சண்டக்கோழி 2 – விமர்சனம்

2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கதாநாயகனாக விஷால், விஷாலின் தந்தையாக ராஜ்கிரண், கதாநாயகியாக மீரா ஜாஸ்மின், வில்லனாக லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘சண்டக்கோழி’. இந்த வெற்றி தந்த நம்பிக்கையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ‘சண்டக்கோழி 2’ படத்தை இயக்கியிருக்கிறார் லிங்குசாமி. இதிலும் கதாநாயகனாக விஷாலும், அவரது தந்தையாக ராஜ்கிரணும் நடித்திருக்கிறார்கள். எனினும், இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய மாற்றங்கள் மூன்று. ஒன்று, கதாநாயகியாக மீரா ஜாஸ்மினுக்குப் பதிலாக அதே மாதிரியான துடுக்குத்தனமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இரண்டு, வில்லன் லாலுக்கு பதிலாக இதில் வில்லி வரலட்சுமி சரத்குமார். 2006ஆம் ஆண்டு தருண்கோபி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய ‘திமிரு’ படத்தில் பயங்கரமான வில்லியாக நடித்த ஷிரேயா ரெட்டி கதாபாத்திரத்தின் சாயலில் வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று, ‘சண்டக்கோழி’ படத்தின் கதை வேறு; ‘சண்டக்கோழி 2’ படத்தின் கதை வேறு.

அக்கம்பக்கமாக இருக்கும் ஏழு ஊர்கள் கூடி கோலாகலமாகக் கொண்டாடும் வேட்டைக் கருப்பன் கோயில் திருவிழாவில், சின்னதாய் தொடங்கிய தகராறு பெரிய சண்டையாய் முடிகிறது. இதில் வரலட்சுமி சரத்குமாரின் கணவர் கொல்லப்படுகிறார். இதனால் ஆத்திரமடையும் வரலட்சுமி, தன் கணவரின் கொலைக்குக் காரணமானவர்களின் வம்சத்தில் ஒரு ஆண் கூட உயிருடன் இருக்கக் கூடாது என கொலைவெறி கொள்கிறார். அவரது கட்டளையை ஏற்கும் ஹரீஷ் பெராடி, அர்ஜய் உள்ளிட்ட அவரது உறவினர்கள், குறிப்பிட்ட அந்த வம்சத்தைச் சேர்ந்த ஒவ்வொரு ஆணையும் தேடித் தேடி வெட்டிச் சாய்க்கிறார்கள். இப்போது அந்த வம்சத்தில் இளைஞர் ஹரி மட்டுமே உயிருடன் மிச்சம் இருக்கிறார்.

இந்நிலையில், மோதல் காரணமாக ஏழு ஆண்டுகளாக நடத்த இயலாமல் தடைபட்டிருக்கும் வேட்டை கருப்பன் கோயில் திருவிழாவை, இந்த ஆண்டாவது அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும் என்று விரும்புகிறார், ஏழு ஊர்களுக்கும் பெரிய மனிதரான ராஜ்கிரண். இளைஞர் ஹரியை தீர்த்துக் கட்டுவதிலேயே குறியாக இருக்கும் வரலட்சுமி, அதற்கு வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் திருவிழா நடைபெற சம்மதிக்கிறார்.

பிரமாண்ட திருவிழா கோலாகலமாகத் தொடங்குகிறது. திருவிழாவினூடே ஹரியைக் கொலை செய்ய வரலட்சுமியின் உறவினர்கள் தீவிரமாய் முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஹரியை பாதுகாத்து, எந்த அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியாக திருவிழாவை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் ராஜ்கிரண்.

எனினும், எதிர்பாராத விதமாக ராஜ்கிரண் வெட்டுப்பட்டு, படுகாயங்களுடன் கோமா நிலைக்குப் போய்விடுகிறார். இப்போது அவர் விரும்பியவாறு திருவிழாவை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும், ஹரியையும் காப்பாற்ற வேண்டும் என்ற மிகப் பெரிய சவாலான பொறுப்புகளை அவரது மகன் விஷால் ஏற்க வேண்டிய நிலை. மேற்கண்ட பொறுப்புகளை விஷால் வெற்றிகரமாக செய்து முடித்தாரா? ராஜ்கிரண் உயிர் பிழைத்தாரா? அவரை வெட்டியவர்களுக்கு விஷால் கொடுத்த தண்டனை என்ன? என்பது பரபரப்பான மீதிக்கதை.

0a1a

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்புகிறவராக நாயகன் விஷால் அறிமுகமாகிறார். அவர் 13 ஆண்டுகளுக்குமுன் ‘சண்டக்கோழி’ படத்தில் எத்தகைய உடல் – முகத் தோற்றத்துடன் இருந்தாரோ அதுபோலவே இந்த படத்திலும் இளமையாக, வசீகரமாக வந்து வியப்பை ஏற்படுத்துகிறார். தந்தை மீதான பாசம் – மரியாதை உள்ளிட்ட சென்டிமெண்ட் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி கீர்த்தி சுரேஷ் மீது காதல் கொள்வது, ராஜ்கிரணின் மகன் என்று தெரியாமல் அவரது டிரைவர் என்று தவறாக நினைத்துக்கொள்ளும் நாயகி அவ்விதமே தொடர்ந்து நம்புகிற விதமாய் அடக்கமாக நடிப்பது, தந்தைமுன் வாய்க்கொழுப்புடன் பேசும் நபரை ஒரே அடியில் வீழ்த்துவது, தந்தையின் வாக்கை நிறைவேற்ற சகல சிக்கல்களையும் சகித்துப் பொறுமை காப்பது, பழிவாங்குவதிலும் அன்பைக் கையாள்வது என தேவையான நடிப்பை நிறைவாகக் கொடுத்திருக்கிறார் விஷால்.

ஏழு ஊர்களுக்கும் பெரிய மனிதராக, மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக வரும் ராஜ்கிரண் மிடுக்கான தோற்றத்தில், கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கடமை உணர்வுடன் பொறுமையாக நடந்துகொள்வது, தேவைப்படும்போது சண்டையில் இறங்குவது என தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

நாயகனை காதலிப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தில் வரும் கீர்த்தி சுரேஷ் ‘சண்டக்கோழி’ மீரா ஜாஸ்மினின் பிரமாதமான நடிப்பை நகலெடுக்க முயன்றிருக்கிறார். அவரது நடிப்பும் துடுக்குத்தனமான வளவளா பேச்சும் சில காட்சிகளில் ரசிக்கத் தக்கதாக இருந்தாலும் பல காட்சிகளில் ஒட்டாமல் செயற்கையாகத் தெரிகின்றன.

0a1c

கணவரை கொன்றவர்களின் வம்சத்தைப் பழிவாங்கும் கொடூர வில்லியாக வரும் வரலட்சுமி சரத்குமார், தனக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். எனினும், ஆக்ரோஷம் காட்டுவதாக நினைத்துக் கொண்டு அவர் காட்டுத்தனமாகக் கத்துவது சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மு.ராமசாமி, சண்முகராஜன், தென்னவன், கஜராஜ், கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, அர்ஜய், ஞானசம்பந்தன், மயில்சாமி, முனீஸ்காந்த் என்று ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும், அவர்கள் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லை என்பது ஏமாற்றம்.

கதையில் புதுமை என எதுவும் இல்லாவிட்டாலும் காதல், ஆக்சன், நகைச்சுவை, சென்டிமெண்ட் ஆகியவற்றினூடே போரடிக்காமல் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. திருவிழா பற்றிய பேச்சுவார்த்தையுடன் தொடங்கும் படம், அத்திருவிழா நிறைவடைவதுடன் முடிவதாக திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. திருவிழா என்ற பெயரில் குடிப்பது, புகைப்பது, ஆபாச நடனம் ஆடுவது போன்றவற்றை திணிக்காமல் தவிர்த்திருப்பது பாராட்டுக்கு உரியது. எனினும், ஹரியைக் காப்பாற்றுவது, திருவிழாவைத் தடையில்லாமல் நடத்துவது ஆகியவை மட்டுமே திரைக்கதைக்கான பிரச்சனைகளாக இருப்பதால் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறைந்துகொண்டே சென்று சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும், வில்லியின் மகனாக வரும் சிறுவனைக் கூட கொலைவெறி கொண்டவனாக, இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு நபர்களை கத்தியால் குத்திக் கிழிப்பவனாக காட்டியிருப்பது ஏற்கவே முடியாதது. அச்சிறுவனை வைத்து இச்சமூகத்துக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் மிஸ்டர் லிங்குசாமி?

எஸ்.ராமகிருஷ்ணன் – பிருந்தா சாரதி வசனங்கள், யுவன்ஷங்கர் ராஜாவின் இசை, கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றன.

‘சண்டக்கோழி 2’ – ரசித்து சுவைக்கத் தக்க மசாலா கறிச்சோறு!