கே.ஜி.எஃப் சாப்டர் 2 – விமர்சனம்

நடிப்பு: யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் மற்றும் பலர்

இயக்கம்: பிரஷாந்த் நீல்

தயாரிப்பு: ’ஹோம்பாலே பிலிம்ஸ்’ விஜய் கிரகந்தூர்

தமிழக வெளியீடு: ’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரபு

மக்கள் தொடர்பு: யுவராஜ்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயலை (Kolar Gold Field, சுருக்கமாக K.G.F) தன் பிடியில் வைத்திருந்த கருடன் என்பவனை நாயகன் ராஜ கிருஷ்ணப்ப பைர்யா (சுருக்கமாய் ‘ரா.கி’, செல்லமாய் ’ராக்கி பாய்’) (யஷ்) கொன்றொழித்து கே.ஜி.எஃப் தங்கச் சுரங்கங்களை வெற்றிகரமாக கைப்பற்றிக்கொள்கிறார் என்பது, நான்கு ஆண்டுகளுக்குமுன் திரைக்கு வந்த ’கே.ஜி.எஃப்’ படத்தின் முதல் சாப்டர், இந்த முதல் பாகத்தை எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த் நாக் விவரிப்பதாக கதையை அமைத்திருந்தார்கள்.

தற்போது வெளிவந்திருக்கும் ‘கே.ஜி.எஃப் சாப்டர் 2’ படத்தின் கதையை, ஆனந்த்நாக்கின் மகன் விஜயேந்திரா (பிரகாஷ்ராஜ்) சொல்வதாக படம் ஆரம்பமாகிறது.  நாயகன் ராக்கி பாய், தன் வசம் உள்ள கே.ஜி.எஃப்-ல் வாழ்ந்துவரும் உழைக்கும் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்து, அவர்களது பேராதரவைப் பெற்ற ‘ராபின் ஹூட்’டாகத் திகழ்கிறார். உலகம் முழுவதும் உள்ள தங்கத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முனைப்போடு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கே.ஜி.எஃப்-ஐ அபகரிக்கவும், அதற்காக ராக்கி பாயை கொல்லவும் அதிபயங்கர வில்லன் ஆதீரா (சஞ்சய் தத்), முப்படைகளையும் தன் சுண்டுவிரலின் கீழ் வைத்திருக்கும் இந்திய பெண் பிரதமர் ரமிகா சென் (ரவீனா டாண்டன்) ஆகியோர் திட்டமிடுகிறார்கள். அவர்களது பகீரத முயற்சிகளை ராக்கி பாய் எப்படி எதிர்கொள்கிறார்? இறுதி வெற்றி யாருக்கு?” என்பது மீதிக்கதை.

நாயகன் ராக்கி பாயாக  நடித்திருக்கும் யஷ் தனது தனித்துவமான நடிப்பால் கவருகிறார். நீளமான தாடி, முகத்தில் விழும் தலைமுடி, கட்டுமஸ்தான உடல், ஸ்டைலிஷான காஸ்ட்யூம் இவற்றுடன் அலட்டலில்லாமல் தோன்றி பார்வையாளர்களை ஈர்க்கிறார். காதலியிடம் அன்பில் கரைவது, எதிரிகளிடம் ஆக்ரோஷமாய் மோதுவது என தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி நம் இதயத்தில் இடம் பிடிக்கிறார். வாழ்த்துகள் யஷ்!

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி குறைவான காட்சிகளில் வந்தபோதிலும், அழகான அந்தப்புரத்து இளவரசி போல் நளினமாகவும் அலட்சியமாகவும்  வந்து மனதைக் கொள்ளையடிக்கிறார்..

இந்திரா காந்தியை நினைவூட்டும் பெண் பிரதமர் கதாபாத்திரத்தில் வரும் ரவீனா டாண்டன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

‘கே.ஜி.எஃப்’ முதல் சாப்டரை விட இரண்டாம் சாப்டரை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், மாஸாகவும் நகர்த்திச் செல்வதில் இயக்குனர் பிரஷாந்த் நீல் வெற்றி பெற்றுள்ளார். அவரது மேக்கிங் அசத்தலாக இருக்கிறது. அதேநேரத்தில் மிதமிஞ்சிய வன்முறையைத் திணித்திருப்பது முகம் சுழிக்க வைக்கிறது. லாஜிக் என்ற ஒன்று இல்லவே இல்லாமல் காட்சிகளை அடுக்கிக்கொண்டே போயிருப்பது அபத்தம். தேசிய அளவில் மாபெரும் கிரிமினலான ராக்கி பாய், எவ்வித தடங்கலும் இல்லாமல், பாதுகாப்பு மிகுந்த பிரதமர் அலுவலகத்துக்குள் சர்வசாதாரணமாக நுழைந்து திமிராக பேசுவது, பாதுகாப்பு மிகுந்த பாராளுமன்றத்தில் பிரதமர் பேசிக்கொண்டிருக்கும்போது, ராக்கி பாய் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்து மந்திரியை சுட்டுக்கொல்வது போன்ற நம்பவே முடியாத காட்சிகளை ‘கே.ஜி.எஃப்’ மூன்றாவது சாப்டரிலாவது இயக்குனர் தவிர்ப்பது நல்லது.

ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம். ஆனால், பின்னணி இசை பயங்கர இரைச்சல். காது ஜவ்வு கிழியாத குறை தான்.

புவன் கவுடாவின் ஒளிப்பதிவு பிரமாதம். படத்துக்கு பெரிய பலம்.

‘கே.ஜி.எஃப் சாப்டர் 2’ – அதிதீவிர ஆக்சன் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்!