படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து இயக்குனரை தாக்கிய இந்து தீவிரவாதிகள்: திரையுலகினர் கண்டனம்!

பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி தற்போது இயக்கிவரும் படம் ‘பத்மாவதி’. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த படம் ராணி பத்மினி பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும். வரலாற்றின்படி, அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி, சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பத்மாவதி’ படத்தில், ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியும், அலாவுதின் கில்ஜியும் காதல் வயப்படும் காட்சிகள் இடம்பெற இருப்பதாக ‘ராஜ்புத்திர கர்னி சேனா’ என்ற இந்து தீவிரவாத அமைப்பினர் குற்றம் சாட்டி, கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ஆனால், ‘பத்மாவதி’ படத்தை தயாரிக்கும் நிறுவனம் சார்பில் இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. “ராணி பத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் இடையே எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனையான கனவு காட்சிகளோ படத்தில் இல்லை” என்று அது விளக்கம் அளித்தது.

இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது ‘ராஜ்புத்திர கர்னி சேனா’ அமைப்பைச் சேர்ந்த இந்து தீவிரவாதிகள் திடீரென படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்து, உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரை அடித்து உதைத்தனர்.

இந்த ரகளையை அடுத்து படப்பிடிப்பை ரத்து செய்ததோடு, இனி ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடத்துவதாக இல்லை என்று படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இந்து தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதற்கு இந்தி திரையுலகினர் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு:-

அனுராக் கஷ்யாப்: சினிமா துறையில் இருக்கும் அனைவரும் ஒருமுறை இணைந்து, நம் மேல் சவாரி செய்ய நினைப்பவர்களை எதிர்ப்போமா? அதேநேரத்தில், கர்ணி சேனா… உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். ஒரு ராஜபுத்திரராக இருக்கும் என்னை குறுக வைத்து விட்டீர்கள். முதுகெலும்பில்லாத கோழைகள். ட்விட்டரைத் தாண்டி நிஜ உலகத்தில் இந்து தீவிரவாதிகள் அடியெடுத்து வைத்துவிட்டார்கள். இந்து தீவிரவாதம் என்பது இனி மாயை அல்ல.

ஷ்ரேயா கோஷல் – அருவருப்பு, அதிர்ச்சி. குண்டர்களா நாட்டை நடத்துகிறார்கள்? நடந்தது குறித்து வார்த்தையால் விவரிக்க முடியாத அளவு அதிர்ச்சி அடைந்துள்ளேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. எங்கே ராஜஸ்தான் காவல் துறை? வெட்கக்கேடு. இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஜனநாயக நாட்டில் வாழ்வதற்கான அர்த்தம் என்ன?

தாப்ஸி – அறநெறியை பாதுகாக்க கலைஞர்களை தாக்கும் அனைவரும், தயவு செய்து நாட்டின் எல்லைக்கு சென்று உங்கள் ஆற்றாமையை தீர்த்துக் கொள்ளுங்கள். அதிக பயனுள்ளதாக இருக்கும்.

ஹ்ரித்திக் ரோஷன் -பன்சாலி, நான் உங்களுடன் நிற்கிறேன். இந்த வன்முறை ஆத்திரமூட்டுகிறது. ஒருவர் செய்வது பிடிக்கவில்லை என்பதால் யாரோ சிலர் சட்டென அவரது வேலையிடத்துக்கு வந்து கை ஓங்குகிறார்களா? கோபம் கொள்ளச் செய்கிறது.

அர்ஜுன் ராம்பால் – பத்மாவதி படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது என்ற செய்தி கிடைத்தது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் இது. சஞ்சய் லீலா பன்சாலிக்கும், மொத்த குழுவினருக்கும் எனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறேன்.

ப்ரீத்தி ஜிந்தா – மக்கள் இன்று எப்படி மாறிவிட்டார்கள் என்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. வன்முறையால் எதையும் புரிய வைக்க முடியாது. நமது கருத்தை சொல்ல பல வழிகள் உள்ளன.

ப்ரியங்கா சோப்ரா: சஞ்சய் லீலா பன்சாலிக்கு நேர்ந்ததைக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. நமது முன்னோர்கள் நமக்கு வன்முறையைக் கற்றுத் தரவில்லை.

ஆலியா பட் – பத்மாவதி படப்பிடிப்பு தளத்தில் நடந்தது அபத்தமானது. படைப்பாற்றல் சுதந்திரம், சினிமாவுக்கான சுதந்திரம் இருக்கின்றன. கலைஞர்களோ, வேறு எவரோ கூட குண்டர்களின் / அடியாட்களின் தயவில் இருக்கக் கூடாது.

சோனம் கபூர்: பத்மாவதி படப்பிடிப்பில் நடந்தது மோசமானது, கொடுமையானது. இதுதான் இன்றைய உலகின் நிலையா?

அனுஷ்கா சர்மா – சஞ்சய் லீலா பன்சாலி லீலா பன்சாலி படப்பிடிப்பில் நடந்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். எப்படிப்பட்ட மாற்றுக் கருத்து இருந்தாலும் இந்த மாதிரியான நடத்தை அதை நியாயப்படுத்த முடியாது. வெட்கக்கேடான நிகழ்வு!

பரினீதி சோப்ரா – 20 வருடங்களாக அதே மனிதர் தான் தனது அற்புதமான படைப்புகளால் உங்களை மகிழ்வித்து வந்தார். ஏன் இந்த திடீர் அவநம்பிக்கை? அவர் தாக்கப்பட்டதைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் பன்சாலி. கருத்து சுதந்திரம் என்ற ஒன்று இருக்கும்போது, சில கோழைகள் அதை பறிப்பதை அனுமதிக்க மாட்டோம்

 

Read previous post:
0a
மோடியின் “குரங்கு குளியல்” உரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களுக்கு வானொலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்துவது வழக்கம். இதற்கு “குரங்கு குளியல்” (மங்கி பாத்) உரை என பெயர்

Close