“சங்கர ராமனை யார் தான் கொலை செய்தது?” – உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!

“சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டால், யார்தான் கொலை செய்தது?” என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மேலாளராக இருந்த சங்கரராமன் 2004-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காஞ்சி சங்கர மடாதிபதிகள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

0

இந்த வழக்கு புதுச்சேரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சுமார் ஒன்பது ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கிலிருந்து 2013-ம் ஆண்டில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரி மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டால் யார் தான் கொலை செய்தது? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘மேல்முறையீடு மனுவில் குறை இருந்ததாக கூறி அந்த மனு ஏற்கப்படவில்லை’ என்று புதுச்சேரி அரசு பதிலளித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து புதுச்சேரி அரசு நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.