“என் படம் முதலில் மக்கள் பார்வைக்கு; அதன்பிறகு தான் படவிழாக்களுக்கு!” – ‘மதம்’ இயக்குனர்

காளிகாம்பாள் பிலிம்ஸ் சார்பில் எம்.ஹரிஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘மதம்’. திரையில் 100 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ரஜ்னி. இவர் இயக்குனர் மகேந்திரனின் மகனும், விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தை இயக்கியவருமான ஜானிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இந்திய ஒன்றிய அரசை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியதிலிருந்து, நாடு முழுவதும் மதவெறி தலை தூக்கியிருக்கும் இன்றைய சூழ்நிலையில், எந்த மதம் பற்றி இந்த படம் பேசுகிறது? என்று கேட்டால், “இது மனிதர்கள் பின்பற்றும் மதம் பற்றிய படம் அல்ல. யானைக்குப் பிடிக்குமே மதம், அந்த மதம் மனிதர்களைப் பிடித்தால் என்னாகும் என்பதை சித்தரிக்கும் படம். பணவெறி என்னும் மதம் பிடித்த கூலிப்படையிடம் ஒரு குடும்பம் சிக்கிக் கொள்கிறது. இதனால் அக்குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தான் ‘மதம்’ படத்தில் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் ரஜ்னி.

இப்படத்தில் நாயகனாக விஜய் ஷங்கரும், நாயகியாக ஸ்வாதிஷ்தாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன், ஜான் செல்வாசிங், உதய் குமார், எல்ஷடாய் கிரேஸ், கருப்பையா ராதாகிருஷ்ணன், செல்வி, எஸ்.எம்.பிபி, தினகரன், ஜி.எம்.பாட்ஷா, ஜோதி குமார், வித்யா, விபிதா, இசைசெல்வி என மொத்தம் 20 புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

“ஏன் முழுக்க முழுக்க புதுமுகங்கள்?” என்று கேட்டால், “அது தான் என் பாலிசி. இந்த படத்தில் மட்டும் அல்ல, எதிர்காலத்தில் நான் எத்தனை படங்கள் இய்க்கினாலும், அத்தனை படங்களிலும் புதுமுகங்கள் தான் நடிப்பார்கள்.

தெரிந்த முகங்கள் என்றால், திரையில் பார்க்கும்போது அவர்களது இமேஜே அவர்களுடைய கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை காட்டிக்கொடுத்துவிடும்.  அவர்களுடைய கேரக்டர் என்ன என்பது முதலிலேயே தெரிந்துவிடும். புதுமுகங்கள் நடித்தால் அவர்களது கதாபாத்திரத்தை யாராலும் கணிக்க முடியாது என்பதால் அது எனக்கு பலம். அது தான் எனக்கு தேவை.

இந்தப் படத்துக்குக் கூட, ‘வேண்டுமானால், ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் நடிகர் – நடிகைகளை தேர்வு செய்துகொள்ளுங்கள்’ என்று தயாரிப்பாளர் தரப்பு பச்சைக்கொடி காட்டியது. ஆனால் நான் தான், “வேண்டவே வேண்டாம். எனக்கு புதுமுகங்கள் தான் வேண்டும்” என்று பிடிவாதமாக ஒற்றைக்காலில் நின்று, முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படத்தை எடுத்திருக்கிறேன்.

இப்படம் முழுக்க முழுக்க தூத்துக்குடியில் படமாக்கப்ப்ட்டிருக்கிறது. எனவே, நடிக்க விருப்பமுள்ளவர்களை தூத்துக்குடியிலேயே தேர்வு செய்து, அவர்களுக்கு அங்கேயே நடிப்பு பயிற்சி கொடுத்து, நடிக்க வைத்துள்ளோம். ஒவ்வொரு புதுமுகமும் எத்தனை அற்புதமாக, தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள் என்பதை படத்தில் பார்த்து நீங்களே மலைத்துப் போவீர்கள். உதாரணமாக, 82 வயது மூதாட்டி ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். புரொபஷனல் நடிகர்களையே மிஞ்சும் வகையில் துல்லியமாக எக்ஸ்பிரஷன் கொடுத்து பிரமாதமாக நடித்திருக்கிறார்” என்கிறார் ரஜ்னி.

பொது திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்னால் இப்படத்தை படவிழாக்களுக்கு அனுப்பும் திட்டம் உண்டா? என்று கேட்டால், “பாடல்கள், சண்டைக்காட்சிகள் எதுவும் இல்லாமல், யதார்த்தமான படமாக இதை உருவாக்கியிருக்கிறோம். நிச்சயமாக இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும். எனவே முதலில் மக்கள் பார்வைக்கு. அதன்பிறகு தான் படவிழாக்களுக்கு” என்கிறார் ரஜ்னி.

இந்த படத்துக்கு எதற்காக ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு, “கூலிப்படை பற்றிய படம் என்றாலே ‘யு/ஏ’ தான் கொடுப்போம் என்று கூறிவிட்டார்கள்” என்று சொல்லும் ரஜ்னி, “வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரும். நல்ல வரவேற்பை நிச்சயம் பெறும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

‘கலாபக் காதலன்’ படத்துக்கு இசையமைத்த நிரோ, ‘மதம்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். செந்தில்குமார்.கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பு – சி.சாந்தகுமார், கலை இயக்கம் – பாலாஜி, ஊடகத் தொடர்பு – நிகில்.

 

Read previous post:
0a1c
“தாஜ்மகால் விரைவில் இந்து கோயிலாக மாறும்!”: கோட்சேத்துவா எம்.பி. திமிர் பேச்சு!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ‘தாஜ் மஹோத்தவ் விழா’வை அம்மாநிலத்தின் ஆதித்யநாத் தலைமையிலான கோட்சேத்துவா அரசு வரும் 18ம்

Close