள். அதன் போதை உங்களை விடாது. ஒவ்வொரு புறக்கணிப்பையும் ரசிக்க தொடங்குவீர்கள். ஒவ்வொரு உதாசீனத்தையும் அவமதிப்பையும் கொண்டு உங்கள் தனிமையை உறுதிப்படுத்தி கொள்வீர்கள்.

மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் உள்ள முரணியக்கம் இது என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் மேலும் மேலும் சமூகம், உறவு என போகப் போக அதிக தனிமைக்கு ஆட்படுவீர்கள். அதேநேரம் உங்களுக்கு வேறு வழியும் இருக்காது.

மலேசிய ஸ்டார் நைட் ஒன்றின்போது ரஜினியின் ஆன்மீக தேடலை கமல் குறிப்பிடுகையில், “வாழ்க்கைக்கான அர்த்தத்த ரஜினி ஆன்மீகத்துல தேடறாரு. நான் சமூகத்துல தேடுறேன்” என்பார். உண்மை என்னவென்றால், சமூகத்தில் வாழ்க்கையை தேடுபவர்கள் are sitting ducks. அவர்களுக்குத்தான் அதிக காயம் ஏற்படுகிறது. ஆன்மீகத்தில் தேடுபவர்கள் எப்போதும் மிகவும் பாதுகாப்போடு தான் இருக்கிறார்கள். ரஜினியையே எடுத்துக் கொள்ளுங்களேன். அவர் ஒரு நிலைப்பாடு எடுப்பதற்கு எந்த கவலையும் கிடையாது. கமலுக்கு மட்டும் பல தர்க்க நியாங்களை விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். அப்படி எடுத்தாலும் செருப்படிதான்.

இயேசுக்களுக்கு மட்டுமே சிலுவைகள். அதனால்தான் ஓவியா கேமராவை நம்புகிறார். நான் எழுத்தை, உங்களை, இந்த உலகத்தை இயக்கும் இயற்கையை நம்புகிறேன்.

RAJASANGEETHAN JOHN