ஒய்ட் ரோஸ் – விமர்சனம்

நடிப்பு: கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், ரூசோ ஸ்ரீதரன், விஜித், பேபி நட்சத்திரா, சசி லயா, சுலியன் பரணி, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹசின், தரணி ரெட்டி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: கே.ராஜசேகர்

ஒளிப்பதிவு: வி.இளையராஜா

படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா

இசை: சுதர்சன்

தயாரிப்பு: என்.ரஞ்சனி

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா – ரேகா டி’ஒன்

உயிரற்ற பெண் சடலங்களைப் புணர்ந்து இன்பம் காணும் ‘நெக்ரோபிலியா’ (Necrophilia) என்ற வக்கிர மனநோயால் பீடிக்கப்பட்டவர் திலீப் (ஆர்.கே.சுரேஷ்). இவர் தனக்கு தேவைப்படும் பெண் சடலங்களை எப்படிப் பெறுகிறார் என்றால், பாலியல் புரோக்கர் அனுப்பும் பாலியல் பெண் தொழிலாளிகளின் புகைப்படங்களைப் பார்த்து ஒரு பெண்ணைத் தேர்வு செய்வார். இரவில் காரில் வந்து அந்த பெண்ணை பிக்-அப் செய்துகொண்டு, தன்னுடைய இடத்துக்குச் செல்வார். அங்கு சரசமாடுவதுபோல் நாடகமாடி அந்த பெண்ணைக் கொலை செய்வார். பின்னர் உயிரற்றுக் கிடக்கும் அப்பெண்ணின் சடலத்தை புணருவார். அதன்பின் பெண்ணின் கை சுண்டுவிரலை மட்டும் வெட்டி எடுத்து வைத்துக்கொண்டு, பாடியை டிஸ்போஸ் செய்துவிடுவார். இந்த சைக்கோ கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறிக்கொண்டிருக்கிறது.

மறுபக்கம், திவ்யா (கயல் ஆனந்தி) என்ற இந்துப்பெண், அஸ்ரஃப் (விஜித்) என்ற முஸ்லிம் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டதால் பெற்றோர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவர். இவருக்கு தியா (பேபி நட்சத்திரா) என்ற 5 வயது மகள் உண்டு. ஒருநாள் கணவர் அஸ்ரஃப், மகள் தியா ஆகியோருடன் அவர் மகிழ்ச்சியாக வெளியில் சென்றிருந்தபோது, உதவி போலீஸ் கமிஷனர் வெற்றி மாறன் (ரூசோ ஸ்ரீதரன்) தலைமையிலான போலீஸ் படை நடத்தும் ஒரு தவறான என்கவுன்ட்டரில் கணவர் அஸ்ரஃப் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதனால், அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கே பணமில்லாமல் பரிதவிக்கும் திவ்யா, பாலியல் தொழில் செய்யும் பக்கத்து வீட்டுப்பெண் காவ்யாவின் (தரணி ரெட்டி) யோசனையை ஏற்று பாலியல் தொழிலில் ஈடுபட சம்மதிக்கிறார்.

ஆனால், கெடுவாய்ப்பாக, முதல் நாளே சைக்கோ கொலையாளி திலீப்பின் வலையில் திவ்யா சிக்கிக்கொள்கிறார். திலீப்பிடமிருந்து தப்பிக்க திவ்யா நடத்தும் போராட்டம் என்ன? திலீப்பை பிடிக்க போலீஸ் அதிகாரி வெற்றி மாறன் எடுக்கும் முயற்சி என்ன? திலீப்பிடமிருந்து திவ்யா தப்பித்தாரா, இல்லையா? திலீப் உயிரற்ற பெண் சடலங்களைப் புணர்ந்து இன்பம் காணும் வக்கிர மனநோயாளி ஆனதன் பின்னணி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ஒய்ட் ரோஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகி திவ்யாவாக கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். வழக்கம் போல் கவனமாக அழுத்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து, அதில் தன்னை முழுமையாகப் பொருத்தி, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சைக்கோ கொலையாளியிடம் எக்குத்தப்பாக சிக்கிக்கொண்டு அவர் படும் பாட்டையும், பயத்தையும், பதற்றத்தையும் பார்வையாளர்களுக்கு முழுமையாகக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

சைக்கோ கொலையாளி திலீப்பாக ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கிறார். சைக்கோ வில்லனாக அதிகம் பேசாமல் பார்வையாலும், செயலாலும் மிரட்டியிருக்கிறார். இவர் ‘காடுவெட்டி’ போன்ற அபத்தமான படங்களில் ஹீரோவாக நடிப்பதைவிட, இதுபோன்ற படங்களில் வித்தியாசமான வில்லனாக நடித்தாலே தமிழ்த்திரையில் நீண்டநாள் நிலைத்திருக்க முடியும்.

உதவி போலீஸ் கமிஷனர் வெற்றி மாறனாக வரும் ரூசோ ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாவாக வரும் சசி லயா, நாயகி திவ்யாவின் கணவர் அஸ்ரஃப்பாக வரும் விஜித், திவ்யாவின் மகள் தியாவாக வரும் பேபி நட்சத்திரா, திவ்யாவின் பக்கத்துவீட்டுப் பெண் காவ்யாவாக வரும் தரணி ரெட்டி, வில்லன் திலீப்பால் ஒருதலையாக காதலிக்கப்படும் ஸ்வாதியாக வரும் ரித்திகா சக்ரபோர்த்தி, திலீப் வக்கிரபுத்தியுடன் பிணத்தைப் புணர்வதை நேரில் கண்டு அதிரும் டாக்டர் அஞ்சலியாக வரும் ஹசின், கல்லூரிக்கால திலீப்பாக வரும் சுலியன் பரணி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் தத்தமது கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி, அதற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கே.ராஜசேகர். தமிழ்பட பார்வையாளர்களுக்கு இக்கதை புதியது அல்ல; ‘சிவப்பு ரோஜாக்கள்’ தொடங்கி, ஏகப்பட்ட படங்கள் இந்த ‘சைக்கோ கிரைம் திரில்லர்’ ஜானரில் வெளிவந்திருக்கின்றன. என்றாலும், நடிப்புக் கலைஞர்கள் தேர்வு, கதாபாத்திர வடிவமைப்பு, காட்சியமைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி, திரைக்கதையில் வித்தியாசத்தைப் புகுத்தி சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அதனால் படம் போரடிக்காமல் செல்கிறது.

வி.இளையராஜாவின் ஒளிப்பதிவும், சுதர்சனின் இசையமைப்பும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன. கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு படத்துக்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

‘ஒயிட் ரோஸ்’ – கிரைம் திரில்லர் விரும்பிகளுக்குப் பிடிக்கும்!