வாழ்வு தொடங்குமிடம் நீதானே – விமர்சனம்

நடிப்பு: சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபெராஸ், ஆறுமுகவேல், ஆர்ஜே பிரதீப், ஷங்கர், நிரஞ்சன், தஸ்மிகா, கண்ணன், மாறன் கார்த்திகேயன், எச்.எம்.மகேஷ், சிவசக்தி, சுதா, பிரசாத் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஜெயராஜ் பழனி

ஒளிப்பதிவு: எஸ்.கோபாலகிருஷ்ணன்

படத்தொகுப்பு: விக்னேஷ் ஆர்.எல்

இசை: தர்ஷன் ரவிக்குமார்

தயாரிப்பு: இசை, அதிதி இசை, அத்வைதா இசை

ஓடிடி தளம்: ஷார்ட்ஃபிளிக்ஸ்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

முற்காலத்தில், குடும்ப / சமூகத் தேவைக்காக, பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்க வேண்டியது அவசியம் என்றிருந்தபோது ஆண் – பெண் சேர்க்கை மட்டுமே முறையானது என்றும், தன்பால் சேர்க்கை முறையற்றது என்றும் சட்டங்களும், மதங்களும், நீதி நூல்களும் வரையறுத்து, உலகெங்கும் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தி வந்தன. இன்று மக்கள்தொகைப் பெருக்கத்தால் பூமி விழிபிதுங்கியிருப்பதால் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துமாறு அரசாங்கங்களே அறிவுரை வழங்குவதாலும், அறிவியல் முன்னேற்றங்கள் காரணமாகவும், குழந்தை பெறுவது அவரவரது விருப்பம் என்றாகியுள்ள நிலையில், ஆண் – பெண் சேர்க்கை போலவே தன்பால் சேர்க்கையும் முறையானது தான் என உலகின் பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவிலும் ‘LGBT (Lesbians – Gays – Bisexuals –Transgenders)’ எனப்படும் தன்பால் சேர்க்கையாளர்கள் அமைப்புகளாகத் திரண்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, “தன்பால் சேர்க்கை என்பது குற்றமல்ல; எதிர்பால் சேர்க்கையாளர்கள் போல தன்பால் சேர்க்கையாளர்களும் சமூகத்தில் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு” என்ற நிலைப்பாட்டுக்கு உச்சநீதி மன்றம் வந்துள்ளது. ஆனால், தன்பால் சேர்க்கையை இந்திய ஒன்றிய அரசும், இந்திய சமூகமும் அத்தனை எளிதாக – இயல்பான ஒன்றாக – ஏற்றுக்கொள்வதாக இல்லை. இப்போதும் அதை குற்றச்செயலாகவே பாவித்து கொந்தளிக்கின்றன. இந்த பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஷார்ட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ வாழ்வு தொடங்குமிடம் நீதானே’.

இப்படத்தின் கதை, மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடலோரம் உள்ள தரங்கம்பாடியில் நிகழ்வதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிப்பருவத்திலிருந்தே சக மாணவியான ஷகீராவை ( நிரஞ்சனா நெய்தியார்) ஒருதலையாக காதலித்து வருகிறார் இர்ஃபான் (அர்ஷத் ஃபெராஸ்). இந்நிலையில், அவரை கேட்காமலேயே அவரது வாப்பா (அப்பா) ஒரு பெண்ணை பேசி முடித்து, “அடுத்த வாரம் உனக்கு நிக்கா (கல்யாணம்)” என்று தெரிவிக்கிறார். இதைக் கேட்டு மனமொடிந்து போகிறார் இர்ஃபான். இதன்பிறகு, தனக்கு வாப்பா பார்த்திருக்கும் பெண்ணே ஷகீரா தான் என்பது தெரியவர, அளவில்லா ஆனந்தம் அடைகிறார்.

ஷகீராவிடமிருந்து இர்ஃபானுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. சந்தித்துப் பேச அழைப்பு விடுகிறார் ஷகீரா. உற்சாக வானில் சிறகடித்துப் பறக்கிறார் இர்ஃபான்.

இருவரும் கடலோரம் சந்திக்கிறார்கள். ஷகீரா மீது தான் கொண்ட காதல் பற்றி உருகி உருகி பேசிக்கொண்டிருக்கிறார் இர்ஃபான். அவரிடம், “எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார் ஷகீரா. உற்சாகம் வடிந்து முகத்தில் கவலை படர, “யாரையாவது காதலிக்கிறாயா?” என்று கேட்கிறார் இர்ஃபான். ‘ஆம்’ என்று தலையாட்டுகிறார் ஷகிரா. “பையன் யாரு?” என்று இர்ஃபான் கேட்க, “பையன் இல்ல. பொண்ணு” என்கிறார் ஷகீரா. இர்ஃபானுக்கு தூக்கி வாரிப்போடுகிறது…

… (பிளாஷ்பேக்). பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டோடு அடைந்து கிடக்கிறார் ஷகீரா. ஆவணப்படம் எடுப்பதற்காக தரங்கம்பாடிக்கு வரும் திருச்சியைச் சேர்ந்த மாடர்ன் பெண் வினோதா (சுருதி பெரியசாமி), ஷகீராவின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருக்கிறார். அப்போது இரு பெண்களுக்கும் இடையில் தன்பால் ஈர்ப்பு ஏற்படுகிறது. இருவரும் காதலுடன் தன்பால் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள். இவர்களது காதல் ஷகீராவின் வாப்பாவுக்குத் தெரியவர, அவர் இருவரையும் அடித்துத் துவைக்கிறார். வினோதாவை விரட்டிவிட்டு, ஷகீராவை வீட்டுக்குள் பூட்டி வைக்கிறார். மகளுக்கு உடனே நிக்கா செய்து வைக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடி, இர்ஃபானுக்கு பேசி முடிக்கிறார்…

ஃபிளாஷ்பேக் சொல்லி முடிக்கும் ஷகீரா, தன்னை திருச்சிக்கு அழைத்துச் சென்று தன் காதலி வினோதாவுடன் சேர்த்து வைக்குமாறு இர்ஃபானை வேண்டுகிறார்.

ஷகீராவின் கோரிக்கையை இர்ஃபான் ஏற்றுக்கொண்டாரா? அதன்பின் என்னவெல்லாம் நடந்தது? என்பதை புத்தம் புதுசாக சொல்லிச் செல்கிறது ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ திரைப்படத்தின் மீதிக்கதை.

ஷகீரா என்ற இஸ்லாமியப் பெண்ணாக நிரஞ்சனா நெய்தியாரும், ஆவணப்படம் இயக்கும் வினோதா என்ற நவநாகரிகப் பெண்ணாக சுருதி பெரியசாமியும் நடித்திருக்கிறார்கள். இருவரும் தத்தமது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தங்களுக்கிடையே தன்பால் ஈர்ப்பு ஏற்படுவதையும், உணர்வுப்பூர்வமான காதல் பகிர்வையும், ஆபாசமில்லாமல், மிகவும் யதார்த்தமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். தங்களது காதலுறவை நிலை நாட்டுவதற்காக அவர்கள் ரத்தம் சிந்தி நடத்தும் போராட்டம் பார்வையாளர்களைக் கண் கலங்க வைக்கிறது.

ஷகீராவை ஒருதலையாகக் காதலிப்பதோடு, அவருக்கே மாப்பிள்ளையாக நிச்சயிக்கப்படும் இர்ஃபான் கதாபாத்திரத்தில் வருகிறார் அர்ஷத் ஃபெராஸ். மனசுக்குப் பிடித்த பெண்ணே தனக்கு மனைவியாகப் போகிறார் என தெரிந்து ஆனந்தம் கொள்வது, ஆனால் அந்தப் பெண்ணோ தங்கள் மார்க்கம் ஏற்காத ஒரு காதலுறவில் இருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைவது, அதன்பின் ‘வருவது வரட்டும்’ என்று தான் காதலித்த பெண்ணின் ஆசையை நிறைவேற்ற களத்தில் குதிப்பது ஆகிய அனைத்து நிலைகளிலும் அவர் அருமையாக நடித்திருக்கிறார்.

பரபரவென நகரும் தொண்ணூறு நிமிட திரைப்படத்தில், துளியும் ஆபாசத்துக்கோ, இரட்டை அர்த்த வசனத்துக்கோ இடம் கொடுக்காமல், ஆண் – பெண் காதல் போல தன்பால் காதலும் இயல்பானதே, மதித்து அங்கீகரிக்கத்தக்கதே  என்பதை நேர்மையாக, உளப்பூர்வமாக, அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ் பழனி. பாராட்டுகள். கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், அதற்கேற்ற நடிப்புக் கலைஞர்களின் தேர்வும், அவர்களை வேலை வாங்கிய விதமும் கச்சிதம். இது போன்ற சிறந்த படைப்புகளை எதிர்காலத்திலும் அவர் நிறைய படைப்பார் என்று நம்புவோம்.

கதையை மீறி பயணிக்காமல், அதே நேரத்தில் கடலையும், கடல் சார்ந்த இடங்களையும் கவித்துவமாய் படம் பிடித்திருத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

ஆரம்பத்தில் டைட்டில்கள் போடும்போது ஒலிக்கும் வித்தியாசமான பின்னணி இசையைக் கேட்கும்போதே இசையமைப்பாளர் யார் என தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது. பின்னணி இசையை படம் முழுவதும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் தர்ஷன் ரவிக்குமார்.

‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ – நம் கல்மனதை இளக்கி பண்படுத்தும் நல்ல படம்; அவசியம் பாருங்கள்!