கற்பனை நாயகன் பாகுபலியை மிஞ்சிய நிஜ சாகச தமிழ் நாயகன் கதை!

பாகுபலி ஒரு கற்பனைக் கதை.

ஆனால் அந்த கற்பனையையே மிஞ்சிவிடும் சாகசங்களை செய்த ஒருவன் நிசமாகவே இருந்தான்.

ஆயிரம் வருடங்களுக்கு முன் ரத்தமும் சதையுமாக நடமாடினான்.

போர் அவனது வாழ்க்கை முறை.

வாள் அவனது முதல் மனைவி.

வில் அவனுக்கு இரண்டாவது மனைவி.

தன் வாழ்நாளின் இருபது வருடங்களை கடற்போரிலேயே கழித்தவன்.

எதிர்த்து நின்றவர்களை தூசி கூட மிச்சம் இல்லாமல் தூர்வாரித் தள்ளியவன்.

அறுபதாயிரம் யானைகள் கொண்ட யானைப் படைகளையும், ஒரு லட்சம் காலட்படை வீரர்களையும் கொண்ட ஒரு யுத்த சேனையை, கப்பல்களில் வங்கக் கடலை கிழித்து கடந்து கொண்டுபோய் மறுகரையிலே நிறுத்திய அடுத்த நொடி, மறுபேச்சில்லாமல் அவன் காலடியில் வீழ்ந்த நாடுகள் ஏராளம்.

மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஜாவா, சுமத்திரா, இலங்கை என கீழ்த்திசை நாடுகள் முழுவதும் வென்று அங்கே புலிக்கொடியைப் பறக்க விட்டவன்.

இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் பேரரசன்..

தமிழ்ப் பேரரசன்..

ராஜேந்திரன்…

ராஜேந்திர சோழன்…!

0a

கற்பனைக் கதைகளை கண்டிப்பாக ரசிப்போம்.

ஆனால் வரலாற்றை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.

இந்த கோடை விடுமுறையில், முடிந்தவர்கள் ராஜேந்திரனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். சோழர்களின் சாகசங்களைச் சொல்லுங்கள்…

(வாட்ஸ்ஆப்பில் வந்தது)

# # #

நிலவுடைமைக் கால அரசர்கள் தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்ய மேற்கொண்ட யுத்த சாகசங்களை, உழைக்கும் மக்களை நேசிக்கும் நான் கொண்டாடுவதில்லை. ஆனால், அத்தகைய யுத்த சாகசங்களைக் கொண்டாடும் ‘ஹிந்திய’ வரலாற்றாசிரியர்கள், தமிழ் அரசனின் சாகசம் என வரும்போது, அவனை புறக்கணிக்கிறார்கள், இருட்டடிப்பு செய்கிறார்கள் என்கிற மனக்குமுறல் எனக்குண்டு.

அவ்விதம் ‘ஹிந்திய’ வரலாற்றாசிரியர்களால் புறக்கணிப்புக்கும் தீண்டாமைக்கும் ஆளாகியிருப்பவன் – ராஜேந்திர சோழன்.

இதை நான் மட்டும் சொல்லவில்லை. பிரபல வரலாற்றாசிரியரான ரொமிலா தாப்பார் கூறுகிறார்: “… வெற்றி பெற்ற மன்னர்கள் வரலாற்று வீரர்களாகப் புகழப்பட்டனர். காஞ்சிபுரம் வரை படையெடுத்துச் சென்ற சமுத்திர குப்தனை வரலாற்றாசிரியர்கள் மிகைப்பட புகழ்ந்தார்கள். ஆனால் 11ஆம் நூற்றாண்டில், அவனது (சமுத்திர குப்தனது) படைகள் சென்ற வழியே எதிர்த்திசையில் படையெடுத்துச் சென்று வடக்கே கங்கையாற்றின் கரை வரையில் செனற, 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜேந்திரனைப் பற்றி, வரலாறு எழுதியவர்கள் குறிப்பிடவே காணோம்.” (ரொமிலா தாப்பரின் ‘வரலாறும் வக்கிரங்களும்’: பக்கம் 24).

எனவே, ‘ஹிந்திய’ வரலாற்றாசிரியர்களின் இந்த தமிழர் விரோத தீண்டாமை போக்கை முறியடிக்க, நம் இளைய தலைமுறையினருக்கு பேரரசன் ராஜேந்திர சோழனின் கொடுங்கோன்மை பற்றிய விமர்சனத்தோடு சேர்த்து, அவனது யுத்த சாகசங்களையும் எடுத்துச் சொல்வோம். தமிழர் வரலாறு காப்போம்.

அமரகீதன்