‘ஆகம்’ விமர்சனம்

தெற்காசிய பிராந்திய வல்லாதிக்க அரசாக கொடூர முகம் காட்டும் இண்டியாவை சீர்திருத்தி, நல்லரசாக மாற்ற முயன்று வருகிறார்கள் ஒரு சாரார். “இதெல்லாம் வேலைக்கு ஆவுறதில்ல; எங்களை விடு; நாங்க தனியா பிரிஞ்சு போயிடுறோம்” என்று இண்டியாவோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் இன்னொரு சாரார்.

மற்றொரு சாராரோ, இது எது பற்றிய கவலையும் இல்லாமல், இண்டியாவை உலக வல்லாதிக்க அரசாக… அதாங்க… உலக வல்லரசாக ஆக்க வேண்டும் என்ற பயங்கர திகில் கனவுடன் ராப்பகலாக அரும்பாடுபட்டு வருகிறார்கள். தங்கள் கனவை நனவாக்குவதற்காக இந்த ஆதிக்க சக்திகள் இண்டியாவை கொண்டுபோய் உலக வல்லரசுகளுக்கு அடகு வைத்திருக்கிறார்கள். “தாராளமாய் வந்து கொள்ளையடிச்சிட்டுப் போ. நாங்க எதுவும் கேக்க மாட்டோம்” என்று அன்னிய மூலதனத்துக்கு இண்டியாவை திறந்து வைத்திருக்கிறார்கள். அம்பானி, அதானி வகையறாக்களை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். ஏழை, எளியவர்களை எலும்புகள் நொறுங்க ஏறி மிதித்திருக்கிறார்கள். இதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு ‘தேச விரோதிகள்’ என பட்டமளித்து கௌரவிக்கிறார்கள். கோடி கோடியாய் ஊழல் பணம் சுருட்டுகிறார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளை அன்னிய வங்கிகளில் போட்டு பதுக்கி வைக்கிறார்கள். இந்து அல்லாதாரை கொன்று குவிக்கிறார்கள். அவர்களது வழிபாட்டுத் தலங்களை தகர்க்கிறார்கள். கேடுகெட்ட சாதிய முறையை கடக்க முயன்றால் ஆணவக்கொலைகள் செய்கிறார்கள். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக குப்பைத் தொட்டியில் கிடக்கும் ஆணுறைகளை தினம் தினம் எண்ணிப் பார்க்கிறார்கள். இண்டியாவை வல்லரசாக ஆக்குவதற்கு இவை போதாதென்று, இப்போது ரசிகர்களை சாகடிக்கிற திரைப்படங்களும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி எடுக்கப்பட்ட ஒரு படம் தான் ‘ஆகம்’.

நாயகன் இர்பான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டே, படித்த இளைஞர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் மோகத்தை கைவிட்டுவிட்டு இண்டியாவிலேயே பணிபுரிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். அதேபோல், ஜெயப்பிரகாஷும் இண்டியா வல்லரசாவதற்கு அரசாங்கம் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதற்கு ஒரு திட்டத்தை ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறார். இதற்கு உறுதுணையாக இர்பானும் இருந்து வருகிறார்.

ஜெயப்பிரகாஷின் ஆராய்ச்சியை கைப்பற்றி அதன்மூலம் காசு சம்பாதிக்க அரசியல்வாதியான ஒய்.ஜி.மகேந்திரன் முயற்சி செய்து வருகிறார். இவரது மகனான ரியாஸ்கான் வெளிநாட்டுக்கு இளைஞர்களை வேலைக்கு அனுப்பி அதன்மூலம் நிறைய பணம் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில், வெளிநாட்டு மோகத்தை இளைஞர்கள் கைவிடவேண்டும் என்ற குறிக்கோளுடனே வாழ்ந்து வரும் இர்பானுக்கு ஒரு பெருத்த சோதனை. அவருடைய அண்ணனுக்கு வெளிநாடு சென்று வேலைபார்க்க ஆசை என்பதுதான் அந்த சோதனை. தம்பிக்குத் தெரிந்தால் ஆசையில் மண் விழுந்துவிடும் என்று தம்பிக்கு தெரியாமலேயே ரியாஸ்கானிடம்  பணம் கொடுத்து வெளிநாடு செல்கிறார். ஆனால், ரியாஸ்கான் அங்கு அவரை வேறுவிதமான பிரச்சனையில் சிக்க வைத்துவிடுகிறார்.

இறுதியில், இர்பான் தனது அண்ணனை அங்கிருந்து மீட்டுக் கொண்டு வந்தாரா? ஜெயப்பிரகாஷ் செய்த ஆராய்ச்சிக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதெல்லாம் மீதி பூச்சுற்றல்.

இப்படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் நிஜத்தில் ஒரு டாக்டர். இப்படத்திற்கு எண்ணம், ஆராய்ச்சி, இயக்கம் என செய்து இதில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

முதல் பாதியிலேயே இவருடைய கதை ஆட்டம் கண்டுவிடுகிறது. ஒவ்வொரு காட்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் இருக்கிறது. சரி, இரண்டாம் பாதியாவது ரசிக்க முடியுமா என்று பார்த்தால், முதல் பாதிக்கு சற்றும் தொடர்பு இல்லாமல் இரண்டாம் பாதி தொடங்குகிறது. ஒரு விவரமும் தெரியாத ஒரு இயக்குனர் இயக்கியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

அவரவர் தனக்கான வேலையை சரியாக செய்தால், அந்த வேலை சிறப்பாக அமையும். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்துக் கொள்வதால் என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதற்கு இப்படத்தின் இயக்குனர் ஒரு எடுத்துக்காட்டு.

‘ஆகம்’ – படம் பார்ப்பவர்கள் பாவம்!

Read previous post:
0a44
கலாபவன் மணி உடலில் பூச்சிக்கொல்லி மருந்து: கொலையாளி யார்?

பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் கேரளாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்

Close