ரெபல் – விமர்சனம்

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜு, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, வெங்கிடேஷ் வி.பி,  ஷாலு ரஹீம், சுப்பிரமணிய சிவா மற்றும் பலர்

இயக்கம்: நிகேஷ் ஆர்.எஸ்

ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன்

படத்தொகுப்பு: வெற்றி கிருஷ்ணன்

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

தயாரிப்பு: ’ஸ்டூடியோ கிரீன் ஃபிலிம் (பி) லிட்’ கே.இ.ஞானவேல்

வெளியீடு: ’சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

பழைய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படம் எடுத்தால், அந்த பழைய சம்பவங்களுக்கும் இன்றைய நிகழ்வுகளுக்கும் ஏதோ ஒரு வகை பொருத்தப்பாடு இருக்க வேண்டும். அப்போது தான் அந்த திரைப்படம் அர்த்தம் உள்ளதாக கருதப்படும். அப்படி எந்த பொருத்தப்பாடும் இல்லையென்றால், அந்த திரைப்படம் அவசியம் அற்றதாக, ஆறிய புண்ணைக் கிளறிவிடும் உள்நோக்கம் கொண்டதாக விமர்சிக்கப்படும். 1980களில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த ‘ரெபல்’ திரைப்படம் அர்த்தம் உள்ளதா? அவசியம் அற்றதா? பார்ப்போம்…

0a1m

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மூணாரில், 1980-ல் கதை தொடங்குகிறது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். ரத்தம் குடிக்கும் அட்டைகளிடம் கடிபடுகிறார்கள். வறுமையில் உழல்கிறார்கள். தங்களைப் போல தங்கள் பிள்ளைகள் இந்த தேயிலைத் தோட்டங்களில் அடிமைகள் போல் கஷ்ட ஜீவனம் செய்யக் கூடாது; நன்றாக படித்து, நல்ல வேலைக்குப் போய், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஏங்குகிறார்கள். இதற்காக, மேற்படிப்புக்காக தங்கள் பிள்ளைகளை பாலக்காடு சித்தூரில் உள்ள அரசினர் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். இவ்விதம் கதிர் (ஜி.வி.பிரகாஷ்), செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்) உள்ளிட்ட சில தமிழ் மாணவர்கள் சித்தூர் அரசினர் கல்லூரியில் சேருகிறார்கள்.

இங்குள்ள ஹாஸ்டலில், மலையாள மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் தமிழ் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. மேலும், கேரள மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு முக்கியக் கட்சிகளின் மாணவர் சங்கங்களான ’கேஎஸ்கியூ’, ‘எஸ்எஃப்ஒய்’ ஆகியவை ஒருபுறம் தங்களுக்குள் மோதிக்கொண்டும், மறுபுறம் கல்லூரியை அடக்கி ஆண்டுகொண்டும் இருக்கின்றன. அதிலும், பதவியிலிருக்கும் ‘கேஎஸ்கியூ’ மாணவர் சங்க நிர்வாகிகள் தமிழ் மாணவர்களை அடிமைகளைப்  போல் நடத்துகிறார்கள். மொழி மற்றும் சாதி அடிப்படையில் இழிவுபடுத்துகிறார்கள். ஆபாசமாக, அருவருப்பாக ராக்கிங் செய்து அவமானப்படுத்துகிறார்கள்.

படிப்பு முக்கியம் என்று கருதும் தமிழ் மாணவர்கள் இக்கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குமேல் சகிக்க முடியாது என்ற கட்டத்தில் பொங்கியெழும் கதிர், சக தமிழ் மாணவர்களைத் திரட்டி, தமிழ் மாணவர் சங்கத்தைத் தொடங்கி, ஆதிக்கத்துக்கும், அக்கிரமத்துக்கும் எதிராக கிளர்ச்சியில் குதிக்கிறார். அவரது கிளர்ச்சி என்னென்ன வடிவங்கள் எடுக்கிறது? இறுதியில் வெற்றி பெற்றதா? மலையாள மாணவர் சங்கங்களின் கொட்டம் அடங்கியதா? தமிழ் மாணவர்களின் அவலத்துக்கு நிரந்தர தீர்வு கிடைத்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ரெபல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் கதிராக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார். நிஜ வாழ்க்கையில் தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாடு ஆகியவற்றின் மீது மிகுந்த பற்றுக் கொண்டுள்ள அவர், இந்த படத்தில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்ததில் வியப்பு இல்லை. மட்டுமல்ல, தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக அவர் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி, தன் கதாபாத்திரத்துக்கு முழுமையாக நியாயம் செய்திருக்கிறார்.

’எஸ்எஃப்ஒய்’’ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மலையாள மாணவி சாராவாக நடித்திருக்கிறார் மமிதா பைஜு. அவரை ‘பிரேமலு’ படத்தில் பார்த்து ரசித்து கொண்டாடிய ரசிகர்கள், இந்த படத்தில் பெரிய பங்களிப்பை எதிர்பார்த்தார்கள். அவர்களுக்கு ஏமாற்றமே. வழக்கமான நாயகி போல வந்தார்; நாயகனை சிறிது நேரம் காதலித்தார். பின்னர் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் போல சிறுத்து, கரைந்து காணாமல் போனார். அவருக்கு படத்தின் ஆரம்பத்தில் இருந்த முக்கியத்துவம், கதை வளர வளர இல்லாமலே போய் விடுகிறது. அவரது கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் செழுமையாகவும் சிறப்பாகவும் படைத்திருக்கலாம்.

 கல்லூரி பேராசிரியர் உதயகுமாராக, தமிழராக கருணாஸ் நடித்திருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சட்டக்கல்லூரி முதல்வராக வரும் பூராம் கதாபாத்திரத்தின் சாயலில் இவரது பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மாணவர்கள் மீது அக்கறை உள்ள இந்த குணச்சித்திர பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, அருமையாக நடித்திருக்கிறார் கருணாஸ்.

’கேஎஸ்கியூ’ மாணவர் சங்கத் தலைவர் ஆண்டனியாக வெங்கடேஷ் வி.பியும், ‘எஸ்எஃப்ஒய்’ தலைவராக ஷாலு ரஹீமும் நடித்திருக்கிறார்கள். இருவரும் போட்டி போட்டு வன்மத்தைக் கொட்டி வில்லத்தனம் காட்டி, கதையை நகர்த்த உதவியிருக்கிறார்கள்.

நாயகனின் சக தமிழ் மாணவர்கள் பாண்டி மற்றும் செல்வராஜாக வரும் கல்லூரி வினோத் மற்றும் ஆதித்யா பாஸ்கர், நாயகனின் தந்தை ராமலிங்கமாக வரும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தை போரடிக்காமல் நகர்த்திச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளார். எனினும், படம் முழுக்க ’தமிழர்’, ‘தமிழர் விடுதலை’ என குரல் கொடுத்திருக்கும் இயக்குநருக்கு, இப்படத்துக்கு தலைப்பு வைக்க ஒரு தமிழ் வார்த்தை தெரியவில்லை என்பது நகைமுரண். மேலும், எப்போதோ கேரள கல்லூரி ஒன்றில் தமிழ் மாணவர்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டது என்பதை, தமிழர்களும், மலையாளிகளும் சுமுகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் கதையாகக் கொட்டி கவிழ்க்க வேண்டிய அவசியம் என்ன? ஆக்‌ஷன் படம் எடுக்க எத்தனையோ கதைகள் இருக்க, தாயும் சேயுமாக இருக்கும் இரண்டு மொழிக்காரர்களை பகடைக்காய் ஆக்கத் தான் வேண்டுமா? எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது சென்னையின் சிற்சில இடங்களில் மலையாளிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களை பூதாகரமாக சித்தரித்து இன்று ஒரு படம் எடுத்தால், தமிழர்களாகிய நாம் தாங்கிக்கொள்வோமா? திரைப்படங்கள் மூலமாக நல்ல சிந்தனைகளை விதைக்கவும் வளர்க்கவும் பழகுங்கள், இயக்குநரே!

நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரே படத்துக்கு இசையும் அமைத்திருக்கிறார். பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கும் எமோஷனுக்கும் வலு சேர்த்துள்ளது.

ஒரு கல்லூரி வளாகத்துக்குள்ளேயே கதையின் பெரும்பகுதி நடக்கிறது; என்ற போதிலும், அது சோர்வு ஏற்படுத்தாதவாறு சாமர்த்தியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன்.

‘ரெபல்’ – ’உண்மைச் சம்பவம்’ என்கிறார்களே… அதற்காக ஒருமுறை பார்க்கலாம்!