விஜய்யை தவிர வெளியுலகில் வேறு எதையும் விரும்பாத பழங்குடி மக்கள்!

தமிழ்நாட்டை அடுத்து நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கும் மாநிலம் கேரளா. அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிக திரையரங்குகளில் பல விஜய் படங்கள் வெளியாகி, வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன.

கேரள மாநிலம் பாலக்காட்டில் துணை கலெக்டராக பணிபுரிந்து வருபவர் உமேஷ் கேசவன். அவர் சமீபத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் அட்டப்பாடி பகுதிக்கு சென்று ஆய்வு செய்திருக்கிறார். அங்கு சென்று வந்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாலக்காட்டில் பழங்குடி மக்கள் வசிக்கும் அட்டப்பாடி பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சாலைகள் இல்லை, தெரு விளக்குகள் இல்லை. ‘உங்கள் இடத்தில் கழிவறை வசதி இருக்கிறதா?’ எனக் கேட்டால், ‘இந்த மலையைச் சுற்றியுள்ள இடமே எங்கள் கழிவறை’ என்கிறார்கள்.

“அரசாங்கத்தின் மீது அம்மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. அங்கிருக்கும் சிறுவர் – சிறுமியரில் பெரும்பாலானோருக்கு பள்ளி செல்ல விருப்பமில்லை. பள்ளிப் படிப்பால் பயனில்லை என அவர்கள் நினைக்கிறார்கள். தங்கள் சமூகத்துக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. ‘விவசாய வேலை இல்லாத நாட்களில் டி.வி.யில் விஜய் படங்கள் பார்க்கிறோம்’ என்கின்றனர்.

“அரசாங்கம் ஒதுக்கிய கோடிக்கணக்கான பணத்தில் எதுவும் அவர்களை சென்றடையவில்லை. அவர்களைச் சென்றடைந்திருக்கும் ஒரே விஷயம் – விஜய்'” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், அம்மக்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வை கொண்டு வர,  விஜய்யை இங்கு அழைத்து வர அவரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் உமேஷ் கேசவன்.

துணை கலெக்டரின் அழைப்பை ஏற்று, பழங்குடி மக்களை விஜய் சந்தித்து, அவர்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவாரா?