18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: எடப்பாடி காட்டில் மழை! நமக்கு அது அமில மழை!

அ.தி.மு.க. 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் இன்று 14.06.2018 தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, “சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லும்” எனவும், நீதிபதி சுந்தரோ அதற்கு எதிராக “சபாநாயகர் உத்தரவு செல்லாது” எனவும் கூறியிருக்கின்றனர். இந்த மாறுபட்ட தீர்ப்பால் அ.தி.மு.க-வின் மெகா-பாரதப் போர் அடுத்த அக்கப்போர் கட்டத்திற்கு வந்து விட்டது. நீதிபதிகள் தமது மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரைத்திருக்கின்றனர்.

மூன்றாவது நீதிபதி யார், எப்போது அறிவிப்பார்கள், அவர் எப்போது விசாரிப்பார், தீர்ப்பளிப்பார் என்பது இன்றைய மாலை நேர வி…………வாதமாக நம் காதுகளைக் கொல்லும். அந்த மூன்றாவது தீர்ப்பு வரும்வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்ற பழைய நிலை தொடருமாம்.

இந்த தீர்ப்பு குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்த முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், “இந்த தீர்ப்பு குறித்து சொல்ல வேண்டுமென்றால் தீர்ப்பே கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும், மூன்றாவது நீதிபதி விசாரித்து தீர்ப்பளிக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆகலாம்” என்று கூறியிருக்கிறார். அதன்படி ஆறு மாதமோ, இல்லை ஒரு வருடமோ எடப்பாடி காட்டில் மழைதான். நமக்கு அது அமில மழை! மற்றபடி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து வாதிடப்பட்டு, தீர்ப்பு வரும் வரையில் எடப்பாடி – மோடி அரசு காட்டில் மட்டுமல்ல வக்கீல்கள் காட்டிலும் மழைதான்.

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் குறித்த வரலாறு:

அ.தி.மு.க. எனும் அடிமைக்கூட்டத்தை அடக்கி ஆண்ட ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு யார் அடுத்த தாதா எனும் போட்டி உருவானது.  ஆரம்பத்தில் இந்த சொத்துக் குடுமிப்பிடிச் சண்டையால்  சசிகலா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அணிகள் உருவாகின. ஊழல் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஏ-2 ஆக சசிகலா சிறைசென்ற பின்னர், அவர் ஓரங்கட்டப்பட்டார்.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி. தினகரன் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியினர் அவரை பந்தயத்தில் இருந்து வெளியேற்ற முயன்றனர். முன்னதாக சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத ஓ.பன்னீர்செல்வம் கும்பல் ‘அம்மா’ சமாதியில் தியானம் எனும் கூத்துடன்,  ’தர்மயுத்தத்தை’ துவக்கினர்.

பின்னர் மோடியின் கட்டைப் பஞ்சாயத்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பல சுற்று ’பேச்சுவார்த்தை’க்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கடந்த செப்டம்பரில் இணைந்தனர் அல்லது இணைக்கப்பட்டனர். அதன்பிறகு, இருதரப்பினரும் செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தி சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு, அவரால் நியமிக்கப்பட்ட நியமனங்களும் செல்லாது என்று தீர்மானம் போட்டு நாற்காலிகளை தக்கவைக்க முயன்றனர்.

இந்நிலையில் சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தினர் கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றனர். இதற்கு தினகரன் அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு வெயிட்டான எதிர்காலம் இருப்பதாக நிகழ்கால வைட்டமின்களை ஊட்டியிருப்பார். இது போக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி, ஆளுநர் வித்யாசாகரை சந்தித்து தனித்தனியாக மனுவும் அளித்தனர். இது இத்துப்போன இந்திய அரசியல்சாசனம் குறித்து பல்வேறு வெட்டி விவாதங்களை கிளப்பியது. அடிப்படை உரிமை, ஆகாச உரிமை என்று டி.வி விவாதங்களில் ஆர்வலர்கள் அக்கப்போர்களை உளறினார்கள்.

இதைத் தொடர்ந்து, 19 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதில், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ்  ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படியும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, 19 பேரும் விளக்கம் அளித்தனர்.  இந்த விளக்கம் திருப்தியில்லை என்று கூறிய சபாநாயகர் தனபால், மீண்டும் விளக்கம் அளிக்கும்படி 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸுக்கு 18 பேர் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், ஜக்கையன் மட்டும் சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் அளித்ததோடு, முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். இவையெல்லாம் மாபெரும் வரலாற்றுத் திருப்பங்களாக தமிழ் ஊடகங்கள் விவாதித்து மாலை நேரத்தின் ஓய்வு நேரத்தை அந்த நேரமே நொந்து கொள்ளும் அளவிற்கு அடித்துக் கிழித்தன.

இந்நிலையில், ஜக்கையனைத் தவிர்த்து தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, ஆர்.முருகன், மாரியப்பன் கென்னடி, கதிர்காமு, ஜெயந்தி பத்மநாபன், பழனியப்பன், எஸ். முத்தையா, வெற்றிவேல், என்.ஜி.பார்த்திபன், கோதண்டபாணி, ஏழுமலை, ரெங்கசாமி, தங்கதுரை, ஆர்.பாலசுப்பிரமணி, எஸ்.ஜி.சுப்ரமணியன், ஆர்.சுந்தரராஜ், கே.உமா மகேஸ்வரி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகரின் வானளாவிய அதிகாரம் எனும் மாபெரும் தத்துவம் விவாதத்திற்கு வந்தது.

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கு தனி நீதிபதியின் விசாரணைக்கு வந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என  இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். பின்னர், அரசியல் சாசனம் தொடர்பான வழக்கு என்பதால் இந்த வழக்கை ஒன்றிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார். இது எடப்பாடி அரசுக்கு மேலும் நேரத்தை கொடுத்ததோடு, டி.வி.க்களுக்கும் தலைப்பு வறட்சியைப் போக்கியது.

இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டனர். தமிழக அரசுக்கு எதிராக செயல்படாமல் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆளுநரை சந்தித்து மனு அளித்ததாக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வாதிடப்பட்டது. தங்களுக்கு எதிராக அரசு கொறடா புகார் அளித்த பிறகு தங்களிடம் முழுமையான விளக்கம் கேட்காமல் சபாநாயகர் பிறப்பித்த இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் வாதிடப்பட்டது. இதற்காக இயற்கை நீதிக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ வக்கீல்களுக்கு நிதி பெரிய அளவில் கிடைத்திருப்பது உறுதி.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகர், தங்கள் மீது மட்டும் அவசர கதியில் நடவடிக்கை எடுத்தது அரசியல் நோக்கம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சபாநாயகரின் உத்தரவு என்பது ஒரு தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்புக்கு சமமானது என்பதால் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். சட்டசபைக்கு அதிகாரமா, நீதிமன்றத்திற்கு அதிகாரமா என மாபெரும் மகாபாரதப் போர் நடப்பதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். மாண்புமிகு நீதிபதிகளும் மாண்புமிகு அ.தி.மு.க.-வினரும் இந்த நீதியுத்தத்தில் ஈடுபட்டனர்.

அரசு கொறடா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, முதல்வருக்கு எதிராக டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து மனு அளித்த மறுநாளே எதிர்கட்சி தலைவரும் ஆளுநரை சந்தித்தார். இதிலிருந்தே டி.டி.வி. தினகரன் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து அரசை கவிழ்க்க  முயற்சித்தது உறுதியானதாக தெரிவித்தார். மேலும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உட்கட்சிக்குள் பேசி முடிக்காமல் ஆளுநரை சந்தித்தது மரபுக்கு எதிரானது என்பதாலேயே 18 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். முந்தைய கவர்னரோ அ.தி.மு.க. இரு கோஷ்டிகளை மாடுபிடி தரகர் போல துண்டைப் போட்டு இணைத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரியமா சுந்தரம், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததில் இயற்கை நீதி முழுமையாக பின்பற்றப்பட்டது என விளக்கம் அளித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார் குறித்து முழுமையாக ஆராய்ந்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தகுதி நீக்கம் செய்வதற்கு முன்னர் 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் பக்கம் நீதியும், தினகரன் பக்கம் அநீதியும் இருப்பதான இந்த வாதத்தில் இந்திய ஜனநாயகத்தின் கோவணம் இருக்கிறதா இல்லையா என்று வேண்டுமானால் விவாதிக்கலாம்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 24-ஆம் தேதியன்று ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லும் எனவும், நீதிபதி சுந்தரோ அதற்கு எதிராக சபாநாயகர் உத்தரவு செல்லாது எனவும் கூறியிருக்கின்றனர். இந்த மாறுபட்ட தீர்ப்பால் அ.தி.மு.க.-வின் மகாபாராதப் போர் அடுத்த அக்கப்போர் கட்டத்திற்கு வந்து விட்டது. நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரைத்திருக்கின்றனர்.

மூன்றாவது நீதிபதி யார், எப்போது அறிவிப்பார்கள், அவர் எப்போது விசாரிப்பார், தீர்ப்பளிப்பார் என்பது இன்றைய மாலை நேர வி…………வாதமாக நம் காதுகளைக் கொல்லும். அந்த மூன்றாவது தீர்ப்பு வரும் வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற பழையை நிலை தொடர்கிறது.

மொத்தத்தில் எடப்பாடி – மோடி அரசின் திட்டப்படி இந்த ஆட்சி தற்காலிகமாக தொடர்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர்களைக் கொன்று விட்டு அது சட்டப்படி சரிதான் என்று வாதிடும் அந்த அயோக்கிய அரசாங்கத்தை பாரிமுனையில் இருக்கும் நீதிமன்றத்தால் மட்டும் தண்டித்துவிட முடியாது என்பது நிரூபணமாயிருக்கிறது.

Courtesy: Vinavu.com

 

Read previous post:
0a1c
மதுரை பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக பி.பி. செல்லத்துரை நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக்

Close