சுவாதி வீட்டின் அருகிலேயே கொலையாளி இருந்திருக்கிறார்: திடுக்கிடும் தகவல்!

சுவாதியின் வீட்டு அருகிலேயே கொலையாளி இருந்திருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ஆம் தேதி பெண் பொறியாளர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

செல்போன் சிக்னல்

சுவாதியை கொலை செய்த கொலைகாரன் அவரது செல்போனை யும் எடுத்துச் சென்றுவிட்டார். காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ‘ஆன்’ செய்தே வைத்திருந்திருக்கிறார். பின்னர் அதை ‘சுவிட்ச் ஆப்’ செய்திருக்கிறார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டபோது அவரது செல் போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. கொலை செய்யப்பட்ட சுவாதியின் வீடும் சூளைமேட்டில்தான் உள்ளது. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட இடமும் அவரது வீட்டு அருகில் உள்ள இடத்தையே காட்டுகிறது.

எனவே சுவாதியை கொலை செய்துவிட்டு, அந்த நபர் சூளைமேட்டுக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சுவாதியை கொலை செய்தவர் சூளைமேட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சூளைமேட்டில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் கடந்த 4 நாட்களாக போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். சூளைமேட்டில் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி என்று சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தையும் பொதுமக்களிடம் காட்டி விசாரணை நடத்துகின்றனர்.

பெங்களூர், மைசூர்

செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த சுவாதி, முன்னதாக மைசூரில் உள்ள நிறுவனத்தில் பயிற்சியும், பின்னர் பெங்களூரிலும் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னரே பரனூர் நிறுவனத்துக்கு வந்துள்ளார். கொலையாளி குறித்த தகவல்களை சேகரிக்க மைசூர், பெங்களூருக்கும் தனிப்படை சென்றுள்ளது. அங்கு சுவாதியுடன் பணிபுரிந்த நண்பர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

சுவாதியை கொலை செய்த நபர் தப்பிச் செல்லும்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவரது படத்தை வரையும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சுவாதியை கொலை செய்த நபர் தப்பிச் செல்லும்போது, அவரை ஓர் இளைஞர் நேருக்கு நேர் பார்த்திருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை. கொலையாளி எப்படி இருப்பார் என்று அந்த இளைஞர் தகவல் தெரிவித்தால் படம் வரைய உதவியாக இருக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முதியவர் பலி

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்போது நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஆதிகேசவன்(70) என்ற முதியவர் ரயில் நிலையத்துக்கு வந்தபோது சுவாதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து மயங்கி விழுந்திருக்கிறார். அருகே இருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர் பின்னர் இறந்துவிட்டார்.

அக்கா வேண்டுகோள்

0a2e

கொலை செய்யப்பட்ட சுவாதியின் அக்கா நித்யா இணையதளம் மூலம் வெளியிட்டுள்ள வேண்டுகோளில், “சுவாதி பற்றி யூகத்தின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகிறது. அவளது அக்கா என்ற முறையில் சுவாதி பற்றி சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சுவாதி குழந்தைத்தனமான குணம் கொண்டவள். மென்மையாகவே பேசுவாள். கடவுளுக்கு பயந்து நடந்தவள். சுந்தரகாண்டம், பஞ்சாங்கம் படிக்காமல், அர்ச்சதை தூவிக்கொள்ளாமல் அவள் ஒருநாள் கூட வீட்டை விட்டு வெளியில் செல்ல மாட்டாள். தினமும் ரயிலில் வேலைக்கு செல்லும்போது விஷ்ணு சகஸ்ரநாமம் உச்சரித்தபடியேதான் செல்வாள். வேலைக்கு செல்லும் வழியில் சிங்கப்பெருமாள் கோயில் இருப்பதால் தவறாமல் நரசிம்மர் ஆலயத்துக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தாள். அதுபோல திருமளிகையில் உள்ள ஆச்சாரியர் முதலியாண்டான் சுவாமிகள் ஆலயத்துக்கும் அவள் செல்வதுண்டு.

மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது சூளைமேட்டில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலுக்கு செல்லாமல் அவள் வருவதே கிடையாது. அந்த அளவுக்கு தெய்வ பக்தி நிறைந்தவள். தேவையில்லாமல் அவள் எந்த பொழுதுபோக்குகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டாள்.

இத்தகைய பண்புடன் வளர்ந்த அவள் பற்றி யூகத்தின்படி பலரும் பலவிதமாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிடுவது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவள் பெயரில் சமூக வலைத்தளங்களில் யாரும் எந்தவித கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று நித்யா கூறியுள்ளார்.

Courtesy: tamil.thehindu.com

Read previous post:
0a1o
அண்மைக்காலமாக மக்கள் நிறைந்த இடங்களில் கொலைகள் நடப்பது ஏன்?

அண்மைக்காலமாக மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் கொலைகள் நடப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுமக்கள் மனநிலையைப் பற்றியும் விவாதிக்கவேண்டும்

Close