“கணவரை சௌந்தர்யா பிரிந்திருப்பது உண்மை”: ரஜினி குடும்பத்தினர் ஒப்புதல்!

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘கோவா’ படத்தை தயாரித்தவர். ரஜினிகாந்த் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியவர். தற்போது நகைச்சுவை படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்.

இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அஸ்வின் ராம்குமார் என்பவரும் நான்கு ஆண்டுகளாக பழகி வந்தனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 2010 ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி மராட்டிய – பிராமண சடங்கு சம்பிரதாயங்களுடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் இருக்கிறான்.

சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்த சௌந்தர்யா – அஸ்வின் தம்பதியினர் இடையே தற்போது கருத்து வேறுபாடும், மனக்கசப்பும் ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் தமிழ் திரையுலக வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆங்கில நாளிதழ் ஒன்று இதற்கும் ஒரு படி மேலே போய், “பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவிட்டார்கள்” என்று செய்தி வெளியிட்டது. இச்செய்தியை சௌந்தர்யாவோ, அஸ்வினோ இதுவரை அதிகாரபூர்வமாக ஏற்கவோ, மறுக்கவோ செய்யாமல் மௌனம் காத்து வருகிறார்கள்.

எனினும், ரஜினிகாந்த் குடும்ப தரப்பு இது பற்றி கூறுகையில், “சமீபநாட்களாக சௌந்தர்யாவும், அஸ்வினும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துவருவது உண்மை தான். ஆனால், இதுவரை விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. இருவரது வீட்டாரும் சமரசம் செய்து இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்” என கூறியுள்ளது.

இந்த சமரச முயற்சி பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.