”தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது பாஜக”: முதல்வர் ஸ்டாலின் சாடல்!

“தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரின் மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்றது ஏதோ நிர்வாகக் குளறுபடி அல்ல, மக்கள் அளித்த தீர்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.

எனது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு ஆதாரங்கள் எந்த அளவுக்கு இந்த முறைகேடு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இன்று, ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவுள்ள நிலையில், பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.

கணினியால் படித்தறியக் கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்பும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்;

அரசியல் நோக்கத்தோடு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது நிறுத்தப்பட வேண்டும்; மற்றும்,நமது மக்களாட்சியை அழிக்கும் செயலான இந்த வாக்குத் திருட்டு முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் திமுக உறுதியாக உடன் நிற்கிறது. இந்திய மக்களாட்சியைப் பட்டப்பகலில் பாஜக திருடிச் செல்வதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஏராளமான வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர், ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், நேற்று அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “வாக்கு திருட்டு என்பது ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படை நோக்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். தெளிவான வாக்காளர் பட்டியல் என்பதுதான், நேர்மையான சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யும். தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை எல்லாம் தெளிவாக உள்ளது. தேர்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்பட வேண்டும்.
மின்னணு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் அதை ஆய்வு செய்ய முடியும். எங்களுடைய இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சாரம் தொடங்குகிறோம். அதற்காக ‘http://votechori.in/ecdemand’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைக்கிறோம். அத்துடன் 96500 03420 என்ற செல்போன் எண்ணையும் வெளியிடுகிறோம். இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூறி, பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும். செல்போனில் மிஸ்டு கால் கொடுத்து பிரச்சாரத்தில் இணையலாம்” என்று கூறியிருந்தார்.