குடியரசு தலைவர் தேர்தல்: ஆரியத்துவ தலித்தை எதிர்த்து மதச்சார்பற்ற தலித் போட்டி!

நடைபெற இருக்கும் குடியரசு தலைவர் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக. சார்பில் போட்டியிடும் ஆரியத்துவ தலித்தான ராம்நாத் கோவிந்தை எதிர்த்து, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பீகார் மாநிலத்தின் தலித் சமூகத்தவரான மீரா குமார் போட்டியிடுகிறார்.

புதுடெல்லியில் இன்று (வியாழன்) நடைபெற்ற 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், மக்களவை முன்னாள் தலைவரான மீரா குமார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன் கார்கே, சரத் பவார், லாலுபிரசாத் யாதவ், அகமத் படேல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, கனிமொழி, தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். மமதா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகிய மூவரும் இக்கூட்டத்துக்கு தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருந்தனர்.

தலித் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராமின் மகள் மீரா குமார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் இந்திய அயல்நாட்டுச் சேவையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.