”மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடித்திருப்பது பற்றி என் மனைவி கீர்த்தி தவறாக நினைக்க மாட்டார்!” –  அசோக் செல்வன்

அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மெகா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கேப்டன் மேகவாணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

0a1d

இதில் படத்தின் இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் பேசும்போது,  ”சபா நாயகன் திரைப்படம் நம் பள்ளிக்கால மற்றும் கல்லூரிக்கால மலரும் நினைவுகளை மீள் உருவாக்கம் செய்யும் ஒருவித நாஸ்டால்ஜியா வகை திரைப்படம் ஆகும். நம் எல்லோருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஏதோவொரு பெண்ணின் மீது ஒருவித க்ரஸ் இருந்திருக்கும். இப்படி பள்ளி கால வாழ்க்கை, கல்லூரி கால வாழ்க்கை, திருமண வாழ்க்கை என்று வாழ்க்கையின் மூன்றுவித காலகட்டங்களைப் பற்றி இப்படத்தில் பேசி இருக்கிறோம். இப்படம் அனைத்து ரசிகர்களும் குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும்படியான திரைப்படம். என் மீது நம்பிக்கை வைத்து முதல்படம் இயக்குவதற்கு வாய்ப்பளித்த ஐ சினிமாஸ் அய்யப்பன் ஞானவேல் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த நடிகர் அசோக் செல்வனுக்கும் நன்றி” என்றார்.

படத்தின் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் பேசும் போது, ”ஓ மை கடவுளே திரைப்படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நானும் நண்பர் அசோக்செல்வனும் இந்த சபாநாயகன் திரைப்படத்தில் இணைந்து இருக்கிறோம். இத்திரைப்படம் நாம் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து திரையரங்கிற்கு ஒன்றாக சென்று குதூகலிப்பதற்கான திரைப்படம்., படம் மற்றும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் அனைவருக்கும் ரொம்பவே பிடிக்கும் என்று நம்புகிறோம். பாடல்களுக்கான காட்சி தொகுப்புகள் மிகவும் சிறப்பாக அழகான முறையில் எடுக்கப்பட்டு இருந்தது. இது போன்ற ஜாலியான திரைப்படத்திற்கு இசையமைத்தது ஒரு நல்ல அனுபவம். படம் பார்க்கும் அனைவருக்குமே ஒரு நாஸ்டால்ஜியா டிரிப் சென்று வந்த அனுபவம் கண்டிப்பாக கிடைக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பாலசுப்ரமணியம் பேசும் போது, ”எல்லோருக்கும் வணக்கம். இப்படத்தின் தயாரிப்பாளர் என் நண்பர். அவர் தான் இயக்குநர் கார்த்திகேயனை எனக்கு அறிமுகப்படுத்தினார். கார்த்திகேயன் கதை சொல்லும் போது எனக்கு கதை மிகவும் பிடித்தது. இது போன்ற கதைகள் இப்பொழுதெல்லாம் வருவதில்லை என்று எனக்குத் தோன்றியது. .மூன்றுவித காலகட்டங்கள் படத்தில் இருக்கிறது. இதில் கல்லூரி கால வாழ்க்கையை முதலாவது ஷெட்யூலில் படப்பிடிப்பு செய்தோம். அதில் நான் ஒளிப்பதிவு செய்தேன். பிறகு என் சீடர் தினேஷ் இரண்டாம் ஷெட்யூல் அதாவது பள்ளிகால வாழ்க்கையை ஒளிப்பதிவு செய்தான்… பிரபு ராகவ் கல்லூரி காலத்திற்குப் பின்னர் வரும் வாழ்க்கைப் பகுதியை ஒளிப்பதிவு செய்தார். படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள் ”என்று பேசினார்.

படத்தின் மற்றொரு ஒளிப்பதிவாளரான தினேஷ் புருஷோத்தமன் பேசும் போது, ”ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் என் குரு. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த என் குருநாதருக்கும், அதை ஏற்றுக் கொண்டு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன், நாயகன் அசோக் செல்வன் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி ”என்று பேசினார்.

மூன்றாவது ஒளிப்பதிவாளரான பிரபு ராகவ் பேசும் போது, ”எல்லோருக்கும் வணக்கம். வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி. நாயகன் அசோக் செல்வன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு பத்திரிக்கை நண்பர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். ”என்று பேசினார்.

நக்சலைட் யூடியூப் புகழ் நடிகர் அருண் பேசும் போது, ”இந்த சபாநாயகன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. என் திரைப்பயணத்தில் இப்படி ஒரு முக்கியமான வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் அவர்களுக்கு என் முதல் நன்றி. என்னை விட என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்த இயக்குநரின் நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன் என்று நம்புகிறேன். இப்படத்தில் என்னோடு சேர்ந்து நடித்த சக யூடியூபர்ஸ் ஆன ஜெய்சீலன் ஸ்ரீராம் போன்றோருக்கு என் வாழ்த்துக்கள். அவர்களோடு இணைந்து நடித்தது மறக்க முடியாத மிகச்சிறந்த அனுபவம். அது போல் மைக்கேல் அண்ணன் உடன் நடித்ததும் மறக்கமுடியாத அனுபவம். அவருடனான காட்சிகள் இல்லை என்றாலும் கூட, எங்களுக்கு பின்னாலிருந்து பெரும் ஊக்கம் கொடுத்தார். பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவில் நடித்ததை கெளரவமாக கருதுகிறேன். அவருக்கும் மற்ற கேமராமேன்களுக்கும் என் நன்றி, பாடல்கள் மிகவும் சென்சேஷனாக உள்ளது. சிறப்பான பாடல்களை இப்படத்திற்கு கொடுத்த இசையமைப்பாளருக்கு நன்றி. அசோக் சாருக்கு நன்றி. முதல் நாள் காட்சி சூட் செய்யும் போது எனக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. நான் அந்த குழப்பத்திலும் அசோக்செல்வன் சாருடன் இணைந்து நடிக்கிறோம் என்கின்ற பதட்டத்திலும் ஏதோ நடித்தேன். அதை புரிந்து கொண்டு அசோக்செல்வன் சார் என்னிடம் வந்து பேசினார். நீ என்ன யோசிக்கிறாய்.. உனக்கு என்ன பயம் என்று எனக்குத் தெரியும்… இது நம்ம படம்.. இப்படத்தின் வெற்றிக்கு நாம் உழைக்கிறோம். கேசுவலாக இரு.. கோயம்புத்தூரில் உன் நண்பர்களுடன் நடிக்கும் போது எப்படி இருப்பாயோ அப்படியே இரு.. நான் ஒரு ஹீரோ என்பதை எல்லாம் மறந்துவிடு என்று என் தயக்கங்களை போக்கினார். அவருக்கு மிக்க நன்றி அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எனக்கு பின்நாளிலும் கண்டிப்பாக உதவும் என்று தோன்றுகிறது.. சபாநாயகன் திரைப்படத்தை அனைவரும் குடும்பத்தோடு பாருங்கள். பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்” என்று பேசினார்.

நடிகை விவியா பேசும் போது, “எல்லோருக்கும் வணக்கம். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு மிக்க நன்றி. என்னுடைய தாய்மொழி மலையாளம் என்பதால் என்னுடைய தமிழ் சிறப்பாக இருக்காது. மன்னிக்கவும். இது என் முதல் தமிழ்ப்படம் எல்லோரும் படத்திற்கு ஆதரவு தந்து இதை ஒரு ப்ளாக் பஸ்டர் ஆக்க கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.” என்று பேசினார்.

எருமை சாணி யூடியூப் புகழ் நடிகர் ஜெய்சீலன் பேசும் போது,  “இது என் திரைபயணத்தில் ஒரு முக்கியமான இலக்கு என்று சொல்லுவேன். யூடியூப் சேனல் மூலமாக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயனை சென்று அடைந்து, இன்று அவர் இயக்கிய திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இந்த மேடை மீது நின்று கொண்டிருக்கிறேன். இயக்குநரின் பெயர் சி.எஸ்.கார்த்திகேயன். அதாவது சுருக்கமாக சி.எஸ்.கே. சி.எஸ்.கேவின் ரிசல்ட் நாம் அனைவருமே அறிவோம். இயக்குநரின் ரிசல்ட்டும் அது போன்ற வெற்றியாகத் தான் இருக்கப் போகிறது. சபாநாயகன் திரைப்படத்தின் டீம் பெரிய டீம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வசன உச்சரிப்புகளில் மிகவும் கவனமாக இருப்பார். நாங்களும் சிறப்பாக மனப்பாடம் செய்துவிட்டு ஸ்பாட்டில் ஏதோ உளறிக் கொண்டு இருப்போம். டங்க் ட்விஸ்டர் போல இருக்கும். ஜாலியாக வேலை வாங்கக் கூடிய நல்ல இயக்குநர். இரண்டாவது ஷெட்யூல் சூட்டிங் செய்யும் போது காலில் அடிபட்டுவிட்டது.  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல் படப்பிடிப்புத் தளத்தில் படுத்துக் கொண்டே டைரக்ட் செய்தார். அருண் அண்ணா சொல்லியது போல் அசோக் செல்வன் சார் மிகச் சிறந்த ஐஸ் ப்ரேக்கர். நம்மிடம் இருக்கும் தயக்கங்களை அவரே புரிந்து கொண்டு அவைகளை உடைத்து எறிவார். அவர் அழும் காட்சியின் போது அவரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லி நடிக்க வேண்டும். அவரின் தலைமுடி கலைந்துவிடுமோ என்கின்ற தயக்கத்தில் பட்டும் படாமல் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லி நடித்தேன். அதை புரிந்து கொண்டவர், இந்த டேக் நன்றாக வர வேண்டும் என்றால், நீ உன் நண்பனை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்வது போல் இயல்பாக செய், முடி கலைந்தால் சரி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூறி தைரியம் கொடுத்தார். சபா என்கின்ற வார்த்தையை திருப்பிப் போட்டால் பாசம் என்று வரும், அவர் ஒரு பாச நாயகன். அவருக்கு இப்படத்தில் எல்லாமே மூணு தான், அஸிஸ்டெண்ட் மூணு பேர், ஹீரோயின் மூன்று பேர், நண்பர்கள் மூன்று பேர், நித்தம் ஒரு வானம், போர் தொழில், அதைத் தொடர்ந்து மூன்றாவது வெற்றியாக இந்த சபா நாயகன் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அசோக் செல்வன் சாரை மச்சான் மச்சான் என்று கூப்பிடுவோம். பிறகு சார் என்று சொல்லுவோம். ஆனால் படத்தில் அவரின் அக்காவாக நடித்தவரைப் பார்த்தவுடன் அவரை எப்பொழுதுமே மச்சான் என்று கூப்பிடத் துவங்கிவிட்டேன். லியோன் ஜேம்ஸ் அவர்கள் இசையில் நடித்ததும், பாலசுப்ரமனியம் சார் ஒளிப்பதிவில் நடித்ததும் மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன். செடி வளர மண் முக்கியம் தயாரிப்பாளர் அய்யப்பன் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த சபாநாயகன் என்னும் செடி வளர அரும்பாடுபட்டு இருக்கிறார்கள் என்றார்.

படத்தின் நாயகிகளில் ஒருவரான கார்த்திகா முரளிதரன் பேசும் போது, ”தமிழில் பேசுவது கடினம், அதனால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். இது தமிழில் என் முதல் படம். தமிழ் இந்த இண்டெஸ்ட்ரியில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது, மதன் சார், அய்யப்பன் சார் என என் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அசோக்செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நிறையவே சப்போர்ட்டிவ்வாக இருந்தார். எனக்கு ஆடிஷன் பாலசுப்ரமணியன் சார் கேமராவில் தான் நடந்தது. அதை நான் பெருமையாக கருதுகிறேன். பிரபு சார் என்னை மிகவும் அழகாக காட்டி இருக்கிறார். அவருக்கு நன்றி. இது ஒருவகை நாஸ்டால்ஜியா ப்லிம், எல்லாவித வயதினருக்குமான காட்சிகள் படத்தில் இருக்கும். பள்ளி கால, கல்லூரி கால, மணவாழ்க்கை கால கட்டங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.  குடும்பத்தோடு பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் இப்படத்தை ரசிக்கலாம். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என எல்லோருமே இந்தக் கதையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருக்கிறோம். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்றார்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அய்யப்பன் ஞானவேல் அவர்கள் பேசும் போது, ”இப்படத்திற்கு என்னையும் சேர்த்து மூன்று தயாரிப்பாளர்கள்.  அரவிந்தன், மேகவாணன் என இன்னும் இருவரிருக்கிறார்கள். அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் சார்பாகவும் நான் உங்களிடம் பேசுகிறேன். இது ஒரு ஜாலியான படம். மூன்று புதுமுக யூடியூபர்ஸ், அருண் ஸ்ரீராம், ஜெயசீலன், இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மூவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மூன்று கேமராமேன்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொண்டு எங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்றே சொல்லுவேன். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. அவருக்கும் எங்கள் நன்றி., பிரபு ராகவ் ஆரம்பத்தில் இப்படத்தில் பணியாற்ற மிகவும் பயந்தார். அவரின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. இயக்குநர் எங்களின் நண்பர். ஒரு விசயம் வேண்டும் என்றால் கண்டிப்பாக அது அவருக்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார். நல்ல நேர்மறையான சிந்தனைகள் எண்ணங்கள் கொண்ட இயக்குநர், அவருக்கு வாழ்த்துக்கள். இரண்டாவது செட்யூலில் கால் உடைந்த போதும் படப்பிடிப்பை எந்தவித தாமதமும் இன்றி முடித்துக் கொடுத்தார். பாலிவுட்டில் புகழ்பெற்ற பி.கே. 3 இடியட்ஸ் போன்ற படங்களின் கேமராமேன் ஆன முரளிதரனின் மகள் தான் கார்த்திகா, அவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். எடிட்டர் கணேஷ் என் நண்பர் தான்.  அயலி, விலங்கு போன்றவற்றில் சிறப்பாக எடிட்டிங் செய்து இருந்தார். இப்படத்திலும் அவரின் எடிட்டிங் பணி சிறப்பாக இருந்தது. என் நண்பரின் நண்பர். லியோன் ஜேம்ஸ் மியூசிக்கில் பட்டையை கிளப்பி இருக்கிறார். எங்களின் வெல் விஷ்சர்ஸ். முதலில் ஜேம்ஸ் அவர் தான் இந்த பிராஜெக்ட் துவங்க காரணம், அடுத்து குமார் அண்ணன் அவரும் தயாரிப்பாளர் தான், என்கரேஜ் செய்து பல ஆலோசனைகள் கொடுத்தார், அடுத்து மதன் சார் அவருக்கு நன்றி. அவர் எங்களுக்கு மெண்டார் போல செயல்பட்டு வருகிறார். அசோக் செல்வனுக்கு நன்றி, ஜாலியாக பழகக்கூடியவர். எதையும் வெளிப்படையாக பேசுவார், பந்தா இல்லாதவர், சமீபத்தில் தான் கல்யாணம் ஆகி இருக்கிறது. அதற்கும் சேர்த்து அவருக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

நாயகன் அசோக் செல்வன் பேசும்போது, ”எல்லோருக்கும் வணக்கம். எப்பொழுதுமே பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியான தருணம். என்னுடைய எல்லாப் படங்களையுமே மக்களிடம் கொண்டு சேர்த்து நான் இந்த இடத்தில் இன்று இருப்பதற்கு நீங்கள் தான் முழுமுதற்காரணம்.

சபா நாயகன் ஜாலியான க்ளீனான எண்டர்டெயினர் திரைப்படம். நடனம் மற்றும் நகைச்சுவைக்காக இப்படத்தில் நான் நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். இந்த இரண்டுமே எனக்கு இப்படத்தில் புதியதாக இருந்தது. இயக்குநர்கள் இது போன்ற புதிய வாய்ப்பை கொண்டு வரும் போது தான் என்னைப் போன்ற நடிகர்கள் அதை பயன்படுத்திக் கொள்கிறோம். நான் இவ்வளவு ஹியூமர் செய்வேனா என்று மதன் சார் என்னிடம் ஆச்சரியப்பட்டார். முன்பே எனக்கு நக்கலைட்ஸ் சேனல் மிகவும் பிடிக்கும். ஸ்ரீராம் ஜெய்சீலன், அருண் போன்றோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் அவர்களிடம் பல ரசிக ரசிகைகள் மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். அப்பொழுது தான் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களின் வீடியோக்களை அதிகமாக பார்த்தேன். அவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஜெய்சீலனை ஜூனியர் சிவகார்த்திகேயன் என்றே சொல்லுவேன். தயாரிப்பாளர் அய்யப்பனை எனக்கு மிகவும் பிடிக்கும். லியோன் ஓ மை கடவுளே படத்தில் மிகச்சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார். இப்படத்திலும் கேட்டதும் பிடிக்கும்படியான பாடல்கள் உள்ளன. பாலசுப்ரமனியம் சார், தினேஷ், பிரபு ராகவ் அனைவருக்கும் நன்றி. மதன் சார் ஆபிஸில் பலமுறை காத்து இருந்திருக்கிறேன். இன்று அவர் வழிநடத்தி செல்லும் தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிப்பது பெருமையாக இருக்கிறது. மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடித்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும் சார். என் மனைவி கீர்த்தி அந்த மாதிரி எதுவும் தவறாக நினைக்க மாட்டார். முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள் நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது. அவைகளை கிளறிவிடும் திரைப்படமாக சபாநாயகன் இருக்கும். மேலும் உங்களின் மனச்சோர்வுகளுக்கும் மன அழுத்தத்திற்கும் அரும் மருந்தாக சபாநாயகன் திரைப்படம் இருப்பதோடு, ஏற்கனவே சொன்னது போல் ஒரு நாஸ்டால்ஜியா பயணம் சென்றுவந்த உணர்வைக் கொடுக்கும். பத்திரிக்கை நண்பர்கள் என் பிற படங்களுக்குக் கொடுத்த அதே ஆதரவை இப்படத்திற்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Read previous post:
0a1a
YRF pits Keerthy Suresh vs Radhika Apte in its tentpole series Akka

Leading Indian studio Yash Raj Films’ streaming production arm YRF Entertainment has greenlit its next tentpole project, an edgy revenge

Close