‘சிவா மனசுல புஷ்பா’: தலைப்பை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்!

அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவையும், அவர் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளையும் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். “என் கட்சித் தலைவி ஜெயலலிதா என் கன்னத்தில் அறைந்துவிட்டார். அவரது ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று பாராளுமன்றத்தில் அத்தனை எம்.பி.க்களின் முன்னால் கதறியழுது ஜெயலலிதாவுக்கே அதிர்ச்சி அளித்தவர் அவர்.

அதற்குமுன், சசிகலா புஷ்பாவும், அவரது எதிரிக்கட்சியான தி.மு.க.வின் எம்.பி. திருச்சி சிவாவும் ரொம்ம்ம்ம்ம்ப நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு சில நாட்களுக்குப்பின், டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவின் முதுகில், நாலு பேர் பார்க்க ஓங்கி நாலு மொத்து மொத்தி சர்ச்சையில் சிக்கினார் சசிகலா புஷ்பா. இது பற்றி விசாரிப்பதற்காக அவரை தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவழைத்த ஜெயலலிதா, ஆவேசத்துடன் பளார் பளார் என்று கன்னத்தை பதம் பார்த்துவிட்டு, “உடனே டெல்லிக்குப் போய் எம்.பி. பதவியை ராஜினாமா செய்” என்று உத்தரவிட்டு அனுப்பினார். ஆனால், டெல்லி பாராளுமன்றத்துக்கு வந்த சசிகலா புஷ்பா, தன் பதவியை ராஜினாமா செய்யாமல், ஜெயலலிதா தன்னை அடித்ததாக அவையில் புகார் கூற, அந்த நிமிடமே அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அறிவித்தார் ஜெயலலிதா.

இதுபோல் சர்ச்சைகள், பரபரப்புகள், மர்மங்கள் நிறைந்த சசிகலா புஷ்பாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘சிவா மனசுல புஷ்பா’ இந்த படத்தில் சசிகலா புஷ்பாவாக, அவரைப் போன்ற உருவம் உள்ள ஷிவானி குரோவர் என்ற நடிகை நடித்துள்ளார்.

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்துப் பெண், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் ஆகியோருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு வாழ்வில் படிப்படியாக எப்படி முன்னேறி அரசியல் அதிகாரங்களை எட்டிப் பிடிக்கிறார் என்பதை கதையாக கொண்ட இந்த படத்தில் கதாநாயகனாக புதுமுகம் வாராகி நடிக்கிறார். ஸ்ரீவராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகியே இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். அவருடன் நதியாஸ்ரீ, சுதா, டி.சிவா, தவசி ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

0a1d

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கஸ்தூரி ராஜா, நடிகர்கள் எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்திஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், ஆன்மிகவாதி அசோக்ஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், “இந்த விழாவுக்கான அழைப்பிதழ் எனக்கு தரப்பட்டபோது, அதில் ‘சிவா மனசுல புஷ்பா’ என படத்தின் பெயர் போடப்பட்டிருப்பதை பார்த்து குழம்பிப் போனேன். என்ன இது, சிவா மனசுல சக்தி என்று தானே சொல்வார்கள். அது தானே சிவனுக்கும், சக்திக்குமே சக்தி சேர்க்கும். சிவா மனசுல புஷ்பா என்றால் எப்படி என புரியாமலே இந்த விழாவுக்கு வந்தேன். இங்கு எஸ்.வி.சேகரிடம், ‘படத்தலைப்புக்கு என்ன அர்த்தம்’ என்று கேட்டேன் (என்று கூறிவிட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறார்.) ‘இது தெரியவில்லையா? அது தான் ட்ரெய்லரிலேயே காட்டுகிறார்களே’ என்று சொல்லிவிட்டு விளக்கிச் சொன்னார் எஸ்.வி.சேகர் (என்று கூறிவிட்டு மீண்டும் சிரி சிரி என சிரிக்கிறார்).

எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி விழுந்து விழுந்து சிரிக்க, அவரோடு சேர்ந்து மேடையில் இருந்தவர்களும், எதிரே இருந்த ஆடியன்சும் பயங்கரமாய் சிரிக்க, ‘சிவா மனசுல புஷ்பா’ சமகால அரசியல் பற்றிய மிகப்பெரிய நகைச்சுவைப் படமாக இருக்கும் என்ற எண்ணத்தை அது அனைவரது மனங்களிலும் ஏற்படுத்தியது..