“குழப்பம் ஏற்படுத்தும் ஹிப் ஹாப் ஆதி”: சமுத்திரக்கனி கண்டனம்!

“ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது” என்று இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் தனித்தமிழ்நாடு, மோடி எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, பெப்சி – கோக் எதிர்ப்பு என்று திசைமாறி செல்வதாக திரைப்பட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

ஹிப் ஹாப் ஆதி பேச்சு பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் சமுத்திரக்கனி, “ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. யார் சூழ்ச்சி செய்தாலும் அதனை நாம் தான் முறியடிக்க வேண்டும்.

போராட்டத்துக்கு வாருங்கள் என்று அவர்கள் யாரும் நம்மை அழைக்கவில்லை. அரசியல்வாதிகள் வர வேண்டாம், சினிமாக்காரர்கள் வர வேண்டாம் என்று தான் அவர்கள் சொன்னார்கள். நீங்களும், நானும் நாமாகப் போய் தான் அதில் கலந்து கொண்டோம். நம்மை வெறும் சினிமாக்காரர்களாக அவர்கள் பார்க்காததால், நம்மை சேர்த்துக்கொண்டார்கள்.

அப்படியிருக்கும்போது, அந்த போராட்டத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாத பட்சத்தில், விலகி அமைதியாக இருங்கள். அதைவிட்டு, எங்கோ ஒரு மூலையில் ஏதோ நடந்தது எனச் சொல்லி, பல லட்சம் பெண்களும் மாணவர்களும் பங்கேற்றுள்ள போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தாதீர்கள்.

மக்கள் கூடும் இடத்தில் குழப்பவாதிகள் கூடத்தான் செய்வார்கள். அதனை நாம்தான் முறியடிக்க வேண்டும். 4 நாட்களாக தமிழகம் முழுவதும் நான் சுற்றி வருகிறேன். போராட்டக்காரர்கள் சரியாகத்தான் செயல்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார் சமுத்திரக்கனி.