அழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்கள் அல்லவா நாம்!

நான் பழங்காலத்து மனிதனாக தொனிக்க விரும்பவில்லை. எனினும் இந்த மொபைல் போன்கள் படுத்துகிற தொல்லைகள் இருக்கிறதே.. கொஞ்ச நஞ்சம் அல்ல.

நண்பர்களுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தேன். மூவர் அமர்ந்திருந்தோம். இருவரும் மொபைல் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். எதிரில் ஒருவன் முறைத்துக் கொண்டிருப்பது கூட தெரியவில்லை. தெரிந்து கூட பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம். சற்று நேரம் கழித்து அதட்டி மொபைல் போன்களை வைக்க செய்தேன். பிறகு பேசினோம்.

எவ்வளவு சுலபமாக ஒரு விஷயம் நம்மை அடிமைப்படுத்தி விடுகிறது?

என்னையே கூட எடுத்துக் கொள்ளுங்களேன். சில காலம் முன் வரை, எதற்கெடுத்தாலும் முகநூல் பதிவு எழுதியிருக்கிறேன். காதல் மற்றும் உறவு சார்ந்த பதிவுகள் எழுதி பல நூறு லைக்குகள் கிடைக்க தொடங்கியதும் கிடைத்த போதை எதையேனும் தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்துக்கு மேல் மொபைல் போன் இல்லாமல் இருக்க முடியவில்லை என்ற பேருண்மையை உணர்ந்தேன். முக்கியமாக வாசிப்பு குறைவது தெரிந்து துணுக்குற்றேன். பிறகுதான் writing for the sake of writing என்பதை நிறுத்த முடிவெடுத்தேன். எப்போதாவது எழுதுவது என தீர்மானித்தேன். பெரும்பாலும் இப்போது எழுதுவதில்லை. வெறும் பகிர்வுகள் மட்டும்தான். அரிதாக சில தோன்றி இந்த பதிவு போல் எழுதுவதுண்டு.

தொடர்ச்சி குறைந்த காரணத்தால் லைக்குகளும் குறையத் தொடங்கிவிட்டது. ஏதேனும் நல்ல விஷயங்களுக்கான பதிவுகள் தேவையின் கருதி எழுதுவோம் என sarahah app சில நாட்களுக்கு முன் பதிவிறக்கி பகிர்ந்திருந்தேன். ஈயாடுகிறது. ஆக நண்பர்கள் தங்கள் ஜாகையை வேறு பக்கங்களுக்கு மாற்றி விட்டார்கள் என்றும் தெரிந்துவிட்டது. சந்தோஷம்தான். வாசிப்பு, உரையாடல், எழுத்து என பல வேலைகளை செய்ய முடிகிறது.

ஒரு டீக்கடை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நெரிசல் நிறைந்த பேருந்து? எங்குமே நம் கைகள் மொபைல்களை விட்டு அகலுவதில்லை. நம் முன் மொபைல் போன் பழகியறியாத தலைமுறையின் அப்பாவோ அம்மாவோ தாத்தாவோ இருந்தால் மிகவும் பரிதாபம். அவர்கள் பேசும் எதையும் கவனியாமல், அவர்களை மதிக்காமல் நாம் மொபைல்கள் நோண்டிக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட வயதில் இருப்பவர்கள் அவர்கள். நாமும் அவர்களை ஏறெடுத்து பார்க்கவில்லை எனில் எங்கு போவார்கள்?

அட, சக மனிதனின் முகத்தை கூட பார்க்காத கண்ணும் அவனிடம் பேச விரும்பாத வாயும் அடுத்தவனின் பேச்சை கவனிக்காத காதும் ஒரு நாள் அடைத்து போய்விட்டால் கூட நமக்கு தெரியப்போவதில்லை.

சாமானியர்களை கூட விடுங்கள். அரசியல் பேசுபவர்கள், அதுவும் தனிமனிதவாதத்தை எதிர்க்கும் கம்யூனிசம் பேசுபவர்கள் கூட மொபைல் போனுக்குள் தலையை நுழைத்துக் கொண்டிருப்பதெல்லாம் ஏனிந்த சமூகம் சரியான அரசியலுக்கு உட்படுவது மிக கடினமாக இருக்கிறது என்பதற்கான தெளிந்த சாட்சி.

தியேட்டருக்குள் படம் பார்க்கும்போது செல்போன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அய்யா, நீங்கள் எல்லாம் ஏன் தியேட்டருக்கு வருகிறீர்கள்?

சிகரெட் மற்றும் மது அடிமைத்தனத்தை பற்றி வாய்கிழிய பேசிவிட்டு செல்போனுக்கு அடிமைப்பட்டு கிடப்பது அவல நகைச்சுவை. நானே பலமுறை அதட்டி மொபைல் போன் அடிமைத்தனத்தை என் நண்பர்களுக்கு சுட்டிக் காட்டியிருக்கிறேன். பலர் அதை உண்மை என ஏற்றுக் கொண்டு, சில மணி நேரங்கள் மொபைல் போனை மறந்து, பின் மீண்டும் முன்னிருந்த வேகத்துக்கு அடிமைத்தனத்தை தொடர்வார்கள். இருபத்து மூன்றாவது தடவையாக மதுப்பழக்கத்தை விடுவோரின் கதைதான்.

மொபைல் போன் இல்லாமல் கை உதறல் எடுக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி.

ஒரு காலத்தில் Respect the speaker என்பது ஒரு முக்கிய நற்பண்பாக இருந்தது. இன்றெல்லாம் அதை சொன்னால் நம்மை லூசாக பார்க்கிறார்கள். Empathyக்கே sympathy தேவைப்படும் கட்டத்தில் நிற்கிறோம்.

மனிதர்களின் அநிச்சை செயலாக செல்போன் பார்ப்பது மாறியிருக்கிறது. அது கொடுக்கும் மூளை மழுங்கடிப்பு, மேலோட்ட அறிவு, மனிதர்களையும் மனித பண்புகளையும் மதிக்கா தன்மை யாவும் என்ன அரசியலுக்கு, எந்த சமூகத்துக்கு நம் அனைவரையும் இட்டுச் செல்லும் என நினைக்கிறீர்கள்?

உங்களின் மொபைல் போன் உங்களின் உறவுக்கு சவப்பெட்டி ஆகலாம். உங்கள் சமூகத்தை கொளுத்தி போடும் தீப்பெட்டியும் ஆகலாம். உங்களையே அடைத்து வைக்கும் சிறைக்கூடமும் ஆகலாம்.

நம் உறவுகளை குலைத்து போடுமளவுக்கு, அறிவு சேகரிப்பை மறுக்குமளவுக்கு, சக மனிதனை பொருட்படுத்தாத அளவுக்கு, அரசியல் ரீதியாக இயங்க முடியாத அளவுக்கு, அருகிலிருப்பவனின் வெறுப்பை சம்பாதிக்குமளவுக்கு, மொபைல் போன்களில் தொலைந்து கொண்டிருக்கிறோமெனில் நம்மை எந்த நாய் வந்து ஆண்டால்தான் என்ன?

அழிந்து நாசமாய் போவதற்கு முழுத் தகுதி உடையவர்களல்லவா நாம்!

RAJASANGEETHAN