தி ரோட் – விமர்சனம்

நடிப்பு: த்ரிஷா, ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, செம்மலர் அன்னம் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: அருண் வசீகரன்

ஒளிப்பதிவு: கே.ஜி.வெங்கடேஷ்

படத்தொகுப்பு: ஏ.ஆர்.சிவராஜ்

இசை: சாம் சிஎஸ்

தயாரிப்பு: ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட்

பத்திரிகை தொடர்பு: டைமண்ட் பாபு

நாயகனை முதன்மைப்படுத்தும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களே பெரும்பாலும் தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், எப்போதாவது நாயகியை முதன்மைப்படுத்தும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களும் வெளிவருவதுண்டு. அவற்றில் சில படங்கள் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றதும் உண்டு. அந்த வகையில், சுமார் இருபது ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்திருக்கும் த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் தான் ‘தி ரோட்’.

இதன் கதை என்னவென்றால், சென்னையில் பத்து வயது மகன், கணவர் (சந்தோஷ் பிரதாப்) சகிதம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் மீரா (த்ரிஷா). மகனின் பிறந்தநாளை ஆனந்தமாகக் கொண்டாடும் வகையில் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு காரில் சுற்றுலா போய் வர திட்டமிடுகிறார். ஆனால், அவர் எட்டு வார கர்ப்பிணியாக இருப்பதால் காரில் ‘லாங் ட்ரிப்’ போவது நல்லதல்ல என மருத்துவர் எச்சரிக்கிறார். விமானத்தில் போகலாம் என்றால், அது காரில் போவது போல ஜாலியாக இருக்காது என்கிறார் கணவர். இதனால், மகனும் கணவரும் மட்டும் காரில் கன்னியாகுமரி போய் வருவது என முடிவாகிறது. அவர்களை மீரா இன்முகத்துடன் வழியனுப்பி வைக்கிறார்.

மீராவின் கணவரும், மகனும் செல்லும் கார் மதுரை அருகே எதிர்பாராத விதமாக பயங்கர விபத்தில் சிக்குகிறது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள். இந்த துயர நிகழ்வால் துக்கித்து, மன உளைச்சலில் தவிக்கும் மீரா, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் செல்கிறார். அங்கே அவர் கண் முன்னே சந்தேகத்தைத் தூண்டும் சில மர்மமான விஷயங்கள் நிகழ்கின்றன. அந்த நெடுஞ்சாலையின் அதே இடத்தில் இதற்குமுன் பல விபத்துகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு பலர் உயிரிழந்திருப்பது மீராவுக்குத் தெரிய வருகிறது. இதன் பின்னணியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் மீரா…

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், மதுரையில் உள்ள கலை – அறிவியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுகிறார் மாயா (டான்சிங் ரோஸ்’ ஷபீர்). அவரை பகிரங்கமாகவே ஒருதலையாய் காதலிக்கிறார் ஒரு மாணவி. தனது காதலை பேராசிரியர் மாயா ஏற்க மறுக்கிறார் என்ற ஆத்திரத்தில், அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக பொய்க் குற்றச்சாட்டு கூறி அந்த மாணவி நாடகமாடுகிறார். விளைவாக, மாயா பணி நீக்கம் செய்யப்படுகிறார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதால் அவமானப்படுத்தப்படுகிறார். வேறு வேலை கிடைக்காததால், பட்ட கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கிறார். விரக்தியில், லாரிமுன் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் நெடுஞ்சாலைக்கு வருகிறார்…

பேராசிரியர் மாயாவின் தற்கொலை முயற்சி என்ன ஆனது? குறிப்பிட்ட நெடுஞ்சாலையில் நிகழும் தொடர் விபத்துகளின் பின்னணியில் உள்ள மர்மத்தை மீரா கண்டுபிடித்தாரா? மீராவின் ட்ராக்கும், மாயாவின் ட்ராக்கும் எந்த கட்டத்தில் ஒரே புள்ளியாய் இணைந்தன? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘தி ரோட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகி மீராவாக படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் மட்டும் அல்ல, பத்து வயது சிறுவனுக்கு அம்மாவாகவும் நடிக்க ஒப்புக்கொண்ட த்ரிஷாவின் தைரியத்தை பாராட்டலாம். ஆரம்பத்தில் மகனிடமும், கணவரிடமும் காட்டும் அன்னியோன்யம், இருவரையும் விபத்தில் இழந்ததால் ஏற்படும் தவிப்பு, அவர்களது மரணத்தில் தென்படும் மர்மம் ஏற்படுத்தும் திகைப்பு, மர்மத்தை அவிழ்க்க துணிச்சலாக தேடுதல் வேட்டையில் காட்டும் தீவிரம், மர்மம் அம்பலமானவுடன் அதிரடி ஆக்ஷனில் குதிக்கும் ஆக்ரோஷம் என அனைத்து உணர்ச்சிகளையும் துல்லியமாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.

த்ரிஷாவின் மீரா கதாபாத்திரத்துக்கு இணையான பேராசியர் மாயா கதாபாத்திரத்தில் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் அருமையாக நடித்திருக்கிறார். பேராசிரியர் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும் அவர், ஒரு மாணவி சுமத்திய அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டால் வேலையை, வருமானத்தை இழந்து நடுத்தெருவுக்கு வருகையில், பார்வையாளர்களின் அனுதாபத்தை அள்ளுகிறார். அதன்பின் கதையில் அவர் ஏற்படுத்தும் மாற்றம் எதிர்பாராதது; ரசனைக்கு உரியது.

நாயகியின் கணவராக சந்தோஷ் பிரதாப் சிறிது நேரமே வந்தாலும் கவனம் பெறுகிறார். பேராசிரியர் மாயாவின் பாசமான அப்பாவாக வரும் வேல ராம்மூர்த்தி, நாயகியின் சினேகிதியாக வரும் மியா ஜார்ஜ், மியா ஜார்ஜின் கணவராக வரும் விவேக் பிரசன்னா, நாயகி நடத்தும் தேடுதல் வேட்டைக்கு உதவும் போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்து மரணங்கள் தற்செயலானவை அல்ல, திட்டமிட்ட கொலைகள் என்பதை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிறுவியிருக்கிறார். படத்தின் முதல் பாதியை ஒரு கிரைம் திரில்லருக்கு உரிய விறுவிறுப்புடன் நகர்த்தியிருப்பதைப் போல, இரண்டாம் பாதியையும் எங்கெங்கோ சுற்ற விடாமல் சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தால் படத்தை இன்னும் சிறப்பாக ரசித்திருக்க முடியும்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை பார்வையாளர்களின் காதுகளை பதம் பார்க்கிறது. ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷின் காமிரா, ஒரு கிரைம் திரில்லருக்குத் தேவையான அச்சத்தை ஏற்படுத்துகிறது. படத்தொகுப்பாளர் ஏ.ஆர்.சிவராஜ் படத்தின் இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்து சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம்.

’தி ரோட்’ – கண்டு களிக்கத் தக்க விறுவிறுப்பான பயணம்!