தி லெஜண்ட் – விமர்சனம்

நடிப்பு: லெஜண்ட் சரவணன், கீத்திகா திவாரி, ஊர்வசி ரவுட்டெலா, விவேக், பிரபு, விஜயகுமார், நாசர் மற்றும் பலர்

இயக்கம்: ஜேடி – ஜெர்ரி

தயாரிப்பு: லெஜண்ட் சரவணன்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

படத்தொகுப்பு: ரூபன்

மக்கள் தொடர்பு: நிகில்

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பதிவு:

தாமதமாக இப்போதுதான் பார்த்தேன். படத்தில் நானும் பங்களித்திருப்பதால் இந்த முறையும் பார்த்தவர்கள், மீடியா விமரிசகர்கள் இவர்களின் கருத்துக்களை மட்டும் பட்டியலிடுகிறேன்.

படம் முன்னணி கதாநாயகர்களின் படம் போல மிக பிரமாண்டமாய் இருக்கிறது.

உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜி படங்களை நினைவூட்டும் பழைய கதை.

ஒளிப்பதிவு, பாடல்கள் மற்றும் பின்னணி இசை, நடனம், ஆர்ட் டைரக்‌ஷன், காஸ்ட்யூம்ஸ், சண்டைக் காட்சிகள், லொக்கேஷன்ஸ் எல்லாமே உயர்ந்த தரத்தில்.

அடுத்தடுத்த நிகழ்வுகளை யூகிக்க முடிகிற முடிச்சுகளற்ற திரைக்கதை.

படத்தில் சொல்லப்படும் நல்ல கருத்துகளும், மையக் கருவும் சமூகத்திற்குத் தேவையானவை.

ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் காமெடி பெரிதாக எடுபடவில்லை.

இரண்டு கதாநாயகிகளும் வெறும் பாடல்களுக்கு மட்டுமே வந்து போகாமல் கதையில் முக்கியமான அம்சங்களாக முழுமையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பாளராக இந்த பிரமாண்ட படத்தின் மூலம் ஆயிரக்கணக்கான சினிமா கலைஞர்களுக்கு அருள் சரவணன் வாய்ப்பளித்திருந்தாலும்.. துணிச்சலாக கதாநாயகன் வேடத்தை தூக்கிச் சுமந்திருந்தாலும்.. மேக்கப், உடல் மொழி மற்றும் நடிப்பில் அவர் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.

காட்சி அமைப்புகளில், திரையில் மக்களைப் பார்த்து கருத்து சொல்லும் வசனங்களில் தயாரிப்பாளரின் விருப்பத்திற்கிணங்க இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி செயல்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், தங்கள் விளம்பரத் துறை அனுபவங்கள் மற்றும் தேர்ந்த ரசனை காரணமாக செலவு செய்த ஒவ்வொரு கோடியும் திரையில் தெரியும்படி படத்தை அழகான ஒப்பனையுடன் அலங்கரித்து வழங்கியிருக்கிறார்கள்.

மாறுபட்ட கருத்துகளிருந்தாலும் கதாநாயகரின் முதல் முயற்சியை ஊக்குவிக்கும்விதமாக மக்கள் வெற்றிப்படமாக்கி மூன்றாவது வாரம் கடந்து திரையரங்குகளில் தொடரவைத்திருக்கிறார்கள்.

சரி..இதில் என் பங்களிப்பு என்ன?

வசனம் என்று கார்டு போட்ட இடத்தில் எத்தனை சதவிகிதம் என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள்.