ஆபத்தான கிணறுகளை மூட உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

எப்போதும் நம் அரசுகள் நம்மை ஒரு கையறு நிலையில் கொண்டு விடுமே அதே மனநிலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சுஜித் வில்சனுக்கு ஒப்பாரி பாடவும் மனம் வருந்தவும் எங்கள் குடும்பத்துக்கு ஒப்பு இல்லை. கருணை அல்லது இரக்கம் போன்ற அலங்கார தற்காப்புகளில் ஒளிந்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை.

சுஜித்தின் மீட்பு பணியில் அரசு போட்டுக் கொண்டிருந்த நாடகம், மக்களின் வழக்கமான வேடிக்கை பார்க்கும் மனநிலை, எதிர்ப்புணர்ச்சியை கூட கால, நேரம் பார்த்து வெளிப்படுத்த சொல்லும் பொதுப்புத்தி, ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை, முதலாளிகளின் வசத்தில் மட்டுமே இருக்கும் அறிவியல், எல்லாவற்றுக்கும் ஊடாக சுஜித்தின் மதம் சார்ந்து பேசி விஷம் பரப்பிக் கொண்டிருந்த சங்கிகள் என எங்களின் மதிய உணவு நேரம் உணவை காட்டிலும் காரசாரம் கொண்டிருந்தது.

வீட்டுக்கு பின் இருந்த உறைகிணறு பற்றிய பேச்சு வந்தது. சென்னை மவுலிவாக்கத்துக்கு அருகே இருக்கும் பரணிபுத்தூர் பகுதியில் எங்கள் வீடு உள்ளது. பத்தாண்டுகளாக வசிக்கிறோம். வீட்டுக்கு பின்னாலிருக்கும் மனையின் உரிமையாளரென எவர் வந்தும் பார்த்தது கிடையாது. காம்பவுண்டு ஏதும் கட்டப்படாமல் திறந்த வெளி. ஆரம்பத்தில் கிணறு மூடப்பட்டிருந்தது. எவரோ சிலரின் மது விருப்பத்துக்கு பிற்பாடு மூடி பெயர்க்கப்பட்டது. கிணற்றில் தவறி விழுந்த நாயின் ஓலமே அங்கு கிணறு இருப்பதை ஊருக்கு அறிவித்தது.

டீக்கடை செல்கையில் அப்பா விசாரித்து பார்த்திருக்கிறார். பஞ்சாயத்து பிரசிடெண்ட்டை கை காட்டியிருக்கிறார்கள். அந்தோ பரிதாபம், உள்ளாட்சி தேர்தலும் கிணற்றில் விழுந்த நாயாக இருக்கிறது. பிறகொரு முறை கோழி ஒன்று விழுந்தது. அம்மா உடனே பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லியிருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் கோழியாம். கிணற்றுக்குள் கயிறை விட்டு பத்திரமாக கோழியை காப்பாற்றி கொண்டார்கள்.

கிணற்றின் வாய் அடையவில்லை!

பொதுவாக இதுபோன்ற விஷயங்களில் நமக்கு உள்ள பிரச்சினை ஒன்று இருக்கிறது. அரசு!

முன்பொரு முறை கருவேல மரங்களை அகற்ற சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நேரத்திலும் இத்தகைய முயற்சிகளை எடுப்பதற்கு தடையாக இருந்தது அரசின் முறைமைகள்தாம். ‘அவரிடம் அனுமதி வாங்கு, இங்கே கையெழுத்து வாங்கு, அவரை கவனி’ என பல கெடுபிடிகளுக்குள் ஒரு சாமானியனை அலைக்கழித்து, தோன்றும் எண்ணத்தையே குழி தோண்டி புதைக்க வைத்துவிடும். சீர்கேட்டை முறையிட செல்பவனையே குற்றவாளி போல நடத்தும். எண்ணி எண்ணி சேமித்து வைக்கக்கூடிய அனுபவங்கள் பலவற்றை அரசு பல தருணங்களில் கொடுத்திருப்பதால், உறைகிணறு விஷயத்தில் என்ன செய்வதென்கிற சிந்தனை பல மாதங்களாகவே மூளைக்குள் ஓடிய எலியாக சுற்றிக் கொண்டிருந்தது. சுஜித் தலையை தட்டி செயல்பட சொன்னான். அந்த நேரத்தில்தான் எனக்கு ஓர் அமைப்பின் முகநூல் பதிவு கண்ணில்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

0a1cஎல்லா பேரிடர் காலங்களிலும் தன்னலம் கருதாது தொடர்ந்து மக்களின் நலனுக்காக உழைத்து வரும் முக்கியமான சமூக அமைப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். 2015ஆம் ஆண்டின் வெள்ளகாலத்திருந்தே நேரடியாகவும் செய்திகளாகவும் அவர்களின் உழைப்பை பார்த்து வந்திருக்கிறோம். ஆகவே அந்த பதிவிலிருக்கும் எண்ணுக்கு தொடர்பு கொள்வது என முடிவெடுத்தோம். எண்ணை அழைத்ததும் அழைப்பை ஏற்றவர் திண்டுக்கல்லில் இருந்தார். நிலவரத்தை சொல்லிக் கேட்டதும், அருகே இருக்கும் அமைப்பின் தோழர்களுக்கு தகவல் கொடுப்பதாக சொன்னார். பிறகு எங்கள் வேலைகளை பார்க்கத் தொடங்கிவிட்டோம்.

பெரும்பாலான நேரங்களில் அழைக்கப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இரண்டாம் முறை அழைப்பதில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து அழைத்தார்கள். சில மணி நேரங்களிலேயே அழைத்து, முகவரியை பெற்றுக் கொண்டனர்.

பொழுது விடிந்தது. அருகிலுள்ள பட்டூரிலிருந்து இம்ரான் உள்ளிட்ட மூன்று பேர் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். இடத்தை குறித்துக் கொண்டார்கள். ஒரு ஆட்டோவில் இடத்துக்கு வந்திறங்கி கிணற்றை ஆராய்ந்தார்கள். அளவு குறித்துக் கொண்டார்கள். சென்றார்கள். மீண்டும் வருகையில் ஒரு மூடியை எடுத்து வந்தார்கள். கிணற்றில் வைத்து மூடி பூசினார்கள்.

0a1a

மறுமூலையில் சுஜித்தை ஒளித்து மறைத்து அரசு புதைத்துக் கொண்டிருந்தது!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தோழர்களுக்கு தேநீர் கொடுத்தோம். அன்புடன் ஏற்றுக் கொண்டனர். அன்பை மட்டுமே எதிர்பார்த்தனர். நன்றி கூறினோம். நன்றி கூறினார்கள். வேறெங்கும் ஆழ்துளை கிணறுகள் மூடப்பட வேண்டுமெனில் அவர்களின் தொடர்பு எண்ணை கொடுக்கச் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

உங்களுக்கும் மனதிலோ வெளியிலோ ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் ஆபத்தான சூழலில் இருந்தால், உடனே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தொடர்பு கொள்ளுங்கள். தோழர்கள், அரசை போலில்லாமல் மனமுவந்து முழு அன்புடன் உதவுகிறார்கள்.

RAJASANGEETHAN

 

Read previous post:
0a1a
சுஜித் வில்சன் மரணம் நமக்கு சொல்லும் பாடங்கள்: பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: தனி மனிதனாக, சமூகமாக, அரசமைப்பாக நாம் படுதோல்வி அடைந்துள்ளோம். இதைத்தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து போன சுஜித் வில்சன்

Close