இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பினார்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்த சுபான்ஷு சுக்லா, 18 நாள் ஆய்வை முடித்து, பூமிக்கு திரும்பினார்.

அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையுடன் இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது.

இதில், இந்திய விமானப் படை வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், ஹங்கேரியின் திபோர் கபு மற்றும் போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள் சென்ற விண்கலம், 28 மணி நேர பயணத்துக்குப் பின் சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 26 ஆம் தேதி மாலை சென்றடைந்தது. விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை அங்கு ஏற்கெனவே தங்கியுள்ள வீரர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லா, பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார். அப்போது வரைபடத்தில் காண்பதை விட விண்வெளியில் இருந்து இந்தியா மிகவும் பிரமாண்டமாக காட்சியளிப்பதாகக் கூறினார்.

புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும்? என்பதை ஆய்வு செய்வதற்காக சுபான்ஷு சுக்லா பூமியில் இருந்து பாசிப்பயறு மற்றும் வெந்தயக்கீரை விதைகள் எடுத்துச் சென்றார். விண்வெளி நிலையத்தில் அந்த விதைகளை முளைக்க வைத்து தினமும் ஆய்வு செய்தார். இவை எதிர்கால விண்வெளிப் பயணிகளுக்கான உணவுப் பாதுகாப்புக்கு வழிகாட்டும் என நம்பப்படுகிறது.

மொத்தமுள்ள 60 அறிவியல் ஆய்வுகளில் இந்தியா தலைமையில் 7 முக்கிய ஆய்வுகளை சுபான்ஷு சுக்லா மேற்கொண்டார். இதில், 3 வகை மைக்ரோ ஆல்கே வளர்ச்சி மற்றும் மரபணு மாற்றம், மனித உடலில் புற்றுநோய், ஸ்டெம் செல்கள், ரத்த ஓட்டம் மற்றும் மூட்டு ஆராய்ச்சி உள்ளிட்டவை அடங்கும்.

சர்வதேச விண்வெளி மையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர், தங்களது ஆய்வுகளை முடித்துக்கொண்டு, டிராகன் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் (ஜூலை 14) மாலை பூமியை நோக்கிப் புறப்பட்டனர்.

இந்திய நேரப்படி, திட்டமிடப்பட்டதற்கு 10 நிமிடங்கள் தாமதமாக, மாலை 4.45 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, டிராகன் விண்கலம் தனியாக பிரிந்து புறப்பட்டது. இந்த விண்கலம், 22 மணி நேர பயணத்திற்கு பிறகு, 17 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் கீழே வரத் தொடங்கி, ஸ்பிளாஷ் டவுன் எனப்படும் முறையில் அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே நேற்று (ஜூலை 15) மாலை 3 மணி அளவில் கடலில் மெதுவாக இறங்கியது.

சுபான்ஷு சுக்லாவை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில், “விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்கும் நாட்டுடன் நானும் இணைகிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் ஒரு பில்லியன் கனவுகளை ஊக்குவித்துள்ளார். இது நமது சொந்த மனித விண்வெளி விமானப் பயணமான ககன்யானை நோக்கி மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்து சுபான்ஷு சுக்லா, இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். சுபான்ஷு சுக்லாவின் இந்த வெற்றிப் பயணம், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு பேருதவியாக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.