ரோமியோ – விமர்சனம்

நடிப்பு: விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி.கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, ஷா ரா, ரோஜு, ஷாலினி விஜயகுமார், அத்வைத், ஜெய சம்ரிதா, முரளி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: வினாயக் வைத்தியநாதன்

ஒளிப்பதிவு: ஃபாருக் ஜெ பாட்ஷா

படத்தொகுப்பு: விஜய் ஆண்டனி

இசை: பரத் தனசேகர்

தயாரிப்பு: ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மீரா விஜய் ஆண்டனி

பத்திரிகை தொடர்பு: ரேகா

கிரைம் திரில்லர், ஆக்‌ஷன் திரில்லர், ஃபேமிலி டிராமா ஆகிய ஜானர்களில் அதிகம் கவனம் செலுத்தி கதைகளைத் தேர்வு செய்து நாயகனாக நடித்து வந்த விஜய் ஆண்டனி, ஒரு சேஞ்சுக்காக, முதன்முதலாக லவ் ஜானர் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார். அவரது நடிப்பில் முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக உருவாகி வெளிவந்திருக்கும் ‘ரோமியோ’, திரைப்படப் பார்வையாளர்களை கவர்ந்துள்ளதா? பார்ப்போம்.

தென்தமிழ்நாட்டின் தென்காசியைப் பூர்விகமாகக் கொண்டவர் நாயகன் அறிவு (விஜய் ஆண்டனி). குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக இளம்வயதில் மலேசியா சென்றவர், அங்கு வேலை பார்த்து, படிப்படியாக முன்னேறி சுயதொழில் செய்து, எக்கச்சக்கமாக சம்பாதித்து, பெரும் பணக்காரராக தனது 35-வது வயதில் சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார்.

அவருக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது அப்பா பழனியப்பனும் (இளவரசு) அம்மாவும் விரும்புகிறார்கள். அவரோ, “என் மனசுக்குப் பிடிச்ச ஒரு பெண்ணை நானாகப் பார்த்து, லவ் பண்ணிதான் கல்யாணம் செய்துகொள்வேன்” என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த, 25 வயது நாயகி லீலாவுக்கு (மிருணாளினி ரவி) சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரது முரட்டு அப்பா மூர்த்தி (தலைவாசல் விஜய்) “அதெல்லாம் கூடாது” என்று தடை போடுகிறார். இதனால், சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் தனக்கு வேலை கிடைத்திருப்பதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு சென்னை வந்து, தன்னைப் போல் சினிமாவில் சாதிக்க விரும்பும் சினேகிதர்களுடன் தங்கி, கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமா ஹீரோயின் சான்ஸ் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் லீலா. சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்கிறார். ஆனால், ஹீரோயின் ரோல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தாத்தா இறந்துவிட்டதாக லீலாவுக்கு அவருடைய அப்பா மூர்த்தி தகவல் கொடுக்க, லீலா கிளம்பி சொந்த ஊருக்கு வருகிறார். இறுதி மரியாதை செலுத்துவதற்காக மரணம் நிகழ்ந்த வீட்டுக்கு வரும் நாயகன் அறிவு, அங்கு லீலாவைப் பார்க்கிறார். பார்த்ததும் காதல் கொள்கிறார். அறிவு லீலாவைக் காதலிப்பதைக் கண்டுபிடித்து மகிழும் அவரது பெற்றோர், அவருக்கு லீலாவையே பேசி முடிக்க முடிவு செய்கிறார்கள்.

இதற்கிடையில், லீலா பொய் சொல்லி தங்களை ஏமாற்றிவிட்டு சென்னைக்குப் போய் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பது தெரியவர, அவரது அப்பா ஆவேசம் கொள்கிறார். ”இனி நீ சென்னை செல்ல வேண்டாம்” என்று மகளிடம் கண்டிப்புடன் கூறிவிடுகிறார். தன் ஹீரோயின் லட்சியத்தை அடைய, அப்பாவின் கட்டுப்பட்டை மீறி சென்னைக்கு எப்படிப் போவது என லீலா தடுமாறிக்கொண்டிருக்கும்போது தான், அவரை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு அறிவும் அவரது பெற்றோரும் வருகிறார்கள். அறிவை தனியே அழைத்துப் பேசும் லீலா, “திருமணம் முடிந்ததும் சென்னைக்குப் போய் செட்டில் ஆகலாம் என்றால், உங்களை கல்யாணம் பண்ண நான் தயார்” என்கிறார். இந்த நிபந்தனைக்குள் ஒளிந்திருக்கும் உள்குத்தை அறியாத அப்பாவி அறிவு, அதை ஏற்றுக்கொள்கிறார்.

திருமணத்துக்குப்பின் லீலாவை சென்னைக்கு அழைத்து வந்து செட்டிலாகும் அறிவை, தொடக்கூட விடாமல் தவிர்க்கிறார் லீலா. தன் சினிமாக் கனவை நிறைவேற்ற, அப்பாவின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி சென்னைக்கு வருவதற்காக மட்டுமே இந்த திருமணத்துக்கு லீலா சம்மதித்த சூழ்ச்சி அறிவுக்குத் தெரியவருகிறது.

லீலாவின் சூழ்ச்சி தெரிந்தபிறகும் அவரை ஒருதலையாக உருகி உருகிக் காதலிக்கிறார் அறிவு. லீலாவுக்கு தன் மீது காதல் தோன்ற அறிவு என்னவெல்லாம் செய்கிறார்? அவரை லீலா புரிந்துகொண்டாரா? மனம் மாறி காதலிக்கத் தொடங்கினாரா? லீலாவின் ஹீரோயின் இலட்சியம் என்ன ஆனது?  என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ரோமியோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் அறிவாக நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. மனைவி எவ்வளவு தான் தன்னை வெறுத்தாலும், மனைவியை ஒருதலையாகக் காதலிப்பதை நிறுத்தாத காதல் கணவன் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் எமோஷனில் மட்டுமல்ல, தங்கை மீதான பாசத்தை வெளிப்படுத்துவதிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நடனம் மற்றும் நகைச்சுவையிலும் தூள் பரத்தியிருக்கிறார்.

சினிமா ஹீரோயின் ஆக வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் நாயகி லீலாவாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கும்போதும், சோகமாக இருக்கும்போதும் மது அருந்தும் இன்றைய இளம்பெண்களின் ஒரு பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார். முகபாவனையை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் கதாபாத்திரம் இல்லை என்பதாலோ என்னவோ, ஒரே மாதிரி முகத்தை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. எனினும், தேவையான அளவு நடித்து தன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

நாயகனுக்கு காதல் ஐடியா கொடுக்கும் விக்ரமாக வரும் யோகி பாபு, நாயகனின் உறவுக்காரர் முருகனாக வரும் விடிவி கணேஷ் ஆகியோர் ஆங்காங்கே காமெடியைக் கொளுத்திப்போட்டு கலகலப்பூட்டுகிறார்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் நாயகியின் சினேகிதர்களாக வரும் ஷா ரா அண்ட் கோ, தங்கள் பங்குக்கு பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார்கள்.

தலைவாசல் விஜய், இளவரசு, ஸ்ரீஜா ரவி, சுதா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இதன் அடிப்படைக்கதை புதியது அல்ல.  புதுமனைவி வெறுப்பது, வெறுக்கும் புதுமனைவியை உருக்கமாக புதுக்கணவன் காதலிப்பது என்ற முடிச்சை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து இப்போது வரை ஏராளமாக வந்துவிட்டன. ஆனால், இந்த ‘ரோமியோ’வில் புதியது என்னவென்றால், மனைவியின் ஹீரோயின் ஆசையை நிறைவேற்ற ஒருவன் சினிமா தயாரிக்க முடிவு செய்கிறான் என்பதும், அதன் அடுத்தடுத்த விளைவுகளும் தான். இவற்றை சுவாரஸ்யமான காட்சிகளாகக் கோர்த்து, ரசிக்கத் தக்க விதத்தில், போரடிக்காமல் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர்.

ஃபாருக் ஜே பாட்ஷாவின் ஒளிப்பதிவும், பரத் தனசேகரின் இசையும் இயக்குநரின் கதை சொல்லலுக்கு பக்கபலமாக இருந்துள்ளன.

‘ரோமியோ’ – பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம்! ஜாலியாக பார்த்து ரசிக்கலாம்!