ரசிகர்களை விலக்கி வைக்கும் பாதையை ஏன் நடிகர் அஜித் தேர்வு செய்தார்?

நடிகர் அஜித்தைப் பற்றி பலரும் வியந்து பேசுவதை கேட்கிறேன். பொது நிகழ்ச்சி, ரசிகர்கள் சந்திப்பு, பட புரமோஷன் எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை. எனினும், மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், இமேஜ் அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது, இது எப்படி?

ஓல்டு பாய் திரைப்படத்தில், தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடப்பவன் 15 வருடங்களுக்குப் பிறகு அதிலிருந்து விடுதலை பெறுவான். முகம் தெரியாத ஒருவன் எதற்காக 15 வருடங்கள் தன்னை தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்ற கேள்வி அவனை குடைந்து கொண்டிருக்கும். அவனை அடைத்து வைத்திருந்தவனை சந்திக்கையில், அந்தக் கேள்வியை அவனிடமே கேட்பான். அதற்கு அவன், 15 வருடங்கள் ஏன் அடைத்து வைத்தேன் என்பதல்ல, 15 வருடங்கள் அடைத்து வைத்திருந்த நான் இப்போது ஏன் விடுதலை செய்தேன் என்பதுதான் சரியான கேள்வி என்று திருத்துவான். அஜித் விஷயத்திலும் இவர்கள் கேட்பது தவறான கேள்வி. எதையும் செய்யாமல் அஜித்துக்கு எப்படி இத்தனை ரசிகர்கள், இமேஜ் என்பதல்ல, ஏன் இப்படியொரு பாதையை அவர் தேர்வு செய்தார்?

ஆஞ்சநேயா பட காலகட்டம்வரை ரசிகர்கள் சந்திப்பு, பொது நிகழ்ச்சி, பட புரமோஷன் என பிற நடிகர்கள் போலத்தான் அஜித்தும் இருந்தார். இந்த சகஜநிலையை ரசிகர்கள் தவறாக எடுத்துக் கொண்டு, அவரை சாதாரணமாக கையாளத் தொடங்கினர். அவரது சுயகௌரவம் அவ்வப்போது உரசிப் பார்க்கப்பட்டது. கை குலுக்கினால், எப்படிடா மச்சான் என்று தோளில் கை போடுவார்கள் என்பதை தாமதமாகப் புரிந்து கொண்டவர், ரசிகர்களை விலக்க ஆரம்பித்தார். அப்போது நான் பணிபுரிந்து கொண்டிருந்த பப்ளிகேஷனில்தான் அவரது ரசிகர்மன்ற இதழ் தயாரிக்கப்படும். அதன் ஆசிரியர் அஜித்திடம் பேட்டிகள் எடுத்து வருவார். நாம் அதைக் கேட்டு எழுதித் தர வேண்டும். ரசிகர்களிடமிருந்து விலகியிருக்கப் போவதாகவும், அப்போதுதான் மதிப்பார்கள் எனவும் அஜித் சொன்னதை அப்போதே அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். அதுவொரு நல்ல முடிவு. அந்த முடிவுதான் அவரது ரசிகர்களை, இமேஜை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பின்னாலிருப்பது நமது இந்திய மனோபாவம். தமிழக அரசியலில் இதற்கு உதாரணம் சொல்லலாம்.

கலைஞரின் கோபாலபுரம் வீடு, எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டம், ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு மூன்றும் தமிழக அரசியலில் முக்கியமானவை. ராமாவரம் தோட்டம் என்றதும், எம்ஜிஆர் தனது எதிரிகளை தோட்டத்திற்கு வரவழைத்து ‘கவனித்து’ அனுப்பியதும், போயஸ்கார்டன் என்றால் ஆடிட்டர் அடிவாங்கியதும் நினைவுக்கு வரும். தோட்டம், கார்டன் என்றாலே அனைவருக்கும் நடுக்கம், சிம்மச்சொப்பனம். வேண்டுமென்றால் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி போன்றோர் சித்ரா லட்சுமணனுக்கு அளித்தப் பேட்டியை பாருங்கள். தோட்டத்திற்கும், கார்டனுக்கும் சென்றதை ஏதோ சாகஸம் புரிந்ததைப் போல் விவரித்திருப்பார்கள். அதுவே கோபாலபுரம் வீடு என்றால் ரொம்பவே சாதாரணம்;. அங்கு இதுபோல் கெடுபிடியோ மிரட்டல்களோ இல்லை. யார் வேண்டுமானாலும் அந்தத் தெருவில் சாதாரணமாக நடந்துச் செல்லலாம். பெரும்பாலும் கதவு திறந்தேயிருக்கும். இத்தனை சகஜமாக இருந்தால் எவன் மதிப்பான்? நானே அடிக்கடி சொல்வேன், ஜெயலலிதா போல கலைஞரும் நாலு தெரு தள்ளி காரை நிறுத்தி, நடந்து வரவைத்து, நாலு மணி நேரம் காக்க வைத்து இவர்களைப் பார்த்திருந்தால், ‘கலைஞரா… ஐயோ என்னவொரு ஆளுமை!’ என்றிருப்பார்கள். நானும் அவரும் பேனா மாத்தி விளையாடுவோம் என்பது போல் யாரும் உளறியிருக்க மாட்டார்கள். இங்கே ஓவர் ஜனநாயகமாக இருந்தால், எங்கோ ஒருவன் ப்ரைடு ரைஸுக்கு சண்டைப் போட்டாலும் முதலமைச்சரின் சட்டையைப் பிடிப்பார்கள். அதுவே பால்கனியில் நின்று டாட்டா காட்டினால், ஐஏஎஸ் முகத்தில் ஆசிட் அடித்தாலும் எவனும் ஏன் என்று கேள்வி கேட்கமாட்டான், பதிலுக்கு இரும்புப் பெண்மணி என்பான்.

கமல் வெற்றிலை போடுகிறவர்களைப் பற்றி சொல்லும் போது, வெற்றிலைப் போடுகிறவர்களைப் பார்த்தால் ரொம்பப் புத்திசாலியாக இருக்கிறார்களேன்னு தோணும். பிறகுதான், வெற்றிலைப் போட்டால் பேச முடியாது. எது சொன்னாலும் அமர்த்தலாக தலையை மட்டும் ஆட்டுவாங்க, அதை வச்சி அவங்களுக்கு எல்லாமே தெரியும், புத்திசாலின்னு நாம நினைச்சுப்போம் என்றார். அஜித்தின் பேச்சுத் திறமைக்கும், பழகும் குணத்துக்கும் பழைய ஸ்டைலை தொடர்ந்திருந்தால் இப்போதிருப்பதில் பாதி ரசிகர்களே தேறியிருப்பார்கள். ரசிகர்களிடமிருந்து விலகியிருப்பதால்தான் இந்த இமேஜும், இத்தனை ரசிகர்களும். நமது ‘ஜனநாயக மனநிலை’யை அறிந்து அவர் எடுத்த முடிவு இது. வெளிநாட்டிலிருந்து திரும்பியதும், விமான நிலையத்திலிருந்து நேராக அவர் இரும்புப் பெண்மணியின் சமாதிக்குச் சென்றதும், அவரது ரசிகராக இருப்பதும் எதேச்சையானதென்றா நினைக்கிறீர்கள்?

-JOHN BABU RAJ KANAGARAJ