“ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கர் விருதுக்கும் மேல்!” – ஆர்.கே.சுரேஷ்

ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

100 நாட்கள் கடந்து சாதனை படைத்த ‘தர்மதுரை’ படத்தின் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசி, வாழ்த்து கூறினார்.

ரஜினியுடனான இந்த சந்திப்பு தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்றார் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ்.

அவர் கூறுகையில், “சிறுவயது முதல் சூப்பர்ஸ்டாரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களைப் பார்க்க முட்டி மோதிக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி அவரை வெள்ளித்திரையில் பார்த்து வியந்தவன் நான்.

‘தாரை தப்பட்டை’ படத்தில் எனது நடிப்பு அவரை மிகவும் கவர்ந்ததாகவும், வில்லத்தனமான கதாபாத்திரத்தில்தான் நடிப்புத் திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியுமென்றும், அதை நான் சரியாக செய்துள்ளேன் என்றும் கூறினார்.

என் தயாரிப்பில் உருவான ‘தர்மதுரை’ படத்தின் நல்ல தன்மைகளை கூறி, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் நான் மேன்மேலும் பல படங்களில் நடித்து சிறந்த நடிகனாய் வரவேண்டும் என்று ஆசி கூறினார்.

நான் கடவுளாக நினைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று நேரில் பார்த்ததும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதும் எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல்” என்றார் ஆர்.கே.சுரேஷ்.