கருத்து கணிப்பு பொய் ஆனது: அமெரிக்க அதிபர் ஆகிறார் டொனால்டு ட்ரம்ப்!

சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 45-வது அதிபர் ஆகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் (69), குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு ட்ரம்பும் (70) போட்டியிட்டனர். வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகின.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அதிபர் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர், மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் பாதியளவான 269-க்கு ஒன்று கூடுதலாக அதாவது 270 வாக்குகளைப் பெற வேண்டும். அந்த வகையில் ட்ரம்ப் 279 தேர்வாளர் வாக்குகளை கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 218 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார்.

அதிபர் தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசியல் வரலாற்றில் அறியப்பட்ட ப்ளோரிடா (29), ஜார்ஜியா (16), ஓஹியோ (18), வடக்கு கரோலினா (15), வடக்கு டகோடா (3), தெற்கு டகோடா (3), நெப்ராஸ்கா (4), கான்ஸாஸ் (6), ஒக்லஹாமா (7), டெக்சாஸ் (38), வயோமிங் (3), இண்டியானா (11), கெண்டக்கி (8), டென்னிஸ்ஸி 911), மிஸ்ஸிஸிப்பி (6), அர்கான்ஸாஸ் (6), லூசியானா (8), மேற்கு வர்ஜீனியா (5), அலபாமா (9), தெற்கு கரோலினா (9), மான்டோனா (3), இதாகோ (5), மிசௌரி (10), பென்சில்வேனியா மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி கண்டதே அவரை அதிபராக்கியுள்ளது.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியே வெற்றி பெறுவார் என சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ் கருத்து கணிப்புகள் சொல்லி வந்தாலும் அத்தனை கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கும் விதமாக ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஊடகங்கள் ஹிலாரிக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தலுக்கு முன்னர் ட்ரம்ப் சரமாரி குற்றஞ்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வெற்றி உரையாற்றிய ட்ரம்ப், “இத்தருணத்தில் ஒவ்வொரு குடிமகன் முன்னிலையிலும் ஓர் உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறேன். நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன்” என்றார்.

டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்தகவலை வெற்றியுரையின்போது ட்ரம்ப் உறுதி செய்தார்.