’காக்கா’ என்று ரஜினி சொன்னது தன்னை விமர்சிப்பவர்களையும் வம்பிழுப்பவர்களையும் தான்!

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் ஒரு மணி நேர உரையைப் பார்த்தேன்.

அவர் அந்த உரையை நிகழ்த்தியது அது ரஜினி எதிர் விஜய் சண்டையாக முன்னிறுத்தப்பட்டு இங்கு பெரும் விவாதங்கள் நடந்தாலும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான சண்டையில் சோற்றுக்கு வழியில்லாத சோமாலியாக்காரன் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என்று அது குறித்து நான் எதுவும் கருத்து சொல்லவில்லை. ரஜினியின் உரையைப் பார்க்கும் எண்ணம் இல்லாமல் இருந்தேன். ஆனால் இன்ஸ்டா ரீலாக வந்த பதிவுகளில் நெல்சன் ரஜினி வீட்டுக்கு ஒன்லைன் சொல்ல வந்த கதையைச் சொன்ன விதம் ரகளையாக இருந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு முழு உரையும் பார்க்க விரும்பி பார்த்தேன்.

மேற்கூறிய அந்தப் பகுதி, தான் நாடகத்தில் துரியோதனனாக நடித்த கதை என சில பகுதிகள் வெகு சிறப்பாக இருந்தன. மற்றபடி படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் அளவுக்கதிகமாக புகழ்ந்திருந்தார்.

இதில் எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், இந்த உரை விஜய் ரசிகர்களை ஏன் கோபப்படுத்தியது என்பதுதான். உண்மையில் அவர் அந்த காக்கா பருந்து ஒப்பீட்டை விஜய்யை முன்வைத்தோ சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கான போட்டியை முன்வைத்தோ பேசியதாகத் தெரியவில்லை. அதற்கு சற்று முன்பு சூப்பர் ஸ்டார் என்பது குறித்துப் பேசியதால் அதனுடன் தொடர்புபடுத்திக்கொள்ளத் தேவையில்லை.

அவர் காக்கா என்று குறிப்பது தன்னை விமர்சிப்பவர்களையும் வம்பிழுப்பவர்களையும்தான் என்றுதான் நான் புரிந்துகொள்கிறேன். இதற்கு விஜய் ரசிகர்கள் கோபப்படுவதும் இதை ரஜினி விஜய் மோதலாக மாற்றுவதும் ஜெயிலர் படத்தின் வணிகத்துக்குப் பெரிதும் உதவப் போகின்றன.

ஆனால் உண்மையில் விஜய் ரசிகர்கள் ரஜினிக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் விமர்சனங்கள் எதிர்மறையாக வந்திருந்தாலும் பீஸ்ட் படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் லாபம் ஈட்டிக் கொடுத்துவிட்டதாக தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனே தன்னிடம் கூறியதாக ரஜினி தன்னுடைய திரைப்படத்துக்கான மேடையில் உறுதிபடுத்தியிருக்கிறார். அந்த வகையில் விஜய்யைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.

ஆனால் இதெல்லாம் புரிந்தால்தான் நாம் உருப்பட்டுவிடுவோமே…

GOPALAKRISHNAN SANKARANARAYANAN