முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் 600/600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்து, வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். “எனது உயர்கல்விக்கு உதவுவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்” என பின்னர் நந்தினி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதவிகிமாகும். இந்த பொதுத் தேர்வில், அரசு உதவி பெறும், திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி, 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, 600 மதிப்பெண்களோடு மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். நந்தியின் தந்தை கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

நந்தினியின் இந்த வெற்றியை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, தேர்வு வெற்றி குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், “கல்வி தான் மிகப்பெரிய சொத்து என்று சொல்லியே வளர்க்கப்பட்டேன். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உந்துதலே என்னை சாதிக்க வைத்தது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவி நந்தினி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து இன்று வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நந்தினி, முதலமைச்சரை சந்தித்தது தனது வாழ்நாள் பாக்கியமாக கருத்துவதாக தெரிவித்தார். மேலும், சி.ஏ படித்து ஆடிட்டராக வேண்டும் என்னும் எனது விருப்பத்தை வெகுவாக பாராட்டிய முதல்வர், உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் கூறினார் என்று நந்தினி தெரிவித்தார்.