சென்னையில் பன்னாட்டு திரைப்பட விழா: 13ஆம் தேதி ஆரம்பம்!

சென்னையில் 16-வது சென்னை பன்னாட்டு திரைப்பட விழா வரும் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேஸினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷ்ய அறிவியல், கலாச்சார மையம் ஆகிய அரங்குகளில் திரையிடப்பட உள்ளன.

இதன் தொடக்க விழா கலைவாணர் அரங்கத்தில் டிசம்பர் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விழாவில் 59 நாடுகளின் 150 படங்கள் திரையிடப்படுகின்றன. விழாவில் முதல் திரைப்படமாக, கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற ஜப்பானிய மொழி படமான ‘ஷாப் லிப்டர்ஸ்’ திரையிடப்படுகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்ளும் தமிழ் படங்கள் 2017 அக்டோபர் 16 முதல் 2018 அக்டோபர் 15ஆம் தேதிக்குள் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த போட்டிப் பட்டியலுக்கு விண்ணப்பித்த 20 தமிழ் படங்களில் இருந்து தேர்வு குழுவினர் 12 படங்களை தேர்வு செய்தனர்.

சிறந்த தமிழ் படங்கள் வரிசையில் ‘96’, ‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜீனியஸ்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்குரி’, ‘பரியேறும் பெருமாள் பிஏபிஎல்’, ‘ராட்சசன்’, ‘வடசென்னை’, ‘வேலைக்காரன்’ ஆகிய 12 படங்கள் திரையிடப்படுகின்றன. சிறப்பு திரையிடலாக ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரையிடப்படுகிறது.

இத்திரைப்பட விழாவுக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.