”வன்முறை இல்லாத படம் எடுங்கள்”: இளம் இயக்குநர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்!

எஸ்.என்.எஸ். மூவிஸ் பட நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் ’தமிழரசன்’. இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகுநாட்களுக்குப் பிறகு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது தான்.

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் நடந்தது.

t9

இவ்விழாவில் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் பேசுகையில், “இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக அமைந்ததற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் தான். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும், பாரதிராஜாவும் தான். அவர்கள் இந்த மேடையில் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

இயக்குநர் மோகன்ராஜா பேசுகையில், “ரொம்ப உணர்ச்சிப் பூர்வமான அனுபவம். இந்த மேடையில் நான் நிற்க காரணம் என் மகன். அவன் இப்படத்தில் நடிகனாக அறிமுகமாகிறான். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பத்திரிகையாளர்கள். எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்துள்ளீர்கள். அதுபோல் என் மகனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விஜய் ஆண்டனி வாடா போடா என்று பழகும் அளவிற்கு நட்பு உள்ளவர். விஜய் ஆண்டனி என் மகனை நடிக்க கூப்பிட்டார். மேலும் இளையராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்றும் சொன்னார். இதைவிட என் மகனுக்கு பெரிய பெருமை இருக்க முடியாது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

நடிகர் ரோபோ சஙகர் பேசுகையில், “விஜய் ஆண்டனி சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால் நடிப்பில் அசத்தி விடுவார். மோகன்ராஜா மகனுக்கு இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர். அவன் சிறப்பாக நடித்துள்ளான். இப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் – இயக்குநர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், “இளையராஜா அவர்களின் பாடல்களைப் பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்தப்படத்திலும் எப்படியும் சிறப்பாக செய்திருப்பார். விஜய் ஆண்டனி ஒரு சுயம்புவாக வளர்ந்து வருகிறார். அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளருக்கு வாழ்த்துகளையும், விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் பெப்சி சிவா பேசுகையில், “பத்திரிகை நண்பர்களுக்கும் மேடையில் இருப்பவர்களுக்கும் முதல் நன்றி. நான் பெப்சி சிவா ஆக மாறுவதற்கு ஒத்துழைப்பு தந்த பத்திரிகை நண்பர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி. பாரதிராஜா எனக்கு எல்லா நேரத்திலும் உதவியாக இருப்பவர். பி.ஆர்.ஓ மெளனம் ரவி என் ஆத்மார்த்தமான நண்பர். அவர் மூலமாக எனக்கு நிறைய மீடியா நண்பர்கள் கிடைத்தார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தப்படத்தை என் மனைவி தான் தயாரிக்கிறார். அவர் சார்பாக மெளனம் ரவி அவர்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பதில் பெருமை அடைகிறோம். இந்த படத்தின் பாடல்கள் இரண்டாயிரத்தி இருபதாம் ஆண்டு முழுவதும் பேசப்படும். அந்தளவிற்கு பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விஜய் ஆண்டனி தான் என்னை தைரியப்படுத்தி இப்படத்தை தயாரிக்க வைத்தார். இந்த முழுப்படத்திலும் அவருடைய பங்களிப்பு மிக அதிகம். தயாரிப்பாளராக என் மனைவி உருவாகி இருந்தாலும் பைனான்ஸியர் உத்தவ், விஜய் ஆண்டனி இருவரும் ஆற்றிய பங்கு மிக அதிகம். இந்தப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும். ஏன் என்றால் இந்தப்படத்தில் எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது” என்றார்

நடிகர் ராதாரவி பேசுகையில், “இந்திப்பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த மக்களை தமிழ் பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா. இவர் நல்லா என்னை கெடுத்துவிட்டார். அவர் எனக்கு இசை அமைத்த பூவே செம்பூவே என்ற பாடல் ரொம்ப பிரபலம். இயக்குநர் இமயத்திடம் நடிக்க நிறைய வாய்ப்பு கேட்டிருக்கேன். இப்ப அவர் நடிக்க வந்துட்டார். விஜய் ஆண்டனி நல்ல நண்பர். அவர் இப்படியான படங்கள் தான் செய்ய வேண்டும். ’நான்’, ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்கள் தான் அவருக்கு செட் ஆகும். அந்த வரிசையில் தமிழரசன் படமும் இருக்கும்” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “இன்னைக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டரா ஆகி, நடிகனாக இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணம் இளையராஜா. அவர் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.  அவர் ஒரு இசை அமைப்பாளருக்கு இசை அமைத்திருப்பது இதுதான். இந்தத் தயாரிப்பாளர் சிவா சாரைப் பார்க்க பயமாக இருக்கும். அவர் நிறைய செல்வு செய்யக்கூடியவர். நிறைய பெரிய நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். இந்தப்படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர் பாபு யோகேஸ்வரன். அவர் பெரிய இயக்குநராக வருவார். மோகன்ராஜா மகன் சிறப்பாக நடித்துள்ளான். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். பாருங்கள்” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “சிவா நல்ல படம் எடுக்கணும் என்று நினைப்பவர். விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேறமாதிரி இருக்கிறார். நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர். தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாயிருக்கு. இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா.. பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை. இந்த இயக்குநரை சிவா தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயம் பாபு யோகேஸ்வரன் நல்ல இயக்குநராகத் தான் இருப்பார். இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வயலன்ஸ் இல்லாமல் படமெடுங்கள். இது நல்ல படம். சிவா மனசிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியை அடையும்” என்றார்

விழாவில் இளையராஜா, தயாரிப்பாளர் டி.சிவா, படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், மதுமிதா, மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன்ஆகியோரும் கலந்து கொண்டனர்.

t6