சார்லி சாப்ளின் 2 – விமர்சனம்

தகவல் தொடர்புப் புரட்சி யுகத்தின் முக்கிய அடையாளங்களான ஸ்மார்ட் போன் மற்றும் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் விதத்தையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும் ஆட்டம்பாட்டம், ஆக்சன் கலந்து ‘நான்ஸ்டாப்’ காமெடியாக சொல்ல வந்திருக்கிறது ‘சார்லி சாப்ளின் 2’.

திருமணத்துக்குத் தயாராக இருக்கும் பெண்ணை ஆணுடனும், ஆணை பெண்ணுடனும் இணைத்து வைக்கும் ‘திருமணத் தரகு’ பணி செய்யும் ‘மேட்ரிமோனியல்’ நிறுவனம் நடத்துகிறார் நாயகன் பிரபுதேவா. இந்நிறுவனம் மூலம் 99 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி சாதனை செய்திருக்கும் பிரபுதேவா, இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கவலைப்படும் அவரது பெற்றோர், அவருடைய நிறுவனம் நடத்தும் 100-வது திருமணமாக தங்கள் மகனின் திருமணம் இருக்க வேண்டும் என ஏங்குகிறார்கள்.

இந்நிலையில், மருத்துவரான பிரபுவின் மகளும் நாயகியுமான நிக்கி கல்ராணியும், பிரபுதேவாவும் அடுத்தடுத்து சந்திக்கிறார்கள். காதல் கொள்கிறார்கள். டூயட் பாடி ஆடுகிறார்கள். இவர்களது காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ள திருமணம் நிச்சயமாகிறது.

திருமணத்துக்கு முந்தைய பேச்சுலர் பார்ட்டியின்போது, நிக்கி கல்ராணியின் நடத்தையை சந்தேகிக்கத் தக்க தகவல் ஒன்று நண்பன் மூலம் பிரபுதேவாவுக்கு தெரிய வருகிறது. மதுபோதையின் உச்சத்தில் இருக்கும் பிரபுதேவா உடனே ஆத்திரப்பட்டு, நண்பர்களின் தூண்டுதலால் நிக்கி கல்ராணியையும், அவரது குடும்பத்தையும் படுகேவலமாகப் பேசி, அதை வாட்ஸ்ஆப் வீடியோவாக நிக்கி கல்ராணிக்கு அனுப்புகிறார்.

அதன்பின், நண்பன் சொன்ன தகவல் உண்மைக்கு மாறானது என்பது தெரியவர, பிரபுதேவா தன் தவறை உணருகிறார். அந்த வாட்ஸ்ஆப் வீடியோவை நிக்கி கல்ராணி பார்த்துவிட்டால் திருமணம் நின்றுபோகும் என்று பதறுகிறார். நிக்கி கல்ராணி அந்த வீடியோவை பார்ப்பதற்குமுன் – அது ‘டபுள் டிக்’ ஆகும்முன் – நிக்கி கல்ராணியின் கைபேசியைக் கைப்பற்றி, அந்த வீடியோவை அழித்துவிட பிரபுதேவாவும், அவரது நண்பர்களும் களம் இறங்குகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சனைகள், திருப்பங்கள், முழிபிதுங்கல்கள், ஒரு சிக்கலைத் தீர்க்க முயன்று இன்னொரு சிக்கலை உருவாக்கிவிடும் அவஸ்தைகள் என காமெடியாக நகர்ந்து காமெடியாகவே முடிகிறது மீதிக்கதை.

c5

அழகும், இளமையும், துள்ளலும் குறையாமல் அப்படியே இருக்கும் நாயகன் பிரபுதேவா, ஆட்டம்பாட்டம், ஆக்சன், காமெடி என அனைத்து ரசங்களையும் அனாயசமாக காட்டி அசத்தியிருக்கிறார். ‘சாரா’ என்ற ஒரே பெயரில் வரும் இரண்டு பெண்களிடம் (நிக்கி கல்ராணி, அதா சர்மா) மாட்டிக்கொண்டு அவர்களை சமாளிக்கும் காமெடி காட்சிகளில் பிரமாதமாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகி நிக்கி கல்ராணி அழகாக இருக்கிறார். நடனத்திலும், காமெடியிலும் பிரபுதேவாவுக்கு ஈடுகொடுத்திருக்கிறார். இன்னொரு நாயகியான அதா சர்மா கவர்ச்சி காட்டி கிறங்கடிக்கிறார். அதேநேரத்தில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

நாயகியின் அப்பாவாக வரும் பிரபுவும், நாயகனின் அப்பாவாக வரும் டி.சிவாவும் கூட காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். விவேக் பிரசன்னா, அரவிந்த் ஆகாஷ், சாம்ஸ் உள்ளிட்ட நகைச்சுவை அணியினரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.

சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சார்லி சாப்ளின் 2’ படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். ஆனால் கதையிலோ, கதாபாத்திரத்திலோ இந்த இரண்டாம் பாகத்துக்கும் முதல் பாகத்துக்கும் எந்தத் தொடர்ச்சியும் இல்லை. தமிழ் திரைப்படங்களில் ஏற்கெனவே பார்த்து சிரித்து சலித்த காட்சிகளை திரைக்கதையில் குறைத்துக்கொண்டு புதிய காட்சிகளை நிறைய சேர்த்திருந்தால் இந்த படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

சவுந்தரராஜனின் ஒளிப்பதிவு சிறப்பு. அம்ரிஷ் இசையமைப்பில் பாடல்கள் அருமை. குறிப்பாக செந்தில் – ராஜலட்சுமி தம்பதியரின் குரலில் “சின்ன மச்சான்…” பாடல் சூப்பர். பின்னணி இசையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

‘சார்லி சாப்ளின் 2’ – நகைச்சுவை பிரியர்களுக்கு செம விருந்து!