‘அரண்மனை 2’ விமர்சனம்

‘சந்திரமுகி’, ‘அருந்ததீ’, ‘அரண்மனை’ ஆகிய வெற்றிப்படங்களின் கலவையாக வெளிவந்திருக்கிறது ‘அரண்மனை 2’..

கோவிலூர் ஜமீன்தார் ராதாரவி. அவர் தனது மூத்த மகன் சுப்பு பஞ்சு, இளைய மகன் சித்தார்த் ஆகியோருடன் மிகப் பெரிய அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். அந்த அரண்மனையில் மனோபாலாவும், அவரது தங்கை கோவை சரளாவும் வேலைக்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

சுப்பு பஞ்சுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. சித்தார்த்துக்கு அவரது முறைப்பெண்ணான திரிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. திருமணத்துக்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், சித்தார்த்தும் திரிஷாவும் வெளியூர் சென்றுவிடுகிறார்கள்.

அந்த நேரத்தில், ஊரிலுள்ள கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக, அங்கிருக்கும் அம்மன் சிலையை படியிறக்கம் செய்து மூடிவிடுகிறார்கள். இதனால் அம்மனுக்கு 10 நாட்கள் சக்தி இருக்காது என்று தெரிந்து, பில்லி-சூனியம் வைப்பவர்கள் அந்த ஊருக்குள் வந்து, தீயசக்திகளை தங்கள் வசம் பிடித்துக்கொள்ளும் நோக்கில் பெரிய யாகம் நடத்துகிறார்கள். யாகத்தின் பலனாய் ஒவ்வொரு பேயாக வெளியே வருகிறது. கடைசியாக வரும் பேய் ருத்ர சக்தியோடு வெளியே வர, அதை கட்டுப்படுத்த முடியாமல் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் சூனியக்காரர்கள். வெளியே வந்த அந்த கட்டுக்கடங்காத தீயசக்தி, நேராக அரண்மனைக்குள் சென்றுவிடுகிறது.

அரண்மனைக்குள் புகுந்த ஆவி, அங்கு இருக்கும் ஜமீன்தாரான ராதாரவியை கொல்ல முயற்சி செய்கிறது. இதில் எப்படியோ தப்பி கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார் ராதாரவி.

ராதாரவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து சித்தார்த்தும், திரிஷாவும் அவசரமாக அரண்மனைக்கு திரும்பி வந்து, ராதாரவியை கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார்கள். ராதாரவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த அரண்மனையிலேயே நர்சாக தங்கி பணிபுரிந்து வருகிறார் பூனம் பஜ்வா. மேலும், ராதாரவியை குணப்படுத்துவதற்காக நாடி ஜோதிடரான சூரியும் அந்த அரண்மனைக்கு வருகிறார்.

இந்நிலையில், அந்த அரண்மனையில் ஒரு கருப்பு உருவம் நடுமாடுவது போலவும், கோமா நிலையில் இருக்கும் ராதாரவி திடீரென அந்தரத்தில் தொங்குவது போலவும் திரிஷாவுக்கு தெரிகிறது. இதனால் பயந்துபோய் அரண்மனையில் உள்ளவர்களிடம் சொல்கிறார். ஆனால் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அந்த வீட்டிலேயே தோட்டக்காரனாக பணிபுரிந்து வரும் ராஜ்கபூர், திரிஷாவை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க, சித்தார்த் அவரை அடித்து, அரண்மனையை விட்டு துரத்துகிறார். சித்தார்த்தை பழிவாங்க குடித்துவிட்டு அரண்மனைக்கு வரும் ராஜ்கபூர், மர்மமான முறையில் இறக்கிறார். அவரை சித்தார்த் தான் கொலை செய்துவிட்டார் என்று போலீஸ் சித்தார்த்தை கைது செய்கிறது.

இதையடுத்து, அரண்மனையில் நடக்கும் மர்ம சம்பவங்களுக்கு தீர்வு காண திரிஷா தனது அண்ணன் சுந்தர்.சிக்கு போன் செய்து அரண்மனைக்கு வரவழைக்கிறார். அரண்மனைக்கு வரும் சுந்தர்.சி., அரண்மனையில் நடக்கும் சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டறிய முடிவு செய்கிறார். அவற்றையெல்லாம் சுந்தர்.சி., கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.

சித்தார்த் வழக்கமான ஹீரோயிசம் இல்லாமல் பேயின் அடக்குமுறைக்கு பயந்தவாறு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முறைப்பெண்ணாக வரும் திரிஷா, முதல் பாதியில் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். பிற்பாதியில் ஆவி புகுந்த பெண்ணாக மிரட்டியிருக்கிறார்.

இரண்டாம் பாதியில் வரும் ஹன்சிகா அழகாக இருக்கிறார். அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பேயாகவும் வந்து மிரட்டியிருக்கிறார். சூரி-கோவைசரளா-மனோபாலா கூட்டணியின் காமெடி படத்திற்கு மிகப் பெரிய பலம். பூனம் பஜ்வா, முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் தன்னை வித்தியாசப்படுத்தி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சுந்தர்.சிக்கு படத்தில் அழுத்தமான கதாபாத்திரம். சந்திரமுகி படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் போன்றது இவருடையது. அதை அழகாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். ராதாரவி தனக்கே உரித்தான வில்லத்தனம், பாசமுள்ள அப்பா என தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார்.

அரண்மனை படத்தைப் போன்றே இப்படத்தையும் திகிலுடன் காமெடி கலந்து குடும்பப்பாங்கான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. முதல்பாதி முழுக்க திகில் மற்றும் காமெடியுடன் இயக்கியிருக்கிறார். இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் கலந்து திகிலும் கொடுத்திருக்கிறார். முந்தைய பாகத்தை விட இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அதை திரையில் பார்க்கும்போது நிறைவாக இருக்கிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட். அவற்றை பெரிய திரையில் பார்க்கும்போது அழகாக இருக்கிறது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

‘அரண்மனை 2’ – வெற்றி கலவை! .

Read previous post:
irudhisuttru - review
‘இறுதிச்சுற்று’ விமர்சனம்

ஒரு சாதாரண குப்பத்து மீனவப் பெண்ணை, குத்துச்சண்டை பயிற்சியாளன் ஒருவன், எப்படி உலக குத்துச்சண்டை வீராங்கனையாக மாற்றுகிறான் என்பதே ‘இறுதிச்சுற்று’ படம். ஹரியானாவில் குத்துச்சண்டை வீரனாக இருப்பவன்

Close