இந்திரா – விமர்சனம்

நடிப்பு: வசந்த் ரவி, சுனில், மெஹ்ரின் பிர்ஸாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண் குமார், ராஜ்குமார், சுமேஷ் மூர், கஜராஜ் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சபரீஷ் நந்தா

ஒளிப்பதிவு: பிரபு ராகவ்

படத்தொகுப்பு: பிரவீன் கேஎல்

இசை: அஜ்மல் தஹ்சீன்

ஸ்டண்ட்: விக்கி

தயாரிப்பு வடிவமைப்பு: சூர்யா ராஜீவன்

தயாரிப்பு: ஜேஎஸ்எம் மூவி புரொடக்சன், எம்பரர் எண்டர்டெயின்மெண்ட்

தயாரிப்பாளர்: ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக்

இணை தயாரிப்பு: வி.மதுசூதன்

தமிழ்நாடு ரிலீஸ்: ’ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்’ ஆர் ரவீந்திரன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார் (எஸ் 2 மீடியா)

’தரமணி’, ’ராக்கி’, ’அஸ்வின்ஸ்’, ’ஜெயிலர்’, ’பொன் ஒன்று கண்டேன்’, ’வெப்பன்’ போன்ற வித்தியாசமான படக்கதைகளையும், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து, தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகர் வசந்த் ரவி, அவரது நடிப்பில், ’கிரைம் புலனாய்வு திரில்லர்’ என்றும், ‘போலீஸ் ஸ்டோரி’ என்றும் சொல்லக்கூடிய ஜானரில் உருவாகி, தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘இந்திரா’ திரைப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

இப்படத்தில் கதை நாயகனான வசந்த் ரவியின் பெயர் – இந்திரகுமார். அதன் சுருக்கமே – இந்திரா. அதுவே இப்படத்தின் தலைப்பாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படக்கதை முழுக்க முழுக்க சென்னையில் நடைபெறுவதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் நாயகன் இந்திரா (வசந்த் ரவி). குடிபோதையில் போலீஸ் வாகனத்தை ஓட்டி வரும்போது ஒரு விபத்தை ஏற்படுத்தியதால், அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். இடைநீக்க காலம் முடிந்த பின்னரும் தன்னை பணிக்கு அழைக்கவில்லை என்ற கோபத்திலும், தனது காதல் மனைவி கயல் (மெஹ்ரின் பிர்ஸாடா) தன் மீது கொண்ட வெறுப்பில் பட்டும் படாமல் தன்னுடன் வாழ்ந்து வருகிறார் என்ற ஆத்திரத்திலும் அவர் இன்னும் அதிகமாக குடிக்க ஆரம்பிக்கிறார். விளைவாக, கண்பார்வையை இழக்கிறார்.

இதனிடையே, தன்னை கடுப்பேற்றும் நபர்களை ஈவு இரக்கமின்றி படுகொலைகள் செய்து வருகிறார் சீரியல் கில்லரான அபிமன்யு (சுனில்). கொல்லப்பட்டவரின் கையை மட்டும் தனியே வெட்டி வீசிவிடுவது அவரது பாணி. அவர் செய்யும் கொலைகள் பற்றிய செய்திகளால் சென்னை மாநகரமே பீதியில் கிடக்கிறது. இந்திராவுக்குப் பதிலாக திருவான்மியூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் நாகேந்திரா (கல்யாண் குமார்), சீரியல் கில்லரை கண்டுபிடித்து கைது செய்வதற்காக தீவிர புலன்விசாரணையில் இறங்குகிறார். ஆனால், கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்.

இந்நிலையில், இந்திராவின் மனைவி கயல், மர்மமான முறையில், வீட்டு ஃபேனில் சடலமாக தொங்கிக் கொண்டிருக்கிறார். அவரது கை துண்டிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த அறையில் தூங்கி எழுந்து வரும் பார்வை இழந்த இந்திரா, தன் மனைவி தூக்கில் தொங்குவதை உணர்ந்து, அதிர்ந்து கதறி அழுகிறார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகேந்திரா விரைந்து வருகிறார். இந்திரா – கயல் தம்பதியினரின் வீடு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் வெளியார் யாரும் வரவில்லை என சிசிடிவி ஃபுட்டேஜ் தெரிவிப்பதாலும், சம்பவம் நடக்கும்போது, அந்த வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததாலும், வீட்டுக்குள் இந்திரா, கயல் ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதாலும், இந்திரா தான் தன் மனைவியை கொலை செய்திருக்கிறார் என்று சந்தேகிக்கிறார் இன்ஸ்பெக்டர் நாகேந்திரா.

தன் மனைவியைக் கொன்ற கயவனை கண்டுபிடித்து பழி தீர்க்க வேண்டும் என்று கொந்தளிக்கும் இந்திரா, இதற்குமுன் கொலை செய்யப்பட்டு, கை துண்டிக்கப்பட்ட சம்பவங்களிலிருந்து கிடைத்திருக்கும் தடயங்களை வைத்து, தனது போலீஸ் நண்பர் (ராஜ்குமார்) உதவியுடன், சீரியல் கில்லரான அபிமன்யுவை கண்டுபிடித்து, அவருடன் கடுமையாக மோதி, போராடி, பிடித்து, போலீஸில் ஒப்படைக்கிறார்.

போலீஸ் நிலையத்தில் அபிமன்யுவை அடித்துத் துவைத்து, கை துண்டிக்கப்பட்ட ஐந்து கொலைகள் பற்றி விசாரிக்கும்போது, “நான் சிறுவயதில் பள்ளிக்கூட வாத்தியாரையும், என் நண்பனையும் கொன்றது முதல் இதுவரை 28 கொலைகள் செஞ்சிருக்கேன். கடைசி நாலு கொலைகளில் தான் கையை வெட்டி வீசும் பாணியை அரங்கேற்றினேன். கண்டுபிடிச்சிட்டீங்க” என்று அசால்டாக சொல்லிவிட்டு, போலீசார் காட்டும் புகைப்படங்களைப் பார்க்கிறார். நான்கு பேரை கொன்றதை ஒப்புக்கொள்ளும் அபிமன்யு, ஐந்தாவது நபரான கயலின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, “யார் இந்த பெண்? இவரை நான் கொல்லவில்லை. இவர் யாரென்றே எனக்குத் தெரியாது” என்று உறுதிபடச் சொல்லி, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.

எனில், சீரியல் கில்லர் அபிமன்யுவின் பாணியைப் பின்பற்றி கயலைக் கொன்றது யார்? காரணம் என்ன? உள்பக்கம் பூட்டியிருக்கும் வீட்டுக்குள் கொலையாளி நுழைந்தது எப்படி? குற்றவாளி போலீசில் சிக்கினாரா? இந்திரா மீண்டும் கண் பார்வை பெற்றாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு யூகிக்க இயலாத திருப்பங்களுடன் பரபரப்பாக விடை அளிக்கிறது ‘இந்திரா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதை நாயகன் இந்திரா என்ற இந்திரகுமாராக வசந்த் ரவி நடித்திருக்கிறார். வழக்கம் போல் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, ‘பார்வையை இழந்தவர்’ என்ற சவாலான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னை வெறுக்கும் மனைவி மீது பாசத்தைப் பொழிவதிலாகட்டும், மனைவி கொல்லப்பட்ட பின் துணையின்றி தவிப்பதிலாகட்டும், பார்வை இல்லாத நிலையிலேயே சீரியல் கில்லருடன் ஆவேசமாக மோதும் சண்டைக் காட்சியிலாகட்டும், இறுதியில் அவரது வீட்டில் அவருக்கும் கொலையாளிக்கும் இடையே நடக்கும் பயங்கர சண்டைக் காட்சியிலாகட்டும்… வசந்த் ரவி தனக்கேயுரித்தான அழுத்தமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை, செறிவான உடல்மொழி மற்றும் முகபாவனையுடன் வழங்கியிருக்கிறார். பாராட்டுகள் வசந்த் ரவி.

நாயகனின் மனைவி கயலாக மெஹ்ரின் பிர்ஸோடா நடித்திருக்கிறார். திரையில் குறைவான நேரமே வந்தாலும், குறைவின்றி நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

சீரியல் கில்லர் அபிமன்யுவாக சுனில் நடித்திருக்கிறார். பார்வையாலும், அலட்சியமான சிரிப்பாலும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

நாயகனின் வீட்டு வேலைக்காரப் பெண் மதியாக அனிகா சுரேந்திரனும், அவரது காதலராகவும், இலங்கைத் தமிழ் அகதியாகவும் வரும் சுமேஷ் மூரும் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் அற்புதமான கேரக்டர்கள். இதை அவர்கள் நன்கு உணர்ந்து நடித்து, படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, சுமேஷ் மூரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பிரமாதம்.

நாயகனின் போலீஸ் நண்பராக வரும் ராஜ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகேந்திராவாக வரும் கல்யாண் குமார், போலீஸ்காரராக வரும் கஜராஜ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சபரீஷ் நந்தா. வித்தியாசமான கிரைம் புலனாய்வு திரில்லர் கதைக்கு, குழப்பம் இல்லாத வகையில் தெளிவான கதாபாத்திரங்களைப் படைத்து, எதிர்பாராத திருப்பங்களுடன் லாவகமாக திரைக்கதை அமைத்து, தேவையற்ற காட்சிகளில் சஸ்பென்ஸ் கசிந்துவிடாமல், கவனமாகவும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். சபரீஷ் நந்தா… சபாஷ் நந்தா…!

அஜ்மல் தஹ்சீனின் இசை, பிரபு ராகவின் ஒளிப்பதிவு, பிரவீன் கேஎல்லின் படத்தொகுப்பு, விக்கியின் ஸ்டண்ட் அமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் நேர்த்திக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘இந்திரா’ – வசந்த் ரவியின் அற்புதமான நடிப்புக்காகவும், திடுக்கிட வைக்கும் எதிர்பாராத திருப்பங்களுக்காகவும் பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3.75/5