பெஃப்ஸி தொழிலாளர் குடியிருப்பு திட்டத்திற்காக விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர். கே. செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0a1b

விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பெஃப்ஸி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக மேன் கைண்ட் (Man Kind)  என்ற நிறுவனம் சார்பில் முப்பத்தியோரு லட்ச ரூபாய் நிதி உதவியாக பெஃப்ஸி சம்மேளனத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

விழாவில் பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி பேசுகையில்,”இது ஒரு கனவு. ஒரு உதவி இயக்குனருக்கு திரைப்படம் இயக்க வேண்டும் என்பது எப்படி கனவாக இருக்கிறதோ.. அதேபோல் திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு.

நான் திரைத்துறைக்கு வருகை தந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. நான் திரைத்துறைக்கு வருகை தந்த காலகட்டத்தில் சென்னையில் குடியிருக்க வசதியில்லாமல் ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகை தர இயலாத நிலையில் தான் இருந்தேன். ஆனால் இன்று சென்னையில் சொந்தமாக வீடு, கார், மனைவி, மக்கள்.. என வசதியுடனும், மனநிறைவுடனும் வாழ்கிறேன். என்னுடைய இந்த நிலைமைக்கு  நான் மட்டுமல்ல, என்னுடன் பணிபுரிந்த திரைப்பட தொழிலாளர்களும் தான் காரணம் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

நான் ஒரு காட்சியை விவரித்தால்.. அதனை படமாக்க சாலக்குடி என்னுமிடத்தில் கிரேன் மற்றும் 40 கிலோ எடையுடைய மின்விளக்குகளைத் தூக்கிக்கொண்டு திரைப்பட தொழிலாளர்கள் உதவி செய்தனர். சாலக்குடி தற்போது மாற்றம் அடைந்திருக்கலாம். ஆனால் நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது அது ஒரு அடர்ந்த காடு. அந்தத் தருணத்தில் 40 கிலோ எடையுடைய விளக்குகளை தூக்கிக்கொண்டு சென்று, அங்கு பொருத்தி எனக்கு உதவி செய்ததால்தான் வித்தியாசமான கோணங்களில் என்னால் காட்சிகளை படமாக்க முடிந்தது.

அதுபோன்ற தருணங்களில் கடுமையாக உழைக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் பிரதியுபகாரம் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். அனைவருக்கும் நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். அதன்போது தான் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

சென்னையைப் பொறுத்தவரை எங்களின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது வீட்டு வாடகை தான். தொழிலாளர்களின் சம்பளத்தில் 50 சதவீதம் வாடகைக்கே செலவாகிறது. அதுவும் சென்னையின் மையப்பகுதியில் இல்லாமல் கூவம் கரையோரம் தான் வசிக்க வேண்டியதிருக்கிறது. ஒரே ஒரு அறை. அதிலேயே கழிப்பறை.. அதிலேயே சமையலறை… அதிலேயே படுக்கையறை.. அதிலேயே வரவேற்பறை.. இப்படி தான் எங்களின் காலம் செல்கிறது. இந்த நிலையில் தொழிலாளர்களின் மிகப்பெரிய தேவையாக இருப்பது சொந்த வீடு.

சென்னையில் வாடகை கொடுத்து விட்டு திரைப்பட தொழிலாளர்கள் வசிக்க இயலாது. திரைப்படத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் போன்ற பல வசதிகளை நல்ல மனம் படைத்த ஏ சி சண்முகம், டாக்டர் ஐசரி கணேஷ், எஸ் ஆர் எம் உள்ளிட்ட பல பெரியோர்கள் உதவி செய்கிறார்கள். இவர்களின் மூலம் ஆண்டுதோறும் நூறு மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வியும், இலவச மருத்துவ வசதியும் கிடைத்து வருகிறது. ஆனால் வீடு மட்டும் கனவாகவே இருந்து வருகிறது.

1995ஆம் ஆண்டில் வேளச்சேரியில் எண்பத்தி ஐந்து ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு எங்களால் பல்வேறு காரணங்களால் வீடு கட்ட இயலவில்லை. அந்த இடத்தை மீண்டும் தமிழக அரசு எடுத்துக்கொண்டது. இன்றைக்கு அந்த இடத்தின் மதிப்பு 1,000 கோடி ரூபாய். அந்த நிலத்தின் மதிப்பு அன்றைய காலகட்டத்தில் எங்களுக்கு தெரியவில்லை.

அதன்பிறகு இயக்குனர் வி சி குகநாதன் மறைந்த இயக்குநர் ராமநாராயணன் இவர்களின் சீரிய முயற்சியால் 2010ஆம் ஆண்டில் 100 ஏக்கர் நிலம் திரைப்படத்துறைக்காக அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் 65 ஏக்கர் பெப்சி தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிலும் 50 ஏக்கர் குடியிருப்புப் பகுதிகளாகவும், 15 ஏக்கர் படப்பிடிப்பு தளங்களாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தில் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக போராடிக்கொண்டே இருக்கிறோம். இன்று வரை நிறைவேறவில்லை .அது கனவாகவே தான் நீடிக்கிறது.

இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணித்து தரும் கட்டிட கட்டுமான நிறுவனங்கள் எங்களிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்பொழுது, அட்வான்ஸ் தொகை எவ்வளவு தருவீர்கள்? என கேட்டனர்.  அத்துடன் பணத்தை எந்த காலகட்டத்தில்… எவ்வளவு தருவீர்கள்? என்ற திட்டத்தையும் கேட்டனர். கட்டுமான பணியை தொடங்க வேண்டுமென்றால் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதத்தை வழங்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இது இதன் திட்ட மதிப்பீடு 800 கோடி ரூபாய். இதன் 10 சதவீதம் என்பது 80 கோடி ரூபாய்.

நமக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலத்தில் 9 ஆயிரம் குடியிருப்புகளை கட்ட இயலும். 9000 திரைப்பட தொழிலாளர்களின் கனவு நனவாகும். இதற்காக கடனுதவி பெறுவதற்கு வங்கிகளை அணுகும்போது எங்களிடம் அவர்கள் வருமான வரி சான்று உள்ளிட்ட பல விவரங்களை கேட்டனர். இங்கு யாரெல்லாம் வீடு கட்ட வேண்டும் என்று எண்ணுகிறார்களோ.. அவர்களிடம் வங்கி கேட்கும் எந்த விவரங்களும் இல்லை. இது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் பல்வேறு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். எதிலும் வெற்றி கிடைக்கவில்லை.

இந்த தருணத்தில் கடவுளின் ஆசியாக.. தற்போதைய கட்டுமான நிறுவன உரிமையாளர் சுரேஷ்பாபு, உதவி இயக்குனர் ராஜசேகர் என்பவர் மூலம் அறிமுகமானார். அவர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மட்டுமல்ல, திரைப்படத் தயாரிப்பாளரும் கூட அவரை திரைப்பட சம்மேளனம் அலுவலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் கட்டுமானத்தை நிறைவு செய்த பிறகு பணத்தை பெறுகிறேன் என்று கூறியதுடன், இதற்கான வங்கி கடனுதவி ஏற்பாடுகளையும் செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். அப்போது அவரிடம் முன்பணமாக எதையும் வழங்க இயலாது என்றும், இரண்டு தளங்கள் எழுப்பப்பட்ட பிறகு எங்களுடைய உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அதன் பிறகு அவர்களிடமிருந்து வசூல் செய்து தருகிறோம் என தெரிவித்தோம். இந்த உறுதிமொழியை அவர் ஏற்றுக்கொண்டு, இங்கு வருகை தந்துள்ளார். அவருக்கு இந்த தருணத்தில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில் முதல் கட்டமாக ஆயிரம் பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட  திட்டமிட்டபோது, இதற்கு 20 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. 2018ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், 200லிருந்து 250 தொழிலாளர்கள் ஆர்வமுடன் இதில் இணைந்து பணம் கட்டத் தொடங்கினார். கொரோனா காலகட்டத்தில் அப்படியே ஸ்தம்பித்தது. பணம் செலுத்திய உறுப்பினர்கள், செலுத்திய பணத்தை திரும்ப பெற வாய்ப்பு இருக்கிறதா? என கேட்டார்கள். ஒரு கட்டத்தில் எனக்கும் கூட இந்த திட்டம் நிறைவேறாமல் போய்விடுமோ..! என்ற கவலை ஏற்பட்டது.

இந்த தருணத்தில் சிறிய நம்பிக்கை தரும் ஒளி தென்பட்டது. அவர்தான் விஜய் சேதுபதி. ஒரு முறை அவரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக பேசியபோது, உங்களுக்கு எவ்வளவு நிதி உதவி வேண்டும்? எனக் கேட்டார். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். அந்த தருணத்தில் எங்களுடைய இலக்கு 20 கோடி. இவரிடத்தில் 2 கோடி கேட்டாலும், அது அதிகம் என்று எண்ணி விடுவாரோ… என எண்ணி, உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை கொடுங்கள் என்று கேட்டோம். பிறகு 3 முதல் 5 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என விவரித்தோம்.

இதைக் கேட்டு அவர் கோபப்படவில்லை சலனப்படவில்லை. ஆறு மாத கால அவகாசம் தாருங்கள் அதன்பிறகு ஏதேனும் ஒரு தொகையை உதவியாக தருகிறேன் என சொன்னார். சொன்னது போல் ஓராண்டிற்குப் பிறகு என்னை தொடர்பு கொண்டு, ஒரு கோடி ரூபாயை தருகிறேன் என சொன்னார். இது போன்ற மனிதர்களால் தான் உலகம் தழைத்தோங்குகிறது. எந்த பிரதிபலனும் பாராமல் இவர் வழங்கும் இந்த நிதி உதவிக்காக பெப்சி தொழிலாளர்கள் என்றென்றைக்கும் அவருக்கு நன்றியுடன் இருப்பார்கள்.

எங்களின் குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தம் ஒன்பது தொகுதிகளாக கட்டப்பட இருக்கிறது . இதில் ஒரு தொகுதிக்கு 248 குடியிருப்புகள் இடம்பெறும். இதில் ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு ‘விஜயசேதுபதி டவர்’ என பெயரிட்டிருக்கிறோம். இந்த பெயர் சூட்டலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தாலும், அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், நாங்கள் சூட்டி இருக்கிறோம். இந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முழுவதும் விஜயசேதுபதி கடவுளாக தான் தெரிவார்” என்றார்.

Read previous post:
0a1a
மயில்சாமி பிறந்தநாள்: படக்குழுவினருக்கு பிரியாணி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

"Article 15" திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், நடிகை தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும்  நடிக்கிறார்கள். Zee Studios மற்றும் போனி கபூரின் Bayview

Close