டியர் – விமர்சனம்

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், நந்தினி, தலைவாசல் விஜய், ரோகிணி, இளவரசு, கீதா கைலாசம், ஜே.கமலேஷ், அப்துல் லீ, மகாலட்சுமி சுதர்சன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஆனந்த் ரவிச்சந்திரன்

ஒளிப்பதிவு: ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி

படத்தொகுப்பு: ருக்கேஷ்

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

தயாரிப்பு: நட்மெக் புரொடக்‌ஷன்ஸ்

தயாரிப்பாளர்கள்: வருண் த்ரிபுரனெனி, அபிஷேக் ராமிஷெட்டி, ஜி.பிருத்விராஜ்

வெளியீடு: ரோமியோ பிக்சர்ஸ்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

“அன்பே” என்ற அழகான தமிழ்ச்சொல்லை ஆங்கிலத்தில் “Dear” என மொழிபெயர்க்கிறோம். இந்தப் பொருளிலா இந்த திரைப்படத்துக்கு இத்தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது என கேட்டால், இல்லை என்கிறது படக்குழு. இக்கதையில் நாயகி கதாபாத்திரத்தின் பெயர் Deepika (தீபிகா). நாயகன் கதாபாத்திரத்தின் பெயர் Arjun (அர்ஜுன்). இவ்விரு பெயர்களின் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்களைப் பெயர்த்தெடுத்து, இணைத்து, “DeAr” என பெயர் சூட்டியிருக்கிறோம் என்கிறார்கள் அவர்கள். “யாருடா அவன்? மூக்கு விடைப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்கச் சொல்லும்னு கலாய்க்கிறது? பிச்சுப்பிடுவேன், பிச்சி!”

சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘குட்நைட்’ திரைப்படத்தைப் போல, இந்த திரைப்படத்திலும், நாம் வீடுகள்தோறும் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் மிரட்டலான முரட்டுக் குறட்டை தான் அடிப்படை பிரச்சனை. ஆனால், ’குட்நைட்’ படத்தில் கணவன் குறட்டை விடுவான், மனைவி அவதிப்படுவாள்; ‘டியர்’ படத்தில் மனைவி குறட்டை விடுகிறாள், கணவன் அவதிப்படுகிறான். இந்த முக்கியமான வேறுபாடும், முற்றிலும் வித்தியாசமான ட்ரீட்மெண்ட்டும் சேர்ந்து இப்படத்தை சுவாரஸ்யமாக்கி, பார்வையாளர்களை சீட்டோடு கட்டிப்போட்டு, ரசிக்க வைக்கிறது.

அம்மா லட்சுமி (ரோகிணி), அண்ணன் சரவணன் (காளி வெங்கட்), அண்ணி கல்பனா (நந்தினி) சகிதம் சென்னையில் வசித்துவரும் நாயகன் அர்ஜுன் (ஜி.வி.பிரகாஷ்குமார்), தொலைக்காட்சியில் நியூஸ் ஆங்கராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். செய்தி வாசிப்பாளர் என்ற நிலையிலிருந்து உயர்ந்து, செய்தியாளராகி, பிரபலங்களை பேட்டி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி, புகழடைந்து, அந்த துறையில் மிகப் பெரிய சாதனையாளராக ஜொலிக்க வேண்டும் என்பது அர்ஜுனின் லட்சியம். அவர் தூங்கும்போது, பக்கத்தில் காபியை உறிஞ்சுவது போன்ற சின்ன சத்தம் கேட்டாலே தூக்கம் கலைந்து எழுந்து டென்ஷனாகிவிடுவது அவரின் இயல்பு; அல்லது பலவீனம்.

அப்பா ரங்கராஜ் (இளவரசு), அம்மா வசந்தி (கீதா கைலாசம்) ஆகியோருடன் குளுகுளு குன்னூரில் வசித்து வருகிறார் நாயகி தீபிகா (ஐஸ்வர்யா ராஜேஷ்). அவரை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகள் எல்லாம், வந்த வேகத்தில் பின்னங்கால் பிடரியில் பட ’தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று ஓடிவிடுகிறார்கள். காரணம், அவர்களிடம் “ நான் தூங்கும்போது பெரிசா குறட்டை விடுவேன்” என்ற உண்மையை தீபிகா உடைத்துச் சொல்லிவிடுவது தான். இதனால் தங்கள் மகளுக்கு கல்யாணம் கூடிவரவில்லையே என்ற கவலை தீபிகாவின் பெற்றோருக்கு.

இந்நிலையில், அர்ஜுன் தன் குடும்பத்தாருடன் தீபிகாவைப் பெண் பார்க்க வருகிறார். வந்த இடத்தில், அர்ஜுனின் அம்மா லட்சுமியும், தீபிகாவின் அம்மா வசந்தியும், முன்னொரு காலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதை நினைவு கூர்ந்து பாசமாய் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். வழக்கம் போல் தீபிகா தன் குறட்டைக் குறைபாட்டை முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும் என்பதற்காக “ஒரு நிமிசம் உங்ககூட பேசணும்” என்று அர்ஜுனை தனியே அழைத்துச் செல்கிறார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது தெரிந்து பதறும் தீபிகாவின் அம்மா வசந்தி, மகளை தனியே அழைத்து, “அர்ஜுனிடம் குறட்டை விஷயத்தை சொல்லாதே. நான் அவரோட அம்மாகிட்ட பக்குவமா சொல்லிக்கிறேன். அவ என் ஃபிரண்டு. நல்லவ. புரிஞ்சுக்குவா” என்று கெஞ்சி, குறுக்கே கட்டையைப் போட்டு தடுத்துவிடுகிறார்.

திருமணம் முடிகிறது. முதலிரவன்று தீபிகாவின் குறட்டைப் பிரச்சனை தெரியவர, அர்ஜுன் அதிர்ச்சி அடைகிறார். டென்ஷன் ஆகிறார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. பின்னர், ’அர்ஜுன் ஒரு இரவு தூங்குவது, தீபிகா விழித்திருப்பது; அடுத்த இரவு தீபிகா தூங்குவது, அர்ஜுன் விழித்திருப்பது’ என ஷிஃப்ட் முறையில் தூங்க உடன்பாடு செய்து சமரசமாகிறார்கள். என்றாலும், முறையான தூக்கமின்மை அர்ஜுனின் அலுவல்களை சீர்குலைக்கிறது. பணி நேரத்தில் தூக்கத்தில் ஆழ்ந்துவிட, ஒன்றிய நிதியமைச்சரை பேட்டி எடுக்கும் நல்ல வாய்ப்பை இழப்பதோடு, வசைக்கும், கேலிக்கும் ஆளாகி அவமானப்பட நேரிடுகிறது.

தீபிகாவைப் பிரிந்தால்தான் தன் வாழ்க்கை லட்சியத்தை அடைய முடியும் என்ற முடிவுக்கு வரும் அர்ஜுன் “டைவர்ஸ்” என்கிறார். “வேண்டாம் டைவர்ஸ்” என்கிறார் தீபிகா. அர்ஜுனின் மொத்தக் குடும்பமும் தீபிகாவுக்கு ஆதரவாக அணி வகுக்கிறது. இதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? இறுதியில் அர்ஜுன் – தீபிகா தாம்பத்ய வாழ்க்கை என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு குடும்ப சென்டிமெண்ட் கலந்து எமோஷனலாக விடை அளிக்கிறது ‘டியர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் நாயகன் அர்ஜுனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்திருக்கிறார். அமைதியான தூக்கத்தை விரும்புகிறவர்களை தன் கதாபாத்திரம் மூலம் பிரதிபலித்திருக்கிறார். தன் இயல்புக்கு நேர்மாறாக முரட்டு குறட்டை விடும் மனைவி அமைந்துவிட, இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவிப்பதை தனது யதார்த்தமான நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தன் குடும்பம் மொத்தமும் தனக்கு எதிராக, தன் மனைவிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் நடந்து வருவதைப் பார்த்து கையறு நிலையில் கலங்கி நிற்கும் காட்சியில் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார். நுணுக்கமான உணர்வுகளைக்கூட நேர்த்தியாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார். கீப் இட் அப்!

நாயகி தீபிகாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவர் ஸ்கோர் செய்வதற்கு ஏற்ற கதாபாத்திரம். வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். தனது குறட்டைக் குறைபாடு கணவருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக முதலிரவு முழுக்கத் தூங்காமல் இருக்க முயலுவது, குழந்தை வேண்டாம் என்று கருவைக் கலைக்க முடிவு செய்து, அதற்கான காரணங்களை அழுகையுடனும் வெறுப்புடனும் கணவரிடம் கொட்டித் தீர்ப்பது, தான் வேண்டுமென்றே செய்யாத, அதே நேரத்தில் தன்னால் நிறுத்தவே முடியாத குறட்டைக் குறைபாட்டை கணவருக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் குற்றவுணர்வில் புளுங்கித் தவிப்பது என ஒவ்வொரு எமோஷனையும் வெளிப்படுத்துவதில் தானொரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பாராட்டுகள்.

நாயகனின் அண்ணன் சரவணனாக காளி வெங்கட் நடித்திருக்கிறார். அப்பா இல்லாத குடும்பத்தைத் தூக்கி நிறுத்தும் பொறுப்புணர்வும், மேலாதிக்க உணர்வும் நிறைந்த கறாரான மூத்த மகன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். அவரது மனைவி கல்பனாவாக நந்தினி நடித்திருக்கிறார். ஒருபக்கம் அடக்க ஒடுக்கமான மனைவி + மருமகளாகவும், மறுபக்கம் புனைவுத் திறனுடன் சிறுகதைகள் எழுதும் படைப்பாளியாகவும் முரண்பட்ட இரு குணாதியசங்களை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்.

வழக்கமாக ஜம்பம் அடிக்கும் மாமியார் போல் இல்லாமல், மருமகள்களை அன்பாய் அரவணைத்துக்கொள்ளும் முதிர்ந்த அறிவும், அனுபவமும் உள்ள மாமியாராக லட்சுமி கதாபாத்திரத்தில் ரசிக்கும்படி நடித்திருக்கிறார் ரோகிணி. அவரை, குடும்பத்தை, ஊரை விட்டு பல ஆண்டுகளுக்குமுன் ஓடிப்போன அவரது கணவர் சண்முகமாக தலைவாசல் விஜய் சிறிது நேரமே வந்தாலும், தன் கதாபாத்திரத்துக்கு தேவையான நியாயம் செய்திருக்கிறார்.

 நாயகி தீபிகாவின் முற்போக்கான அப்பா ரங்கராஜாக வரும் இளவரசு, அவரது மனைவியாகவும், எப்படியாவது மகளுக்கொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்து அதை காப்பாற்ற வேண்டும் என்று தவிக்கும் அம்மாவாகவும் வசந்தி கதாபாத்திரத்தில் வரும் கீதா கைலாசம் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 நாயகனின் நண்பராகவும், இருமுறை விவாகரத்து செய்த அனுபவஸ்தராகவும் பாண்டா என்ற கதாபாத்திரத்தில் வரும் அப்துல் லீ சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

முரட்டுக்குறட்டை தான் கதையின் – தம்பதியின் – அடிப்படை பிரச்சனை என்பது தெரிந்தவுடன் இதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை அனைவருமே யூகித்துவிட முடியும். என்றாலும் இந்த முதலுக்கும் முடிவுக்கும் இடையிலான நீண்ட நேரத்தை, தூரத்தை சுவாரஸ்யமான காட்சிகளாலும், ரசிக்கத் தக்க நடிப்பினாலும் இட்டு நிரப்பி, போரடிக்காமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். அடிப்படைப் பிரச்சனை எனும் இறுக்கமான முடிச்சை அவிழ்க்கும் உத்தியாக, நாயகி, கணவர் குடும்பத்தில் தீராமலிருக்கும் நீண்ட கால சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதாக  காட்டியிருப்பது சற்று செயற்கையாக இருந்தாலும் ஆரோக்கியமான சிந்தனை. இதனால் கதையோட்டமும் ட்ரீட்மெண்ட்டும் புதுப்பாதையில் பயணித்து புதுவேகத்தைக் கொடுக்கின்றன.

குன்னூர், இடுக்கியின் குளுமையையும், சென்னையின் வெக்கையையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கும் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு அடிக்கோடிட்டு, பார்வையாளர்களின் மெல்லிய உணர்வுகளை மீட்டும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, அள்ள வேண்டியதை அள்ளி தள்ள வேண்டியதை தள்ளியிருக்கும் ருகேஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட நேர்த்தியான தொழில் நுட்பங்கள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.

‘டியர்’ – அனைத்துத் தரப்பினரும் கண்டு களிக்கலாம்!