பொய் சொல்வதில் தேர்தல் ஆணையருக்கு இன்னும் ட்ரெய்னிங் போதவில்லை!

பொய் சொல்வதில் தேர்தல் ஆணையருக்கு இன்னும் ட்ரெய்னிங் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது . தேர்தல் மோசடிகள் தொடர்பாக ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் நேற்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மேலும் அம்பலமாகியிருக்கிறார். ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்கள். அந்த பொய்கள் பிறந்த இடத்திலேயே அம்பலமாகக்கூடியவை என்ற கூச்சம் கூட அவருக்கு இல்லை.

ஏன் பல்லாயிரம் வாக்காளர்கள் முகவரி ஜீரோ என்ற கதவிலக்கத்தில் இருக்கிறது என்று கேட்டால் ‘அவர்கள் வீடு இல்லாதவர்கள். நடைபாதையில் வசிப்பவர்கள். அவர்களையும் வாக்களிக்க செய்ய வேண்டும் என்பதற்காக ஜீரோ என்ற நம்பரை பயன்படுத்தி இருக்கிறோம்’ என்கிறார்.

சிறப்பு தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி ஒருவர் வாக்களிக்க தகுதி படைத்த இந்தியர் என்பதை நிரூபிக்க பல்வேறு ஆவணங்களை தேர்தல் ஆணையம் கோருகிறது. ஆதார் அட்டை, ரேஷன் கார்டு கூட ஏற்க மாட்டார்கள். அப்படி எனில் அந்த நடைபாதை வாசிகளிடம் எந்த ஆவணத்தை பெற்று எப்படி அவர்கள் வாக்களிக்க அனுமதி அளித்தார்கள்? இந்த உலகத்திலேயே இல்லாத, பா.ஜ.கவால் உருவாக்கப்பட்ட கதாபாத்திர வாக்காளர்களுக்கு எந்தச் சான்றும் தேவையில்லை.

இது என்ன பிரமாதம், இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கு என்பது போல, ’நடந்து முடிந்த சந்தேகத்திற்கிடமான தேர்தல்களில் வாக்குச்சாவடியின் சிசிடிவி பதிவுகளை வெளியிடுங்கள். அப்போதுதான் வாக்களித்தவர்கள் உண்மை வாக்காளர்களா? போலி வாக்காளர்களா? என்பதை கண்டறிய முடியும்’ என்று கேட்டால் “சேச்சே என்னங்க ….லேடிஸ் எல்லாம் வந்து ஓட்டு போட்டு இருக்காங்க… அந்த சிசி டிவி ஃபுட்டேஜ் எல்லாம் வெளியிட்டால் அவர்கள் அந்தரங்கம் பாதிக்கப்படும்’ என்கிறார். அந்த சிசிடிவி காட்சிகள் என்ன அண்ணாமலை எடுத்த அந்தரங்க வீடியோ காட்சிகளா? நேர்மையான தேர்தல் நடக்கிறதா என்பதை கண்காணிக்கும் பொது வெளிக்காட்சிகள். இதெல்லாம் நடக்கும் என்று எப்படியோ யூகித்துக்கொண்டு போன வருடமே சிசிடிவி காட்சிகளை தர வேண்டியது இல்லை என்ற ஒரு அவசர சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்தார்கள்.

ராகுல் காந்தி சிசிடிவி ஆவணங்களை கேட்கிறார். ’அதையெல்லாம் கொடுத்தால் அவர் பார்க்க 3600 வருடங்கள் ஆகும்’ என்று சில தினங்களுக்கு முன்பு நக்கல் அடித்த தேர்தல் ஆணையம் இப்போது அது ‘லேடிஸ் மேட்டர்’ என்று கதை விடுகிறது.

வாக்காளர் பட்டியல் சாஃப்ட் காப்பி தரமாட்டீர்கள்.

வீடியோ ஃபுட்டேஜ் தரமாட்டீர்கள்.

விவி பாட் ஸ்லிப்பை எண்ண மாட்டீர்கள்.

ஒரு வீட்டில் நூறு பேர் எப்படி வசிப்பதாக காட்டுகிறீர்கள் என்பதற்கு பதில் சொல்ல மாட்டீர்கள்.

ஆனால் புளுகுகளை எந்தத் தயக்கமும் இன்றி அவிழ்த்து விடுவீர்கள்.

இறந்தவர்களை உயிருள்ளவர்களாகவும், உயிருள்ளவர்களை இறந்தவர்களாகவும் காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு மெளனமாக இருப்பீர்கள்.

நீங்கள் செய்தது என்னவென்பதை ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

(இன்று காலை கலைஞர் செய்திகளை பேசியது சாரம்)

-Abdul Hameed Sheik Mohamed
(manushya puthiran)