பனி விழும் இரவு – விமர்சனம்

நடிப்பு: அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி, கருப்பு நம்பியார், சேரன்ராஜ், சரவண சக்தி, செ.ரா.ராஜேஷ், கஜராஜ், சுருளி, உமர், வினோத் மற்றும் சிலர்

எழுத்து & இயக்கம்: செ.ரா.ராஜேஷ்

ஒளிப்பதிவு: ஜெயக்குமார் தங்கவேல்

படத்தொகுப்பு: எம்.எஸ்.செல்வா, சி.ஆர்.புவனேஷ்

இசை: சதாமுருகன்

பாடல்கள்: சதாமுருகன், சந்தோஷ் ஆறுமுகம்

தயாரிப்பு: ’பவி கிரியேஷன்ஸ்’ சதாமுருகன், தங்கவேல் வல்லவர்சாமி, ஓம் செல்வா

பத்திரிகை தொடர்பு: சரண்

கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு பயத்தோடும் பதட்டத்தோடும் வரும் நாயகன் ஜெ.கே (அருண் கார்த்தி), இன்ஸ்பெக்டரைப் பார்க்க வேண்டும் என்று ஏட்டு நாகராஜிடம் (கருப்பு நம்பியார்) கூறுகிறார். இன்ஸ்பெக்டர் இன்னும் வராததால் அவரை காத்திருக்கச் சொல்கிறார் ஏட்டு நாகராஜ்.

இன்ஸ்பெக்டர் மதிமாறன் (சேரன்ராஜ்) வந்தவுடன், தன் வருங்கால மனைவி சபிதா காணாமல் போய்விட்டதாக கண்ணீருடன் கதறுகிறார் ஜெ.கே. அவரை அமைதிப்படுத்தும் இன்ஸ்பெக்டர் மதிமாறன், என்ன நடந்தது என்று கேட்க, ஜெ.கே விவரமாக சொல்லத் தொடங்க, பிளாஷ்பேக் ஆரம்பமாகிறது…

… அனாதை இளைஞரான ஜெ.கேவும், பணக்கார இளைஞியான சபிதாவும் (எனாக்ஷி கங்குலி) காதலர்கள். அவர்களின் திருமணத்துக்கு தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. ‘பிரி-வெட்டிங் போட்டோ ஷூட்’ என்று சொல்லப்படும் திருமணத்துக்கு முந்தைய புகைப்படங்கள் எடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வரும் ஜெ.கேவும், சபிதாவும், அங்கு சபிதாவுக்குச் சொந்தமான ‘டயானா பேலஸ்’ என்ற கெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார்கள். ஓராண்டுக்கு முன்பு அந்த கெஸ்ட் ஹவுஸில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டதால், அப்போதிருந்து அதை யாருக்கும் வாடகைக்கு விடுவதில்லை. அதை பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஒரு வாட்ச்மேன் (சரவண சக்தி) மட்டும் இருந்து வருகிறார்.

அதன்பின், கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகான லொக்கேஷன்களில் நடத்தப்படும் பிரி-வெட்டிங் போட்டோ ஷூட்டில் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் பங்கேற்கும் ஜெ.கேயும், சபிதாவும் ஜோடியாக விதவிதமாக போஸ் கொடுக்கிறார்கள்.

அன்றிரவு கெஸ்ட் ஹவுசுக்குத் திரும்பும் அவர்கள், மிகவும் ரொமாண்டிக்கான மனநிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில், திடீரென்று சபிதா அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்க, பதைபதைப்புடன் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஜெகே அங்குமிங்கும் ஓட, அவரும் ஓர் அறைக்குள் மாட்டிக்கொள்கிறார். சபிதாவின் அழுகுரல், மர்ம மனிதர்களின் காலடி ஓசை போன்றவை பீதியைக் கிளப்புகிறது. பின்னர், தான் சிக்கியிருந்த அறையை விட்டு ஜெ.கே வெளியே வந்து பார்க்கும்போது, சபிதா காணாமல் போயிருந்தார். எங்கு தேடியும் காணவில்லை…

… பிளாஷ்பேக் முடிய, தன் வருங்கால மனைவி சபிதாவை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு இன்ஸ்பெக்டர் மதிமாறனிடம் கெஞ்சுகிறார் ஜெ.கே. திறமையான இன்ஸ்பெக்டர் மதிமாறனும், ஏட்டு நாகராஜ் உள்ளிட்ட அவரது போலீஸ் படையும் புலன் விசாரணையைத் துவக்கி தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிறார்கள்.

சபிதா எப்படி காயமடைந்தார்? எப்படி மாயமானார்? சம்பவம் நடந்த இரவு என்ன நிகழ்ந்தது? அவருக்கு என்ன நேர்ந்தது? இந்த மர்ம சம்பவங்களுக்கு யார் காரணம்? இறுதியில் சபிதா உயிருடன் கிடைத்தாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு போலீஸ் புலன் விசாரணை, அதிரடி திருப்பங்கள், அதிநவீன புத்தம்புது தொழில்நுட்பத்தின் அசுரத்தனம் ஆகியவற்றின் சங்கமமாக, யூகிக்கவே முடியாத கிளைமாக்ஸுடன் விடை அளிக்கிறது, சஸ்பென்ஸ் திரில்லரான ‘பனி விழும் இரவு’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் ஜெ.கே-யாக அருண் கார்த்தி நடித்திருக்கிறார். இக்கால இளைஞர்களை அவர் திரையில் பிரதிநிதித்துவம் செய்திருக்கிறார். (இந்த வரிக்கான அர்த்தத்தை கிளைமாக்ஸில் தான் புரிந்துகொள்ள முடியும்!) தொடக்கத்தில் சிறிய அளவில் வரும் காதல் காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார். நாயகி மாயமான பின்பு பதட்டம் நிறைந்த வேறொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகி சபிதாவாக எனாக்‌ஷி கங்குலி நடித்திருக்கிறார். படத்தில் குறைவான நேரமே வந்தாலும், குறை சொல்ல முடியாத அளவுக்கு நிறைவாக நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு மிகவும் மெலிந்து காணப்படுவதால், அவர் நல்ல ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிமாறனாக வரும் சேரன்ராஜ், ஏட்டு நாகராஜாக வரும் கருப்பு நம்பியார், கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேனாக வரும் சரவண சக்தி, மருத்துவர் சரவணனாக வரும் கஜராஜ், சோலை ராஜாக வரும் செ.ரா.ராஜேஷ், பால்காரராக வரும் உமர், மற்றும் சுருளி, வினோத் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் செ.ரா.ராஜேஷ். முதலில் காதல் கதையாகத் தொடங்கி, பின்னர் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக வளர்த்து, அதன்பின்னர் ஏஐ தொழில்நுட்பத்தை கதைக்குள் சாமர்த்தியமாகப் புகுத்தி, சஸ்பென்ஸை இறுதி வரை கசிய விடாமல், படத்தை ரசிக்கத் தக்க விதத்தில் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார். பாராட்டுகள் இயக்குநர் செ.ரா.ராஜேஷ்!

கொடைக்கானலின் இயற்கை எழிலையும், கதையில் இருக்கும் பதட்டத்தையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல்.

இசையமைப்பாளர் சதாமுருகன் காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் வலு சேர்க்கும் வகையில் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர்கள் எம்.எஸ்.செல்வா, சி.ஆர்.புவனேஷ் ஆகிய இருவரும் படம் தொய்வின்றி பரபரப்பாக நகர உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

’பனி விழும் இரவு’ – கண்டு களிக்கலாம்!

ரேட்டிங்: 3.5/5