பராசக்தி – விமர்சனம்
நடிப்பு: சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன், பிருத்வி பாண்டியராஜன், காளி வெங்கட் மற்றும் பலர்
இயக்கம்: சுதா கொங்கரா
எழுத்து: சுதா கொங்கரா, அர்ஜுன் நடேசன்
கூடுதல் திரைக்கதை: கணேஷா
கூடுதல் வசனம்: மதன் கார்க்கி, ஷான் கருப்புசாமி
நிபுண ஆலோசகர்: டாக்டர் அ.ராமசாமி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: எம்.ஆர்.கார்த்திக் ராஜ்குமார்
ஒளிப்பதிவு: ரவி கே.சந்திரன்
படத்தொகுப்பு: சதீஷ் சூர்யா
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
பாடல்கள்; யுகபாரதி, ஏகாதசி, அறிவு, கபீர் வாசுகி, ஜெயஸ்ரீ மதிமாறன்
நடன அமைப்பு: பிருந்தா, கிருத்தி மகேஷ், அனுஷா விஸ்வநாதன்
சண்டை வடிவமைப்பு: சுப்ரீம் சுந்தர்
கலை இயக்கம்: எஸ்.அண்ணாதுரை
ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா
தயாரிப்பு: ‘டாண் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன்
வெளியீடு: ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இன்பன் உதயநிதி
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, சதீஷ் (எய்ம்)
’இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய சுதா கொங்கரா, அடுத்து சூர்யா தயாரித்து நடிக்கும் ‘புறநானூறு’ என்ற – இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர்களின் வீரஞ்செறிந்த போராட்டம் பற்றிய – திரைப்படத்தை எழுதி இயக்குவதாக இருந்தது. ஆனால், இந்திக்காரர்களை நெருங்கிய உறவினர்களாகக் கொண்டிருக்கும் சூர்யா திடீரென்று பின்வாங்கியதால், அதே படத்தை, அவருக்குப் பதிலாக ‘அமரன்’ வெற்றிப்பட நாயகனான சிவகார்த்திகேயனை நடிக்க வைத்து, ‘டாண் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், ‘பராசக்தி’ என்ற பெயரில் இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. தற்போது திரைக்கு வந்திருக்கும் இப்படம் அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட்டு, கம்பீரமாக வெற்றிநடை போடுவதைப் பார்த்து சிவகார்த்திகேயன் அகம் மகிழ்வார்; தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் சூர்யா ‘ஒரு வெற்றிப்படம் போச்சே’ என்று நிச்சயம் உள்ளுக்குள் வருந்துவார்.
‘பராசக்தி’ என்ற சினிமாத் தலைப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு புதிதல்ல. அது 1952-லிருந்து பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமான பெயர். சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய அந்த படம், அனல் பறக்கும் திராவிட இயக்கக் கருத்தியல்களைத் தாங்கிய கலைஞர் மு.கருணாநிதியின் கதை – வசனத்தால் பிரசித்தி பெற்றது. அதைப்போல, திராவிட இயக்கத்தின் இருமொழிக் கொள்கைக்கான போராட்ட வரலாற்றை மையப்படுத்துவதால் தற்போதைய ’பராசக்தி’க்கும் அதன் பெயர் சாலப் பொருந்தும்.
மத்தியில் ஆள்வது காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் ஏன் இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள்? அன்றைய, இன்றைய ஒன்றிய அரசுகளும், அதற்குத் துதிபாடிய மாநில அரசியல்வாதிகளும் எப்படி வெறிகொண்டு இந்தியைத் திணிக்க முயன்றார்கள்? முயல்கிறார்கள்? தமிழ்நாடு அதை ஏன் எதிர்த்தது? ஏன் எதிர்க்கிறது? ஏன் எதிர்க்க வேண்டும்? ”வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று நெஞ்சுரத்துடன் போராடி பகைமுடித்துக் காட்டிய நம் முன்னோர்கள் யார்? அவர்களது போராட்ட வரலாறு என்ன? ’மும்மொழிக் கொள்கை’ என்ற பெயரில் இந்தியை ஏற்றுக்கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் கூட இப்போது ஏன் திடீரென்று இந்தியை எதிர்க்க ஆரம்பித்திருக்கின்றன?
-இன்றைய இளம் தலைமுறையினரின் இந்த கேள்விகளுக்கும், இது போன்ற ஏனைய கேள்விகளுக்கும் வரலாற்றை அடிப்படையாக வைத்து, சுவாரஸ்யத்துக்காக கற்பனைகள் புனைந்து, காட்சி வடிவில் கருத்தாகவும், அதே நேரத்தில் கமர்ஷியலாகவும் விடையளிக்க முயன்று, அதில் பெரும் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.

கதை என்னவென்றால், 1959-ல் கல்லூரி மாணவராக இருக்கும் நாயகன் செழியன் (சிவகார்த்திகேயன்), தனது மாணவ நண்பர்களை இணைத்து, ‘புறநானூற்றுப் படை’ என்ற மாணவர் அமைப்பை உருவாக்கி, தாய்மொழியான தமிழை அழிக்க முயலும் இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக ரயிலை தீ வைத்துக் கொளுத்தும் திட்டத்துடன் பயணிகளை ரயிலைவிட்டு கீழே இறக்குகிறார். அதே நேரத்தில், இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் மாணவர்களை ஒடுக்குவதற்காக ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டிருக்கும் பாதுகாப்பு அதிகாரி திரு (ரவி மோகன்), அதே ரயிலில் இருக்கிறார். இதனால் மாணவர் தலைவர் செழியனுக்கும், பாதுகாப்பு அதிகாரி திருவுக்கும் இடையே ரயிலிலேயே பயங்கர சண்டை நடக்கிறது. இச்சண்டையில் தன் விரலை இழந்து தப்பிக்கிறார் திரு. திட்டமிட்டபடியே செழியன் ரயிலை தீ வைத்து எரிக்க, அதில் செழியனின் நண்பன் எதிர்பாராத விதமாக சிக்கி இறந்துபோகிறார். இதனால் அதிர்ச்சியடையும் செழியன், போராட்ட வாழ்க்கையைக் கைவிட்டுவிட்டு, தன் குடும்பத்தாருடன் அமைதியான வாழ்க்கை வாழத் துவங்குகிறார்.
இந்நிலையில், ரயில்வே துறையில் வேலை பார்த்துவந்த செழியனின் அப்பா இறந்துவிட, வாரிசு அடிப்படையில் செழியனுக்கு ரயில் எஞ்சினுக்கு கரி அள்ளிப் போடும் சாதாரண ஊழியர் வேலை கிடைக்கிறது. அவ்வேலையில் சேரும் அவர், இந்தி கற்றுக்கொண்டால் ரயில் டிக்கெட் பரிசோதகர் ஆகலாம் என்பதால், தனது வீட்டுக்கு எதிர்வீட்டில் வசிக்கும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் (ஆனந்த்) மகளான நாயகி ரத்னமாலாவிடம் (ஸ்ரீலீலா) இந்தி கற்க ஆரம்பிக்கிறார். நாளடைவில் இருவரும் காதலர்கள் ஆகிறார்கள்.
1964ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி நாட்டின் பிரதமர் ஆகிறார். அவரது ஆட்சியில், இந்தியா முழுவதும் இந்திமொழி கட்டாயம் பள்ளிகளில் சொல்லித் தரப்பட வேண்டும்; மாணவர்கள் அனைவரும் இந்தியை படித்தே தீர வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அப்போது செழியனின் தம்பியும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவருமான சின்னதுரை (அதர்வா) வெகுண்டெழுந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கையில் எடுக்கிறார். நாயகி ரத்னமாலாவும் அப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.
தன்னுடைய தம்பி சின்னதுரை எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார் செழியன். ஆனால் தம்பி சின்னதுரையோ, அண்ணன் செழியனின் அறிவுரையைக் கருத்தில் கொள்ளாமல், இந்தித் திணிப்பை எதிர்த்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். இந்தி பிரச்சார சபாவையையே தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து தீ வைத்துக் கொளுத்துகிறார்.
இந்தப் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு அதிகாரி திருவுக்கு வானளாவிய அதிகாரத்தை அரசு வழங்குகிறது. இதன்பிறகு என்ன நடந்தது? தனக்கு வழங்கப்பட்ட அளப்பரிய அதிகாரத்தைக் கொண்டு திரு என்ன செய்தார்? சின்னதுரை உள்ளிட்ட மாணவர்களின் கதி என்ன? போராட்டம் வேண்டாம் என்றிருந்த செழியன் மீண்டும் போராட்டத்துக்குத் திரும்பினாரா? ஏன்? இறுதி வெற்றி யாருக்கு? என்பன போன்ற கேள்விகளுக்கு இதயம் படபடத்து துடிதுடிக்கும் அளவுக்கு எமோஷனலாக விடை அளிக்கிறது ‘பராசக்தி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் செழியனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். என்ன காரணமோ தெரியவில்லை… முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் கூடுதல் அழகுடனும், புதுப்பொலிவுடனும் மிகவும் இளமையாகத் தோற்றம் அளிக்கிறார் சிவகார்த்திகேயன். தாய்மொழிப் பற்றுக் கொண்ட இளைஞர் கதாபாத்திரத்தில் தன்னைக் கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, “நாங்க இந்தியையோ, இந்தி பேசுறவங்களையோ எதிர்க்கல. எங்க மேல இந்தியைத் திணிக்கிறதை தான் எதிர்க்கிறோம்” என்று வடநாட்டுக் குழந்தையின் கன்னம் தடவிச் சொல்லும் மாணவப் போராளியாகவும், “நாங்க டில்லிக்கு வந்தா இந்தி பேசுவோம். அதுபோல, நீங்க மதுரைக்கு வந்தா தமிழ் பேசணும்” என்று வடநாட்டு எஞ்சின் டிரைவருக்கு இந்தியில் பாடமெடுக்கும் சாதாரண ரயில்வே ஊழியராகவும், போராட்டக் களத்தில் முன்நின்று “தமிழ் வாழ்க” என்று முழங்கும் தெலுங்குப் பெண்ணை ஊன் உருகக் காதலிக்கும் காதலராகவும், பாய்ந்து வரும் தோட்டாக்களுக்கு இடையே புகுந்து வரும் சாகச வீரராகவும் என… பல பரிமாணங்கள் கொண்ட நடிப்பை சிறப்பாகவும், துல்லியமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். ‘அமரன்’ போல இதுவும் அவருக்கு மற்றுமொரு வாழ்நாள் சாதனைப்படம் என்றால் மிகையாகாது. இது அவருடைய 25-வது படம். வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்.
பாதுகாப்பு அதிகாரி திருவாக ரவி மோகன் நடித்திருக்கிறார். பல படங்களில் நாயகனாக நடித்துக் கலக்கியிருக்கும் இவர், முதன்முதலாக இதில் வில்லனாக மிரட்டியிருக்கிறார். குறைவான வசனம், கொடூரமான பார்வையுடன் மாணவர்களை அவர் ஈவு இரக்கமின்றி வேட்டையாடும்போது, பார்வையாளர்களுக்கு அவர் மீது கடும் கோபம் வருவதைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதுவே அவர் தனது கதாபாத்திரத்துக்குச் செய்திருக்கும் நியாயம் ஆகும்.
நாயகியாக, தெலுங்கு பேசும் ரத்னமாலாவாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். வைஜயந்தி மாலா, சரோஜா தேவி ஆகியோரை நினைவூட்டும் கெட்டப்பில் அழகாக இருக்கிறார். இந்த அறிமுகப் படத்திலேயே நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். பேருக்கு கதாநாயகியாக இல்லாமல், உண்மையிலேயே வலிமையான கதாபாத்திரத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, தமிழை நேசிக்கும் தெலுங்குப் பெண்ணான தன்னை ‘அந்நியர்’ எனச் சொல்லும் ’சீமானியர்’களுக்கு அவர் கொடுக்கும் பதிலடி அட்டகாசம்.
நாயகனின் தம்பி சின்னதுரையாக அதர்வா நடித்திருக்கிறார். நிஜத்தில், சிதம்பரத்தில் சிலையாக நிற்கும் போற்றுதலுக்கு உரிய மொழிப்போர் தியாகி ராஜேந்திரனை நினைவூட்டும் கதாபாத்திரம். “டில்லி மட்டும் தான் இந்தியாவா?” என்பது உட்பட காட்சிக்குக் காட்சி அக்கினிக் குழம்பாய் கொதித்திருக்கும் அவரது இறுதி முடிவு பார்வையாளர்களைக் கண்கலங்கச் செய்கிறது.
நாயகனின் பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா, முதலமைச்சராக வரும் பிரகாஷ் பெலவாடி, பேரறிஞர் அண்ணாவாக வரும் சேத்தன், கலைஞர் கருணாநிதியாக வரும் குரு சோமசுந்தரம், நாயகியின் அப்பாவாக வரும் ஆனந்த், சிறப்புத் தோற்றத்தில் வரும் ராணா டகுபதி, ஃபாசில் ஜோசஃப், தனஞ்ஜெயன் உள்ளிட்டோரது திரை இருப்பு தனிக் கவனம் பெறுகிறது.
வரலாற்றுச் சம்பவங்களுக்கு நடுவே கற்பனைக் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, அதை முடிந்த அளவு நேர்த்தியாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தி திணிப்பின் பாதிப்பையும், அதில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க போராடியவர்களின் தியாகங்களையும் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் பார்வையாளர்களிடம் மிக எளிமையாகவும், அழுத்தமாகவும் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.
படத்தில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று என்னவென்றால், இது முழுக்க முழுக்க ஒரு பிரச்சாரப் படமாக ஆகிவிடாத வகையில் திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்ட விதம். இதற்கு சுதா கொங்கரா, அர்ஜுன் நடேசன், கணேஷா, ஷான் கருப்புசாமி, மதன் கார்க்கி ஆகியோர் அடங்கிய எழுத்துக் கூட்டணி கைகொடுத்திருக்கிறது.
இடைவேளைக்கு முன்னதாக வரும் 20 நிமிட காட்சி தீயாக இருக்கிறது. அந்த ஒட்டுமொத்த காட்சியும் எழுதப்பட்ட விதம் அட்டகாசம். கைதட்டல் காதைப் பிளக்கிறது. இத்தனை வெட்டுகளுக்கு மத்தியில் இந்தக் காட்சி சென்சாரில் தப்பித்ததே ஆச்சர்யம்.
1965-ல் நடந்த பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பதிவு செய்த விதம் சிறப்பு. படத்தில் சில மறைந்த தமிழக அரசியல் தலைவர்களின் கேமியோ வரும் இடங்கள் கூஸ்பம்ப்ஸ் ரகம். தணிக்கைக் குழு ஏகப்பட்ட கட் + மியூட் செய்திருந்தாலும், படத்தின் நோக்கத்தில் அவை எந்த தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதில் நமக்கு மகிழ்ச்சி.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு இது 100-வது படம். அவரது இசையில் ”நமக்கான காலம்”, ”ரத்ன மாலா’’, ‘’சேனைக் கூட்டம்’’ ஆகிய பாடல்கள் உற்சாகமூட்டுகின்றன. பின்னணி இசை திரைக்கதையோடு பயணித்து, உணர்வுகளைத் தூண்டுகிறது.
இரவு நேரப் போராட்டம், ரயில் சண்டைகள், போராட்டங்களுக்கு இடையிலான எமோஷன் என ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, டென்ஷன் ஏற்படுத்தும் காட்சிகளை மேலும் கூர்மையாக்கி, பார்வையாளர்களை பதற்றத்தில் ஆழ்த்துகிறார்.
அக்கால ரயில் நிலையங்கள், புகை கக்கும் ரயில்கள், அரசுக் கட்டடங்கள், மாப்பிள்ளை விநாயகர் சோடா, சினிமா போஸ்டர்கள் என கலை இயக்குநரின் உழைப்பு கவனிக்க வைக்கிறது.
படத்தின் இறுதியில், நாயகனால் அடித்து வீழ்த்தப்பட்ட நிலையில், சாகப் போகிறோம் என்று தெரிந்தும், வில்லன் பேசும் வசனம் வடவரின் இன்றைய மனநிலையை மனதில் வைத்தே எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு நாயகன் தரும் பதில் தான் உச்சம்…!
அதாவது, “ நாங்க இதோட அழிஞ்சிட்டதா நினைக்காதே! நாங்க வேற வேற வடிவங்கள்ல வந்துக்கிட்டே இருப்போம்” என்று வில்லன் சொல்ல, அதற்கு நாயகன், “வாங்கடா… வந்துக்கிட்டே இருங்க! எங்க பேரப்புள்ளைங்க உங்களுக்காக காத்துக்கிட்டிருப்பாங்க!” என்று நச்சென்று பதிலடி கொடுக்கிறார்…!
படம் முடிந்து திரையரங்கைவிட்டு வெளியே வரும் ஒவ்வொரு மானத் தமிழனும் தன்னுடன் எடுத்து வந்து தன்னுடைய பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் ஊட்ட வேண்டிய உணர்வு அந்த பதிலடியைத் தான்!
வாழ்க ‘பராசக்தி’ படக்குழு! வளர்க அவர்தம் நற்பணி!
ரேட்டிங்: 4.8/5
