அஜித் குமாரின் அடுத்த படம் ‘விடாமுயற்சி’: அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்!

0a1eஅஜித் குமார் நடித்த ‘துணிவு’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி திரைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, அஜித் குமாரின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்தாண்டே லைகா நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், ‘ஏகே 62’-லிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டிருக்கிறார். தயாரிப்பு மற்றும் அஜித் குமார் தரப்பு கதையில் மாற்றங்களை செய்யச் சொன்னதாகவும், அதற்கு விக்னேஷ் சிவன் ஒப்புக்கொள்ளாததால் படத்திலிருந்து அவர் விலக்கப்பட்டார் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அஜித் குமார் நடிக்கும் ‘ஏகே 62’ படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்துக்கு ‘விடாமுயற்சி’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. லைகா நிறுவனம் சார்பில் இந்த படத்தை சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.  நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (மே 1) அவரது 62-வது படமான ‘விடாமுயற்சி’ பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.